பரமக்குடி அருகே பழமையான உறைகிணறு; தொல்லியல் துறை ஆய்வு நடத்த கோரிக்கை

பரமக்குடி
    • எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மண்ணில் புதைந்த நிலையில் பானைகள், எலும்புகள், ஓடுகள், சுடுமண் உறை கிணறு ஆகியவை கிடைத்துள்ளதால், அங்கு தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டுமென உள்ளூர் மக்கள் கோருகின்றனர்.

பரமக்குடி அருகே வைகை நதியை ஒட்டி பாம்புவிழுந்தான் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கே உள்ள ராக்கப்பெருமாள் கோவில் பணிக்காக மண் அள்ளியபோது சுடுமண்ணால் ஆன உறை கிணறு ஒன்று தென்பட்டது.

இதே கிராமத்தில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு வேலைப்பாடுகள் மிக்க மண்பாண்டங்கள், மண் ஓடுகள், மண்பாண்ட பொருள்கள், சிதைவடைந்த நிலையில் பழங்கால மக்களின் எலும்புகள் ஆகியன கிடைத்ததாக உள்ளூர் மக்கள் பிபிசியிடம் கூறினர்.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய தொல்லியல் ஆர்வலர் சரவணன், "இப்பகுதிகளில் அழகிய வேலைபாடுகள் கொண்ட மண் பாண்டங்கள், உலோக தொழிற்சாலைகள் அமைந்திருந்ததற்கான சான்றாக உலோக கழிவுகள், மனித எலும்புகள் போன்ற பொருட்கள் அதிக அளவில் கிடைத்து வருகின்றன. அண்மையில் கீழடியில் நடத்தப்பட்ட ஆய்வின்போது கிடைத்த பொருள்களைப் போன்றே பாம்புவிழுந்தான் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களும் உள்ளன" எனத் தெரிவித்தார்.

பரமக்குடி

இது குறித்து உள்ளுர் கிராமவாசி இளங்கோ பிபிசி தமிழிடம் பேசுகையில், "தமிழக அரசும் தொல்லியல் துறையினரும் இப்பகுதியில் முறையான ஆய்வுகளை நடத்த முன்வர வேண்டும். அதன் மூலம் இப்பகுதி மக்களின் பழைமையான வாழ்க்கை வரலாற்றை விரிவாக அறிந்து கொள்ள முடியும்" என்கிறார்.

ராமநாதபுரத்தில் உள்ள பெரிய பட்டினம், அழகன்குளம், தொண்டி ஆகிய பகுதிகளில் மாநிலத் தொல்லியல் துறை ஏற்கனவே ஆய்வுகளை நடத்தியுள்ளது.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் நிறுவனர் ராஜகுரு, "மாநில அரசு நடத்திய ஆய்வுகளின்போது அழகன்குளம் மிக பழமையான துறைமுகமாக இருந்தது தெரியவந்தது. அதே போல் நாங்கள் நடத்திய கள ஆய்வில் சாயல்குடி அருகே இரும்பு தொழிற்சாலை இருந்ததற்கான தடயங்களும் உத்திரகோசமங்கை, சத்திரக்குடி,தேவிபட்டிணம் பகுதிகளில் சங்க கால தடயங்களும் கிடைத்தன. இந்த மாவட்டம் முழுவதுமே பல தொல்லியல் பொருட்கள் கிடைத்து வருகின்றன. இங்கு மாநில தொல்லியல் துறை அகழாய்வு நடத்த வேண்டும்" என்று கூறினார்.

பரமக்குடி

கீழடியில் 5ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் முடிந்து 6ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளுக்கு தயாராகி வருகிறோம். இதனால் இந்த உறைகிணற்றை நேரில் சென்று தொல்லியல்துறை சார்பில் பார்க்க முடியவில்லையென ராமநாதபுரம் தொல்லியல்துறை பொறுப்பாளர் ஆசைத்தம்பி தெரிவித்தார்.

"கீழடியை முழுமையாக அகழாய்வு செய்த பின்பு பாம்புவிழுந்தான் கிராமத்தை ஒட்டியுள்ள வைகை கரை பகுதிகளில் தமிழக அரசின் அனுமதி பெற்று அகழ்வாராய்ச்சி நடத்த வாய்ப்புள்ளது" என பிபிசி தமிழிடம் கூறினார் ஆசைத்தம்பி.

மதுரை நகருக்கு அருகில் உள்ள கீழடியில் மாநிலத் தொல்லியல் துறை நடத்திய 4ஆம் கட்ட அகழாய்வின் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இது மாநிலம் முழுவதுமே தொல்லியல் அகழாய்வு தொடர்பான ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பரமக்குடி

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :