நெல்லை கண்ணன்: ஜனவரி 13 வரை நீதிமன்ற காவல்

பட மூலாதாரம், TWITTER
இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் எதிராகப் பேசிய விவகாரம் தொடர்பாக, புதன்கிழமை இரவு பெரம்பலூர் அருகே கைதுசெய்யப்பட்ட நெல்லை கண்ணனை ஜனவரி 13ஆம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பெரம்பலூர் அருகே புதன்கிழமை இரவில் கைதுசெய்யப்பட்ட நெல்லை கண்ணன், இன்று காலையில் திருநெல்வேலி மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி எஸ். பாபு முன்பாக நெல்லை கண்ணன் ஆஜர் படுத்தப்பட்டார். அவரது உடல்நலத்தைப் பரிசோதிக்க ஜாமீன் அளிக்க வேண்டுமெனக் கோரப்பட்டது.
ஆனால் அவரது உடலுக்கு அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து. அவரை ஜனவரி 13ஆம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
நெல்லை கண்ணன் மீது ஏற்கனவே குற்றவியல் சட்டம் 504, 505(1) (b), 505(2) ஆகிய மூன்று பிரிவுகளில் வழக்குபதிவு செய்திருந்த நிலையில் புதிதாக 153 A, 506 (1) ஆகிய இரண்டு பிரிவுகளின் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
நடந்தது என்ன?
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சி நடத்திய போராட்டம் ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று திருநெல்வேலியில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசிய பேச்சாளரும், எழுத்தாளருமான நெல்லை கண்ணன், அமித் ஷா மற்றும் மோதியை தரக்குறைவாக பேசும் காணொளி இணையத்தில் பகிரப்பட்டது.
மேலும் இந்தக் கூட்டத்தில் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் குறித்தும் சில கருத்துக்களையும் கூறி இருக்கிறார்.
நெல்லை கண்ணனின் இந்தப் பேச்சு, வீடியோ வடிவில் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதையடுத்து, நெல்லை கண்ணனின் இந்தப் பேச்சிற்காக அவரைக் கைதுசெய்ய வேண்டுமென தமிழக பா.ஜ.கவின் சார்பில் தமிழக காவல்துறை தலைவரிடம் திங்கட்கிழமையன்று புகார் அளிக்கப்பட்டது."தேசத்திற்கும் பிரதமருக்கும் உள்துறை அமைச்சருக்கும் எதிராக வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியதாகவும் வகுப்புவாத வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியதாகவும்" அந்தப் புகாரில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

பட மூலாதாரம், Getty Images
இந்நிலையில் நெல்லை கண்ணன் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இதற்குப் பிறகு, நெல்லை கண்ணன் வீட்டை விட்டு வெளியே செல்ல காவல்துறை அனுமதி மறுத்து வந்த நிலையில், திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார்.
அதன் பிறகு, அங்கிருந்து மதுரையில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றார் அவர்.
இந்த நிலையில், நெல்லை கண்ணனைக் கைதுசெய்ய வேண்டுமெனக் கோரி பா.ஜ.கவின் தேசியச் செயலர் எச். ராஜா, முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீநிவாசன் உள்ளிட்டவர்கள் சென்னையில் போராட்டம் நடத்த முயன்ற கைதுசெய்யப்பட்டனர்.
இந்த நிலையில், பெரம்பலூர் அருகே குரு லாட்ஜ் என்ற தனியார் விடுதியில் தங்கியிருந்த நெல்லை கண்ணனைக் அம்மாவட்ட காவல்துறையினர் அங்கு வந்தனர். தகவல் அறிந்து எஸ்டிபிஐ கட்சியினரும் பா.ஜ.கவினரும் அப்பகுதியில் குவிந்தனர்.
மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டதால், அங்கேயிருந்து நெல்லை கண்ணனை காவல்துறையினர் காரில் அழைத்துச் சென்றனர்.
இதன் பிறகு, நெல்லை கண்ணனைக் கைதுசெய்வதற்காக திருநெல்வேலியிலிருந்து வந்த காவல்துறையினரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக, அறிக்கை வெளியிட்டிருக்கும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, "பிரதமர் மோதி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை விமர்சனம் செய்து பேசியதற்காக நெல்லை கண்ணனைக் கைது செய்து இருக்கிறீர்கள். ஆனால் ராஜீவ் காந்தியை கொலை செய்து புதைத்தோம் என்று பேசிய சீமானை நீங்கள் ஏன் இன்னும் கைது செய்யவில்லை?" எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதற்கிடையில், #ReleaseNellaiKannan என்ற ஹாஷ் டாக் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யப்பட்டுவருகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












