ஆழமான அவநம்பிக்கையும், அச்சமும் பொருளாதார மந்த நிலைக்கு காரணம்: மன்மோகன் சிங்

மன்மோகன் சிங்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மன்மோகன் சிங்

நாளிதழ்களில் வெளியான முக்கிய செய்திகளை உங்களுக்கு தொகுத்து வழங்குகின்றோம்.

தி ஹிண்டு- அவநம்பிக்கையே நீடித்த மந்த நிலைக்கு காரணம்- மன்மோகன்சிங்

"தி ஹிண்டு ஆங்கில நாளிதழில் இந்தியாவின் பொருளாதர நிலை குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கட்டுரை எழுதியுள்ளார்.

இந்தியாவின் பொருளாதார நிலை ஆழமான கவலையைத் தருகிறது. இதை எதிர்க்கட்சி உறுப்பினராக அல்ல, நாட்டின் குடிமகனாக, பொருளாதார மாணவனாக கூறுகிறேன். இப்போது உண்மைகளே சாட்சிகளாகியுள்ளன.

மொத்த உள்நாட்டு உற்பத்தி ஜி.டி.பி. 15 ஆண்டுகளில் இல்லாத அளவு கீழே போயுள்ளது. வேலையின்மை 45 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகமாக உள்ளது. வீட்டு நுகர்வு 4 பதிற்றாண்டுகளில் இல்லாத அளவு கீழே போயுள்ளது. வங்கி வராக் கடன் எப்போதும் இல்லாத அளவு உச்சத்தில் உள்ளது. மின்சார உற்பத்தி வளர்ச்சி 15 ஆண்டுகள் இல்லாத அளவு குறைந்துள்ளது.

இது போல கீழே போயிருப்பவற்றின், அதிகமாயிருப்பவற்றின் பட்டியல் நீள்கிறது. வருத்தம் தரும் இத்தகைய புள்ளிவிவரங்களால் பொருளாதார நிலை கவலை தருகிறது என்று கூறவில்லை. நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் மேலும் ஆழமான சிக்கலின் வெறும் வெளிப்பாடுகள் மட்டுமே இவை" என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் மன்மோகன் சிங்.

தொழில் முனைவோரிடம், வங்கியாளர்களிடம், தொழிலதிபர்களிடம் அச்சம் நிலவுவதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், மக்களுக்குள்ள அவநம்பிக்கையும், அச்சமும், நம்பிக்கையின்மையும், நீடித்த மந்த நிலைக்கு காரணமாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தினமணி - `எதிர்காலத்தில் ஓர் அதிசயம் நடக்கும்` - ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

பட மூலாதாரம், Kamal Haasan

நடிகர் கமல்ஹாசனின் 60 வருடத் திரை வாழ்க்கையைக் கொண்டாடும் விதமாக, `உங்கள் நான்` என்ற இசை நிகழ்ச்சி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

அதில் நடிகர் ரஜின்காந்த் உட்பட பல நடிகர்கள் கலந்து கொண்டனர் என்கிறது தினமணியின் செய்தி.

அப்போது பேசிய ரஜினி, "கமலுக்கும், எனக்குமான நட்பு உயிரோட்டமானது. அதை யாராலும் உடைக்க முடியாது. நாங்கள் இருவருமே எங்களின் வளர்ச்சிக்காக எங்கள் ரசிகர்களை பயன்படுத்திக் கொண்டதில்லை.

எங்கள் இருவருக்கும் வேறுபட்ட கருத்துகள் இருக்கலாம். ஆனால் அரசியலுக்கு வந்தால் எங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்ள மாட்டோம்.

மேடையில் நிறைய பேர் அரசியல் சார்ந்து பேசினார்கள். தான் தமிழ்நாட்டின் முதல்வர் ஆகமுடியும் என்று எடப்பாடி பழனிசாமி, சில ஆண்டுகளுக்கு முன் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.

அவர் முதலமைச்சர் பதவிக்கு வந்ததும், இருபது நாள்களுக்குக் கூட அந்த பதவியில் அவர் இருக்க மாட்டார் என்றும் சொன்னார்கள்.

அவர் அந்தப் பதவிக்கு வந்தது அதிசயம். நேற்று அதிசயம் நடந்தது, இன்றும் அதிசயம் நடக்கிறது, நாளையும் அதிசயம் நடக்கும்"

என்று கூறியதாக விவரிக்கிறது அச்செய்தி.

Presentational grey line

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - 1 லட்சம் மதிப்புள்ள செருப்பைக் காணவில்லை: போலீசில் புகார்

சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான 10 ஜோடி செருப்புகளை காணவில்லை என காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கிறது தி நியூ இந்தியன் எக்பிரஸ் செய்தி

தனது வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்த 50,000 மதிப்பிலான ஒரு ஷூ உட்பட 10 ஜோடி செருப்புகள் காணாமல் போயின என அந்நபர் காவல்துறையிடம் புகார் தெரிவித்திருக்கிறார்.

தான் வீட்டிற்குள் சென்றபோது அந்த செருப்புகள் இருந்தது எனவும், ஒரு மணி நேரத்திற்கு பிறகு வெளியே வந்தபோது அவற்றைக் காணவில்லை என்றும் அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளதாகக் கூறுகிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி.

Presentational grey line

தி ஹிண்டு - வீட்டு நுகர்வு செலவு கணக்கெடுப்பு வெளியிடாமல் நிறுத்திவைப்பு

வாடிக்கையாளர்

பட மூலாதாரம், Getty Images

வீட்டு நுகர்வு செலவு கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முதல்முறையாக 2017-18ஆம் ஆண்டு குறைந்துள்ளதால் அரசாங்கம் அது குறித்த கணக்கெடுப்பை வெளியிடவில்லை என ஊடகங்கள் தெரிவிக்கின்றன என்று த ஹிண்டு நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

வீட்டு நுகர்வு செலவு கணக்கெடுப்பில் சில தகவல்களின் தரத்தில் பிரச்சனை இருப்பதால் அமைச்சகம் அதன் முடிவுகளை வெளியிடப்போவதில்லை என அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், "2021 -22ஆம் ஆண்டுக்கான கணக்கெடுப்புகள், கணக்கெடுப்பு முறையில் தகவல் சேகரிப்பது சீர் செய்யப்பட்டப்பின் மேற்கொள்ளப்படும்," என்று புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மாதிரி ஆய்வால் எடுக்கப்பட்ட வீட்டு நுகர்வு கணக்கெடுப்பு என ஊடகங்களில் வெளியான அறிக்கை, பாதகமான கண்டுபிடிப்புகளால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்திருந்தது என மேலும் விவரிக்கிறது அச்செய்தி.

Presentational grey line

தினகரன் - `பார்க்கிங்கில் காணாமல் போகும் கார்களுக்கு ஓட்டல்களே பொறுப்பு`

கார்கள் (சித்தரிப்புப்படம்)

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப்படம்

ஓட்டல்களில் பார்க்கிங்கில் வாகனம் திருடு போனால், அந்த ஓட்டல் நிர்வாகமே அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது என்கிறது தினகரன் நாளிதழ் செய்தி.

டெல்லியில் உள்ள தாஜ் மகால் ஓட்டலின் பார்க்கிங் எனப்படும் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த மாருதி சென் கார் கடந்த 1998ஆம் ஆண்டு காணாமல் போனது. இதையடுத்து வாகனத்தின் உரிமையாளர் ஓட்டல் நிர்வாகத்திடம் கேட்டபோது பதில் கூறாததால், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில், ஓட்டலுக்கு வரும் கார்களுக்கு பார்க்கிங் ரசீது வழங்கி தங்களது கட்டுப்பாட்டு, பாதுகாப்பில் வைத்திருக்கும் நிர்வாகத்தினர் அவற்றை உரிமையாளர் கொடுத்த அதே நிலையில் திருப்பி ஒப்படைக்க வேண்டும். ஓட்டல்களில் அறை வாடகை, உணவு, நுழைவுக் கட்டணம் என்ற பெயரில் அதிக தொகையை வசூலித்துவிட்டு பார்க்கிங் இலவசம் என்று கூறுவது அபத்தமானது என நீதிபதிகள் அமர்வு குறிப்பிட்டுள்ளது என மேலும் விவரிக்கிறது அச்செய்தி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :