குடியுரிமை சட்டத் திருத்தம் - தேசிய குடிமக்கள் பதிவேடு: இரண்டுக்கும் வேறுபாடு என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சச்சின் கோகோய்
- பதவி, பிபிசி மானிடிரிங்
ஜம்மு-காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்து, அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்த பின்னர், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமைத் திருத்த மசோதாவை (சிஏபி) தாக்கல் செய்து, நிறைவேற்றி தனது இரண்டாவது வெற்றியை நாடாளுமன்றத்தில் பதிவு செய்தது.
குடியரசு தலைவரின் ஒப்புதல் கையொப்பம் பெற்ற அந்த மசோதா, இப்போது சட்டமாகிவிட்டது. ஆனால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னரும், இந்தச் சட்டம் குறித்த சர்ச்சைகளும் விவாதங்களும் நிற்கவில்லை. இந்தச் சட்டத்தை எதிர்த்து நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் தொடர்கின்றன.
இந்தியாவின் வடக்கிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் பெரிதாக வெடித்தன. இதையடுத்து, அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் டெல்லியின் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் போராட்டங்கள் நடைபெற்றன.
இந்த சட்டத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. ஏன் இந்தச் சட்டம் தொடர்பாக இத்தனை சர்ச்சை? இந்த சட்டத்தின்படி, அண்டை நாடுகளிலிருந்து புகலிடம் கோரி இந்தியாவுக்கு வந்துள்ள இந்து, சமண, பெளத்த, சீக்கிய, பார்சி மற்றும் கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க முடியும்.
எது எப்படியிருந்தாலும், சட்டம் இயற்றப்படுவதற்கு முன்னர், எதிர்க்கட்சிகள் இந்த மசோதா தொடர்பாக மிகவும் வலுவான நிலைப்பாட்டை எடுத்தன. அது அரசியலமைப்பிற்கு முரணானது என்று கூறின.
குடியுரிமை திருத்தச் சட்டத்தின் அம்சங்கள் யாவை?
இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து இந்தியாவில் குடியேறியவர்கள், அதிலும் குறிப்பாக முஸ்லிம் அல்லாத குடியேறிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்கான விதிகளை தளர்த்துவதை நோக்கமாகக் கொண்டது குடியுரிமை திருத்தச் சட்டம். இந்த சட்டத்திற்கு இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியத்தில் எதிர்ப்புகள் வலுவாக எழுந்துள்ளன.

பட மூலாதாரம், Ani
தற்போது இது ஒரு சட்டமாக மாறிவிட்டது. ஆனால் இதற்கு முன்பே நரேந்திர மோதி அரசு இதை நிறைவேற்ற முயற்சித்தது. இந்த ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி மோதி அரசாங்கத்தின் முதல் பதவிக்காலத்தில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் வடகிழக்கு பிராந்தியத்தில் அதற்கு எதிர்ப்பு தொடங்கியதால், அப்போது மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தவில்லை. பிறகு அரசாங்கத்தின் முதல் பதவிக்காலம் நிறைவடைந்தவுடன், மசோதாவும் காலாவதியாகிவிட்டது.
நரேந்திர மோதி அரசாங்கத்தின் இரண்டாவது பதவிக்காலம் மே மாதம் தொடங்கியது. பிறகு, சட்டப்பிரிவு 370 உள்பட பல பெரிய முடிவுகள் எடுக்கப்பட்டன, இப்போது குடியுரிமை திருத்த மசோதாவும் சட்டமாகிவிட்டது.
நாடாளுமன்றத்தில் ஒரு மசோதாவாக அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பே இதுதொடர்பாக வடகிழக்கு இந்தியாவில் போராட்டங்கள் தொடங்கிவிட்டன.
வடகிழக்கில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு ஏன்?

பட மூலாதாரம், Getty Images
குடியுரிமை திருத்தச் சட்டம் நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, நாகாலாந்து மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் கடுமையான எதிர்ப்புகள் இருந்தன. மாணவர் போராட்டங்களின் தாக்கமானது, நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் எதிரொலிக்கிறது.
இந்த மாநிலங்களில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கடுமையான எதிர்ப்பு உள்ளது. அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து முஸ்லிம்களும் இந்துக்களும், வடகிழக்கு மாநிலங்களில் சட்டவிரோதமாக அதிக எண்ணிக்கையில் குடியேறியதாகக் கூறப்படுகிறது.
புலம்பெயர்ந்த இந்துக்கள் இந்தியாவின் குடியுரிமையைப் பெறுவதற்கும், இந்து வாக்காளர்களிடம் இருந்து வாக்குகளை பெறுவதற்காகவுமே தற்போதைய அரசாங்கம் இந்த சட்டத்தை கொண்டுவருவதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.
CAAவுக்கும் NRCக்கும் இடையிலான வித்தியாசம் என்ன?

பட மூலாதாரம், Getty Images
அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மசோதாவில் இரண்டு முக்கியமான அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. முதலாவதாக, முஸ்லிம் அல்லாத புலம்பெயர்ந்தோருக்கு இந்திய குடியுரிமையை வழங்குவது. இரண்டாவதாக, சட்டவிரோத வெளிநாட்டினரை, பெரும்பாலும் முஸ்லிம்களை அடையாளம் கண்டு திருப்பி அனுப்புதல்.
தனது அரசாங்கம் இரண்டு வெவ்வேறு குடியுரிமை தொடர்பான அம்சங்களை செயல்படுத்த இருப்பதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா நவம்பர் 20ஆம் தேதியன்று கூறினார். ஒன்று CAA. மற்றொன்று, தேசிய குடியுரிமை பதிவேடு அல்லது NRC ஆகியவற்றை நாடு முழுவதும் விரிவுபடுத்துவது என்று அமித் ஷா குறிப்பிட்டார்.
மத துன்புறுத்தல் காரணமாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து 2014 டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்பு இந்தியாவுக்கு வந்த இந்துக்கள், சீக்கியர்கள், பெளத்தர்கள், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்க குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவில் வகை செய்திருப்பதாக அமித் ஷா தெரிவித்திருந்தார்.
என்.ஆர்.சி மூலமாக 1948 ஜூலை 19-க்குப் பிறகு இந்தியாவில் நுழைந்த சட்டவிரோத குடியேறிகளை அடையாளம் கண்டு, அவர்களை நாட்டை விட்டு, வெளியேற்றும் செயல்முறை முடிவடையும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
முதலில் உச்ச நீதிமன்றம் சார்பாக அஸ்ஸாமுக்காக என்.ஆர்.சி நடைமுறைபடுத்தப்பட்டது. இதன் கீழ், ஆகஸ்ட் மாதத்தில் குடிமக்கள் தேசிய பதிவேடு வெளியிடப்பட்டது. அந்த பதிவேட்டில் சுமார் 19 லட்சம் பேர் விலக்கப்பட்டிருந்தனர். இந்த பட்டியலில் இருந்து விலக்கப்பட்டவர்கள், செல்லுபடியாகக் கூடிய சான்றிதழ்களுடன் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

பட மூலாதாரம், KUMAR SHARMA/BBC
இருப்பினும், புதிய என்.ஆர்.சி நடைமுறைப்படுத்தப்படும்போது, அஸ்ஸாம் அதில் மீண்டும் இணையும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருந்தார்.
வடகிழக்கில் பரவலான எதிர்ப்பு இருந்தபோதிலும், குடியுரிமை திருத்த மசோதாவை பாஜக முன்னெடுத்து சென்றதற்கு காரணம், முழு பிராந்தியத்திலும் கட்சிக்கு கிடைத்த தேர்தல் வெற்றியே என்றும் கூறப்படுகிறது.
இந்த மசோதாவை தனது முதல் பதவிக்காலத்தில் நிறைவேற்ற மத்திய அரசு முயன்றபோது, வடகிழக்கில் பாஜவுக்கு எதிர்ப்புகள் வலுத்தன.
ஆனால், 2019 தேர்தல் முடிவுகள் வந்தபோது, பாஜகவுக்கும் அதன் நட்பு கட்சிகளுக்கும் வடகிழக்கில் சிறப்பான ஆதரவு கிடைத்தது.
வடகிழக்கு மாநிலங்களில் போட்டியிட்ட 25 நாடாளுமன்ற தொகுதிகளில் 18 இடங்களில் பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் வென்றன.
இந்துக்களுக்கும், முஸ்லிம் அல்லாத புலம்பெயர்ந்தோருக்கும் எளிதில் குடியுரிமை வழங்குவதால் ஏராளமான இந்துக்களின் ஆதரவு கிடைக்கும் என்று பாஜக நம்புகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












