புதிய கல்விக் கொள்கை: அரசு சார்பு கூட்டத்தில் நுழைந்து போராட்டம்

பட மூலாதாரம், Getty Images
கோவையில் புதிய கல்விக் கொள்கை தொடர்பான அரசு சார்பில் நடந்த பணிமனை அரங்கில் நுழைந்து பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம் நடத்தினர்.
தேசிய அளவிலான புதிய கல்விக் கொள்கை 2019 தொடர்பாக மண்டல அளவிலான பணிமனை இன்று புதன்கிழமை கோவை பி எஸ் ஜி தொழில் நுட்பக் கல்லூரியில் நடைபெற்றது.
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் மண்டல அளவில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் மாவட்ட கல்வி அலுவலர்கள், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர்,இணை இயக்குனர், ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள், பள்ளி மாணவ,மாணவியர், பெற்றோர் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர்.
காலையில் புதிய கல்வி கொள்கை குறித்த விளக்க கூட்டமும், பிற்பகல் குழு விவாதமும் நடைபெற்றது. இந்த நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது தந்தை பெரியார் திராவிட கழகத்தினர், கூட்டம் நடைபெறும் அரங்கினுள் நுழைந்து, தனியார் கல்லூரியில் இரகசியமாக நடத்தப்படும் இந்த கருத்து கேட்பு கூட்டம் நிறுத்தப்படவேண்டும் என்று கூறி அதிகாரிகளுடன் விவாதம் செய்தனர்.
இது குறித்து பேசிய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், இன்று நடை பெற்றது கல்வித்துறை நடத்திய கூட்டம். பொதுமக்கள், அரசியல் அமைப்பினர் கருத்து கூற வேண்டுமெனில் இணையதளத்தின் வழி தெரியப்படுத்தலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. போராட்டம் நடத்தியவர்கள் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ள இடத்தில் அவர்களது கருத்தினை தெரிவிக்கலாம் மாறாக கல்வித் துறை சார்பில் நடைபெறும் நிகழ்வில் தெரிவிக்க இயலாது என்று கூறினார்.

புதிய கல்விக் கொள்கையில் மாற்று கருத்துடையவர்கள் யாரும் அழைக்கப்படாமல், முறையான விளம்பரம் செய்யாமல் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது என்று பெரியார் திராவிடர் கழகத்தினர் குற்றம் சாட்டினர்.
தொடர்ந்து இந்தக் கூட்டத்தினை நடத்தக் கூடாது என்று வலியுறுத்தி கல்லூரி வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்தக் கூட்டத்தில் பெற்ற கருத்துக்களை கணக்கில் கொள்ளாமல், முறையாக விளம்பரம் செய்து அனைத்து தரப்பு மக்களையும் அழைத்து மீண்டும் ஒரு கூட்டம் நடத்திட அவர்கள் வலியுறுத்தினர்.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய தந்தை பெரியார் திராவிட கழகத்தின் கு.இராமகிருஷ்ணன், மத்திய அரசு சார்பில் கஸ்துரி ரங்கன் குழுவினரால் தயாரிக்கப்பட்ட 480 பக்க அளவிலான புதிய வரைவு கல்விக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த புதிய கல்விக் கொள்கையில் மாணவர்களுக்கு விரோதமான திட்டங்கள்தான் அதிகம் உள்ளன.
மூன்று வயதில் பள்ளிக்கு அனுப்பவேண்டும், 3ம் வகுப்பு, 5ம் வகுப்பு, 8ம் வகுப்பு தேர்வு , ஒன்பதாம் வகுப்பிற்கு மேல் செமஸ்ட்டர் என்ற அடிப்படையில் தேர்வு கொண்டுவரப்படும். இந்த கல்விக் கொள்கையால் இடைநிற்றல்கள் அதிகமாகும். ஒன்பதாம் வகுப்பில் தொழிற்கல்வி தேர்ந்தெடுக்கலாம் என்பது ராஜாஜி காலத்தில் கொண்டுவரப்பட்ட குலக்கல்வி திடடத்திற்கு நிகரானது.
தனியார் தேர்வு வாரியங்கள் அமைத்துக் கொள்ளலாம் என்ற திட்டம் பெரிய ஊழலுக்கு வழிவகுக்கும். இது போன்று நிறைய பாதிப்புகள் உள்ளதால் இந்த புதிய கல்விக் கொள்கையினை எதிர்ப்பது அவசியமாகிறது. இது குறித்து நடைபெறும் கருத்து கேட்பு கூட்டம் ஒரு குறிப்பிட்ட தனியார் கல்லூரியில் ரகசியமாக நடத்தப்படுகிறது. இந்த மாவட்டத்தில் படிக்கக்கூடிய லட்சக்கணக்கான மாணவர்களின் கல்வியை தீர்மானிக்கிற விஷயத்துக்கு ஒரு குறிப்பிட்ட 40 பேரை மட்டும் வைத்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தி அதில் இருந்து அரசு முடிவெடுப்பது என்பது ஜனநாயகத்திற்கு எதிரானது. எனவே, இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்களை பதிவு செய்யக்கூடாது. முறையான விளம்பரம் செய்து அடுத்த கட்ட கூட்டத்தினை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம் என்று கூறினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












