ஒன்றரை வயதில் கடத்தப்பட்ட குழந்தை 20 வருடங்கள் கழித்து பெற்றோருடன் இணைந்த நெகிழ்ச்சி தருணம்

பெற்றோருடன் அவினாஷ்

பட மூலாதாரம், Mohanavadivelan

படக்குறிப்பு, பெற்றோருடன் அவினாஷ்
    • எழுதியவர், கிருத்திகா கண்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்

"என் மனைவி தண்ணீர் பிடிக்க நின்றிருந்தபோது, ஒரு நிமிடத்தில் சுபாஷை துணியைப்போட்டு மூடி தூக்கிச் சென்றுவிட்டான் அந்த மனிதன்" என்று 1999யில் தனது ஒன்றரை வயது மகனை தொலைத்த அந்த நேரத்தை நினைவு கூறுகிறார் நாகேஷ்வரராவ்.

மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த அந்த மாலைப்பொழுதில் குழந்தையைக் காணவில்லை என்று அனைவரும் தேடியும், கண்டுபிடிக்க முடியாமல் போனது என்று கூறும் அவர், தங்களின் தேடுதல் குறித்து விவரித்தார்.

"குழந்தை கிடைக்கவேண்டும் என்று நாங்கள் செய்யாத முயற்சி இல்லை. காவல்துறை மற்றும் நீதிமன்றத்தின் உதவியை நாடியது முதல், பல கோவில்களுக்குப் பயணம் மேற்கொண்டது வரை அனைத்தையும் செய்தோம்", என்கிறார் அவர்.

நாகேஸ்வர ராவ்- சிவகாமி தம்பதி சென்னையிலுள்ள புளியந்தோப்பில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர்களின் கடைசி குழந்தையான சுபாஷ்தான் 1999இல் கடத்தப்பட்டார்.

தேடல்

சென்னையில் கடத்தப்பட்ட குழந்தை, மலேசிய பொதுச்சேவை என்ற மையத்திடம் அளிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து ஒரு அமெரிக்க தம்பதி, அக்குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வந்துள்ளனர். அதன்பின் சுபாஷிற்கு அவினாஷ் என்று பெயர் சூட்டியுள்ளனர்.

1999முதல் காவல்துறை சார்பிலிருந்து பெரிய முன்னேற்றம் ஏதும் இல்லாமல் இருந்தது. 2006ஆம் ஆண்டு, வழக்கறிஞர் மோகனவடிவேலன், குழந்தையை கண்டுபிடிப்பதற்காக உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை சமர்ப்பித்தார். இதன்பின்னர், 2009ஆம் ஆண்டு இவ்வழக்கு சிபிஐ-யிடம் மாற்றப்பட்டது.

குழந்தைக் குறித்து தொடர்ந்து விசாரித்து வந்த நிலையில்தான், அமெரிக்காவிலிருந்த அவினாஷ் குறித்த தகவல் கிடைத்ததாகக் கூறுகிறார் வழக்கறிஞர் மோகனவடிவேலன்.

"குழந்தையை கண்டுபிடிக்க அமெரிக்கச் செய்தியாளரான ஸ்காட் கார்னரி மூலம் முயன்றோம். அங்குள்ள தொலைக்காட்சியில் இந்த செய்தியை ஒளிபரப்ப முயன்றோம். பிறகு, அவினாஷை தத்து எடுத்த பெற்றோரை தொடர்புகொண்டு பேச முயன்றபோது, சரியான பதில் எங்களுக்கு கிடைக்கவில்லை." என்கிறார் மோகனவடிவேலன்.

"அவர்கள் எங்களுக்கு சரியான பதில் அளிக்காத நிலையில் தான், நாங்கள் குழந்தைக்கும் சென்னையிலுள்ள பெற்றோருக்கும் மரபணு சோதனை செய்ய முயன்று வந்தோம். பிறகு இண்டர்போல் உதவியுடன் குழந்தையின் இரத்தம் எங்களுக்கு கிடைத்தது. சென்னை அரசு பொது மருத்துவமனையில்தான், இந்த குழந்தை, நாகேஸ்வர ராவ் - சிவகாமி தம்பதியின் மகனான சுபாஷ் தான் என்பது உறுதியானது." என்கிறார் வழக்கறிஞர்.

குடும்பத்துடன் அவினாஷ்

பட மூலாதாரம், MOhanavadivelan

படக்குறிப்பு, குடும்பத்துடன் அவினாஷ்

அவினாஷ் அமெரிக்காவில் உள்ள தனது வளர்ப்பு பெற்றோருடன் வாழ்ந்து வந்ததால், மரபணு சோதனை சாதகமாக முடிந்த பின்னரும் குழந்தையை இவர்களால் பெற முடியவில்லை.

"குழந்தை எங்களுடையது என்றாலும், அமெரிக்க தம்பதியும் அவன் மீது பாசம் வைத்து வளர்த்துள்ளனர். அவர்களிடம் சண்டைபோட்டு குழந்தையை வாங்க எங்களுக்கு மனமில்லை. அவர்களே அவருக்கு புரியவைக்கட்டும். அதன்பின்னர் அவருக்கு நேரம் இருந்தால் எங்களை சந்திக்க வரட்டும் என்ற மனநிலையிலேயே இருந்தோம்" என்கிறார் நாகேஸ்வர ராவ்.

அவினாஷின் அமெரிக்க வாழ்க்கை

அமெரிக்காவில் தனது பெற்றோர் மற்றும் மூன்று சகோதர சகோதரிகளுடன் வாழும் அவினாஷ், தனக்கு 13 வயதாக இருந்தபோது, தனது இந்திய பெற்றோர் குறித்த தகவல்கள் அவரிடம் கூறப்பட்டது என்கிறார். "அது மிகவும் இளம் வயது என்பதால், என்னால் இந்த விஷயம் குறித்து பெரியதாக எதுவும் கூற முடியவில்லை. என்னிடம் வந்த தகவலை உள்வாங்கி கொள்ள மட்டுமே முடிந்தது" என்கிறார்.

"கடந்த நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவிற்கு வந்து அவர்களை சந்திக்க முடிவு செய்தேன்." என்று கூறும் அவர், இந்த முடிவை அறிந்த தனது அமெரிக்க குடும்பம் தனக்கு மிகவும் உறுதுணையாக இருந்ததாக தெரிவிக்கிறார்.

"பெற்றோரையும், இந்த ஊரையும் பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். நான் எங்கிருந்து வந்தேன். என் பெற்றோர் யார், அவர்களின் கலாசாரம், பழக்கம், அவர்கள் வளர்ந்த விதம் ஆகியவற்றை அறிந்துகொண்டவுடன் எனக்கு ஒரு மன அமைதி கிடைத்துள்ளது."

"அமெரிக்கா சென்றவுடன், என்னுடைய வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை காண்பிப்பதற்கான ஒரு புகைப்பட ஆல்பத்தை அவர்களுக்கு அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளேன். மீண்டும் இங்கு வந்து, இந்த ஊரின் கலாசாரம், உணவு, பழக்க வழக்கம் ஆகியவற்றை அறிய ஆர்வமாக உள்ளேன்." என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார் அவினாஷ்.

வழக்கறிஞர் மோகனவடிவேலன் மற்றும் அவினாஷ்

பட மூலாதாரம், MOhanavadivelan

படக்குறிப்பு, வழக்கறிஞர் மோகனவடிவேலன் மற்றும் அவினாஷ்

உணர்ச்சிமிகு சந்திப்பு

செப்டம்பர் 8ஆம் தேதி சென்னை வந்த அவினாஷ், 1999ற்கு பிறகு முதன்முறையாக தனது பெற்றோரை நேரில் சந்தித்தார்.

அவரை சந்தித்த பிறகு, சென்னையில் அவர் பார்க்க விரும்பும் அனைத்து இடங்களுக்கும் அழைத்து சென்று வருவதாக மிகவும் மகிழ்ச்சியுடன் கூறுகிறார் நாகேஸ்வர ராவ்.

"எங்களுக்கு என்று எதையும் நாங்கள் யோசிக்கவில்லை. அவர் பார்க்க விரும்பும் இடங்கள், சாப்பிட விரும்பும் உணவு என அவர் கேட்கும் எல்லாவற்றையும் செய்து வருகிறோம்," என்று கூறிய அவர், நாளை தனது மகன் மீண்டும் அமெரிக்கா செல்வுள்ளதையும் குறிப்பிட்டார்.

"மகனை சந்தித்ததால் சிவகாமி மிகவும் மகிழ்ச்சியில் இருந்தாலும், அவர் மீண்டும் ஊருக்கு செல்வது குறித்து மிகவும் வருத்தத்தில் உள்ளார். மகனுக்கு அங்கும் ஒரு குடும்பம் உள்ளது, வாழ்க்கை உள்ளது என்பதை அவர் புரிந்து கொண்டு, அவினாஷ் அங்கு செல்லட்டும் என்று கூறினாலும், சிவகாமி வருத்தத்தில்தான் உள்ளார்" என்றும் நாகேஸ்வர ராவ் பிபிசியிடம் தெரிவித்தார்.

மொழி ஒரு பெரிய தடை

தனது பெற்றோர் குறித்து விவரம் அறிந்த பிறகு, வழக்கறிஞரின் மூலமாக பெற்றோரை தொடர்பு கொண்டுள்ளார் அவினாஷ். நாகேஸ்வர ராவ் குடும்பத்திற்கு ஆங்கிலம் தெரியாது; அவினாஷிற்கு தமிழ் தெரியாது என்பதால் அவர்களின் உரையாடல்களுக்கு மொழிபெயர்ப்பும் வழக்கறிஞர் மோகனவடிவேலனே செய்கிறார்.

"மொழி ஒரு தடை என்பதால், இரு தரப்பிலும் உள்ள உணர்வுகள் பரிமாற வாய்ப்புகள் இல்லாமல் உள்ளது. அவர்கள் கூறுவதை நான் மொழிபெயர்த்தாலும், அவரை பார்த்தபோது, பெற்றோரால் கண்ணீர் விடுவதைத் தவிர பெரியதாக எதையும் வெளிப்படுத்த முடியவில்லை." என்கிறார் வழக்கறிஞர்.

இருப்பினும், தான் தமிழில் மொழியின் அடிப்படையான விஷயங்களை அமெரிக்கா சென்றவுடன் கற்க விரும்புவதாக அவினாஷ் தெரிவிக்கிறார். "இதுவரை நண்பர்களும், உறவினர்களும் தொடர்ந்து எங்களுக்காக மொழிபெயர்த்து வருகின்றனர். ஆனால், அடுத்த சில ஆண்டுகளில் மொழியின் அடிப்படையை கற்று நானே அவர்களுடன் பேச விரும்புகிறேன். சரளமாக முடியாது என்றாலும், அடிப்படையை சரியாக கற்றுக்கொள்ள முயற்சிகள் எடுக்கவுள்ளேன்" என்று தெரிவிக்கிறார் அவினாஷ்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :