CAA -வுக்கு எதிராக தீக்குளித்தாரா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்? - தொடரும் போராட்டம்

பட மூலாதாரம், Getty Images
மத்தியப்பிரதேசத்தில் 72 வயதான மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர் நேற்று (வெள்ளிக்கிழமை) தீக்குளித்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மத்தியப்பிரதேச மாநிலம், இந்தூர் நகரில் நேற்று (வெள்ளிக்கிழமை) 72 வயதான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர் தன்னைத்தானே எரித்துக்கொள்ள முயற்சி செய்ததாகவும், அவர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் சம்பவம் நடந்த டுகோகஞ்ச் பகுதியின் காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீநிவாஸ் தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
"அவர் தற்போது வாக்குமூலம் தரும் நிலையில் இல்லை. எனினும், இதுதொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகிறோம்" என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்களில் இவர் தொடர்ந்து பங்கெடுத்து வந்ததாக சிபிஎம் கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாகவும், மேலும் இவரது பையில் இருந்து குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான துண்டு பிரசுரங்களை கண்டெடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளதாகவும் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
"சிஏஏ-வுக்கு எதிராக விரைவில் தெலங்கானாவில் தீர்மானம்"

பட மூலாதாரம், Facebook
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தெலங்கானா மாநில சட்டப்பேரவையில் விரைவில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற உள்ளதாக அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.
"நாங்கள் ஒரு மதச்சார்பற்ற கட்சி என்பதால், குடியுரிமை திருத்த திட்டத்தை எதிர்க்கிறோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கேரளா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
குடியுரிமை திருத்த சட்டம்: தமிழகத்தில் எதிர்த்தும், ஆதரவாகவும் பேரணி

பட மூலாதாரம், Eshwaran
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் இன்று (சனிக்கிழமை) திருச்சியில் பேரணி நடைபெற்றது.
திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் தொடங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணி நடைபெற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பொதுச் செயலாளர் இ. முகமது, நிர்வாகிகள் குலாம், உசேன், ரபீக் உள்ளிட்ட 3,000 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த பேரணியில் பங்கேற்றனர்.
தேசியக் கொடியை ஏந்திய பெண்கள், காந்தி, நேதாஜி, நேரு, திப்புசுல்தான், பகத்சிங் வேடமிட்ட குழந்தைகள் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

பட மூலாதாரம், Twitter
தொடங்கிய பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், குடியுரிமை சட்டம் குறித்த பிரசுரங்களை வீடுவீடாகச் சென்று விநியோகம் செய்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழக பாஜக மாநில தலைவருக்கான தேர்தல் ஒருவாரம் அல்லது பத்து நாட்களுக்குள் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
அதே சமயத்தில் இன்று, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக சென்னையில் பாஜகவினர் பிரசாரம் செய்தனர்.
திநகர் ராமகிருஷ்ணா பள்ளி பகுதியில் இருந்து குடியுரிமைச் சட்டத்திற்கு ஆதரவான பிரசாரத்தை பாஜகவினர் முன்னெடுத்த அதேநேரத்தில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு தவுஹீத் ஜமாஅத் அமைப்பினர், குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெறவேண்டும் என போராட்டம் நடத்தினர்.
அதேபோல, தேசிய மக்கள் தொகை பதிவேட்டை தமிழக அரசு புறக்கணிக்கவேண்டும் என்றும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும் திருவாரூர், தஞ்சாவூரில் இஸ்லாமிய அமைப்பினர் பேரணி நடத்தினர்.
குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தலைமையில், முன்னாள் நிதி மற்றும் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் பங்கேற்ற பொதுக்கூட்டம் இன்று கோவையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய கே.எஸ்.அழகிரி, "பாஜக ஆட்சியில் பல்வேறு துறைகளும் சரிவை சந்தித்துள்ளன. குறிப்பாக தமிழகத்தில் விவசாயத்தை அடுத்து கட்டுமான தொழில் உள்ளது. இதில் ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர். ஆனால் இன்றைக்கு கட்டுமானங்களே கிடையாது. காரணம் மணல் கிடைப்பதில்லை, அரசாங்கமே மணலை கொள்ளை அடிக்கிறது. அதேநேரத்தில் சிமெண்ட் விலை குறையவில்லை, இதற்கு காரணம் யாராலும் சொல்ல முடியவில்லை. சிமெண்ட் விலை உயர்வுக்கு காரணம் அதன் உற்பத்தியாளர்கள் அனைவரும் குழுவாக இணைந்து விலையை குறைக்க மறுக்கின்றனர், அதற்கு துணையாக அரசும் நிற்கிறது. தமிழகத்தில் மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பதற்காக எடப்பாடி அரசாங்கம் எல்லா வேலைகளையும் செய்கிறது. இவர்களுக்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய திறமையும் பெருமையும் நமக்கு உண்டு. காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை மக்களை ஒன்றுபடுத்தி இந்திய சுதந்திரத்தை அவர் பெற்றுத் தந்தார். அதேபோல தமிழகத்தில் ஆட்சியை மாற்றுவதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும்' என பேசினார்.
5 தலைவர்களை தேர்வு செய்து அவர்களுடன் பிரதமர் மோதி விவாதிக்க தயாரா?
அடுத்து பேசிய ப.சிதம்பரம், 'மோதி தலைமையிலான ஆட்சியில் தொழில், விவசாயம், பொருளாதாரம் என எதுவுமே வளர்ச்சி அடையவில்லை. இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் தாக்கம் சுனாமி ஏற்படுத்திய இழப்பை விட அதிகம். இதனைத்தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி வரி விதிப்பு சிறு குறு தொழில்களைப் பெருமளவு பாதித்தது. ஜி.எஸ்.டி வரியில் பிழை இல்லை. ஆனால், அதை விதித்தவர்களிடம்தான் பிழை இருக்கின்றது. கோவை உட்பட நாடு முழுவதும் சிறு, குறு தொழில்கள் மூட காரணம் ஜி.எஸ்.டி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தான். மத்திய ஆட்சியின் அவலங்களை எதிர்க்க வேண்டியது தான் எதிர்க்கட்சியின் முக்கிய கடமை. அந்த கடமையை சரியாக செய்யாததன் காரணமாக தான் மோதி மீண்டும் ஆட்சிக்கு வந்து விட்டார். 2018 -19 ஆண்டிலேயே நாட்டின் பொருளாதாரம் சரிய துவங்கி விட்டது. பா.ஜ.க பெரும்பான்மையோடு ஆட்சிக்கு வந்தவுடன் முத்தலாக், தேசிய குடியுரிமை பதிவேடு, காஷ்மீர் விவகாரம், குடியுரிமை திருத்த சட்டம் போன்றவற்றை அடுத்தடுத்து அமல்படுத்தி வருகின்றது. இந்த சூழலில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடும் இளைஞர்களை நான் தலைவணங்குகின்றேன். டெல்லி, கொல்கத்தா உட்பட வடமாநிலங்களில் இந்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டம் குறித்து கேட்ட கேள்விக்கு பா.ஜ.க அரசு பதில் சொல்லவில்லை. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடும் ஏதாவது 5 தலைவர்களை தேர்வு செய்து அவர்களுடன் பிரதமர் மோதி விவாதிக்க தயாரா? நாட்டில் 45 ஆண்டுகளில் இல்லாத பாதிப்பு இப்போது ஏற்பட்டுள்ளது. 3 கோடி பேர் வேலை இழந்துள்ளனர், மென்பொருள் துறையில் மட்டும் 15 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். வெறும் 4.8 சதவீத வளர்ச்சி மட்டும்தான் ஏற்பட்டு இருக்கின்றது.
கோவையில், 5000 வீடுகள் கட்டப்பட்டு விற்கப்படாமல் இருக்கின்றது. 7 நாட்களும் வேலைக்கு சென்ற வடமாநில தொழிலாளர்கள் இப்போது வேலையில்லாமல் இருக்கின்றனர். நெசவு தொழில் நசிந்து கிடக்கின்றது.இவற்றை சரிசெய்ய, ஆளும் பா.ஜ.க ஆட்சியை ஒழிக்க அரசியல் கட்சிகள் அனைவரும் முனைப்போடு போராட வேண்டும்' என பேசினார்.
இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












