ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்ட பிறகும் வாகனத்தை ஓட்டுபவரா நீங்கள்? சீட் பெல்ட் அணிய உங்களுக்கு பிடிக்காதா? - இதை படித்துவிடுங்கள்

பட மூலாதாரம், Getty Images
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
இந்து தமிழ்: 'மோட்டார் வாகனச் சட்டத்தில் அபராதம் கடும் உயர்வு'
புதிய மோட்டார் வாகனத் திருத்த மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புதிய மசோதாவில் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் தற்போது உள்ளதைவிட பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மசோதா நடப்பு மக்களவைக் கூட்டத் தொடரில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
நாடு முழுவதும் பெருகி வரும் வாகன விபத்துகளை கருத்தில் கொண்டு, மோட்டார் வாகன சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்தது. இதன்படி கடந்த 2016-ம் ஆண்டு இந்தச் சட்டம் திருத்தப்பட்டது.
இந்த மோட்டார் வாகன மசோதா, மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருந்தது. 16-வது மக்களவையின் காலம் முடிவடைந்ததால் இந்த மசோதா காலாவதியானது. இந்நிலையில், புதிய மோட்டார் வாகனத் திருத்த மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. கார், மோட்டார் சைக்கிள் மற்றும் கனரக வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு கூடுதல் அபராதம் விதிக்கும் வகையில் புதிய சட்ட மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதாவில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு தற்போது விதிக்கப்படும் அபராதத் தொகையை விட பல மடங்கு உயர்த்தியிருப்பதாகத் தெரியவந்துள்ளது.
சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுதல், மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல், உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், ஆபத்தை விளைவிக்கக்கூடிய வகையில் வாகனம் ஓட்டுதல், 18 வயதுக்குக் கீழ் உள்ளோர் வாகனம் ஓட்டுதல், அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுதல், சீட்பெல்ட் அணியாமல் வாகனங்கள் ஓட்டுதல், அதிக சுமைகளுடன் வாகனத்தை ஓட்டுதல் போன்ற விதிமீறல்களுக்கு அபராதத் தொகை பல மடங்கு அதிகரிக்கப் பட்டுள்ளதாகத் தெரிகிறது.

பட மூலாதாரம், Getty Images
தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர சேவை வாகனங்களுக்கு வழிவிடாமல் செல்லும் வாகனங்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதிக வேகமாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.2 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.
வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் இல்லாமல் ஓட்டினால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மேலும் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டி னால் ரூ.1,000 அபராதம் மற்றும் 3 மாதம் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்.
18 வயதுக்குக் கீழ் உள்ள சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர் அல்லது பாதுகாவலர் குற்றவாளிகளாக கருதப்பட்டு அந்த வாகனத்தின் பதிவு ரத்து செய்யப்படும். மேலும் அவர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் மற்றும் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படவும் புதிய மசோதாவில் விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
சாதாரண போக்குவரத்து விதிமீறல்களுக்கு விதிக்கப்பட்டு வந்த ரூ.100 அபராதம் இனி ரூ.500 ஆக அதிகரிக்கப்படும். மேலும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்ட பிறகும் வாகனத்தை ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்தவேண்டும். ஆபத்தை விளைவிக்கக் கூடிய வகையில் வாகனத்தை ஓட்டினால் ரூ.5 ஆயிரம் அபராதம் செலுத்தவேண்டும்.
மது குடித்துவிட்டு வாகனத்தை இயக்கினால் ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள் ளது. தொடர்ந்து போக்குவரத்து விதிகளை மீறுவோர், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டுவோருக்கு ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்க புதிய மசோதாவில் விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
அதிக சுமையேற்றிச் செல்லும் வாகனங் களுக்கு இனி ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
கார்கள் உள்ளிட்ட வாகனங்களில் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர் களுக்கு ரூ.1,000 அபராதம், 3 மாதங் களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப் படும் என்று மசோதாவில் கூறப்பட்டு உள்ளது.
இந்த மசோதா நடப்புக் கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி: 'இந்தியாவில் மருத்துவர்கள் பற்றாக்குறை'
இந்தியாவில் 6 லட்சம் மருத்துவர்கள் பற்றாக்குறையாக உள்ளதாக ஆய்வறிக்கை ஒன்றின் வாயிலாக தெரியவந்துள்ளது. அதேபோன்று 20 லட்சம் செவிலியர்களை புதிதாக பணியமர்த்த வேண்டிய அவசியம் சுகாதாரத் துறைக்கு இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நோய்கள் மற்றும் நிதிசார் நடவடிக்கைகளுக்கான தரவு மையம் ஆய்வு ஒன்றினை அண்மையில் மேற்கொண்டது. உலக நாடுகளின் சுகாதார வசதிகள், அவற்றின் கட்டமைப்பு, மருத்துவமனைகள், நோயாளிகளுக்கு உள்ள வசதிகள், மருத்துவர்கள் எண்ணிக்கை ஆகியவற்றின் விவரங்கள் திரட்டப்பட்டு அதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதன் முடிவு அறிக்கையாகத் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
ஆயிரம் நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதத்தில் மருத்துவத் துறை இயங்க வேண்டும் என்பது உலக சுகாதார அமைப்பு வரையறுத்துள்ள விதி. அதேபோன்று, 483 நோயாளிகளுக்கு ஒரு செவிலியர் என்ற விகிதமும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், இந்தியாவில் அத்தகைய நிலை இல்லை. 10,189 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற சூழலே நீடித்து வருகிறது. அதுபோலவே, செவிலியர்களும் போதிய எண்ணிக்கையில் இல்லை. இதனால் அனைவருக்கும் மருத்துவ வசதிகள் சென்றடைவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.
அதுமட்டுமன்றி இந்தியாவில் 65 சதவீதம் பேர் மருத்துவத்துக்காக தங்களது சக்திக்கு மேல் பணத்தை செலவிட வேண்டியுள்ளது. இதன் காரணமாக ஆண்டுதோறும் 5 லட்சம் பேர் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாக மாறக்கூடிய வாய்ப்பு உள்ளது. இந்த விவகாரத்தில் உரிய தீர்வு காண வேண்டும்.
சர்வதேச அளவில் பல்வேறு முன்னேற்றங்களை எட்டி வரும் இந்தியா, சுகாதாரத் துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிப்பது அவசியம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இதனிடையே, அமெரிக்க ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்களை முழுமையாக ஏற்க இயலாது என்று தமிழக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மாநில வாரியாக அல்லாமல், பொதுவான ஓர் அறிக்கையை தயாரித்துவிட்டு, அதைக் கொண்டு நாட்டின் சுகாதாரத் துறையை எடை போட இயலாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து தமிழக மருத்துவ கவுன்சிலைச் சேர்ந்த நிர்வாகிகள் கூறியதாவது:
ஒட்டு மொத்த இந்தியாவிலும் மருத்துவர்கள் பற்றாக்குறை என்பது வேண்டுமென்றே மேற்கொள்ளப்படும் கருத்து திணிப்பு. வட மாநிலங்களிலும், சில வடகிழக்கு மாநிலங்களிலும்தான் அத்தகைய நிலை உள்ளது. தென்னிந்தியாவைப் பொருத்தவரை அதிக எண்ணிக்கையிலான மருத்துவர்கள் உள்ளனர்.
குறிப்பாக, தமிழகத்தை எடுத்துக் கொண்டால், 250 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற நிலை உள்ளது. அதேபோன்று கேரளம், கர்நாடகத்திலும் அதிக அளவிலான மருத்துவர்கள் சேவையாற்றி வருகின்றனர்.
எனவே, அந்த ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்களும், பரிந்துரைகளும் தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களுக்கு பொருந்தாது. தமிழக மருத்துவக் கல்லூரிகளில்தான் வேறு எங்குமே இல்லாத வகையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ் இடங்களும், 1,700-க்கும் அதிகமான மருத்துவ மேற்படிப்பு இடங்களும் உள்ளன. ஆண்டுதோறும் புதிய மருத்துவர்களை அதிக அளவில் உருவாக்குவது தமிழகம்தான் என்று அவர்கள் தெரிவித்தனர்.
- இவ்வாறாக அந்நாளிதழ் விவரிக்கிறது.


பட மூலாதாரம், இந்து தமிழ்


தினத்தந்தி: 'அதிகாரியை கிரிக்கெட் மட்டையால் தாக்கிய எம்.எல்.ஏ. கைது'
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்கும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த பா.ஜ.க. பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியாவின் மகனும் எம்.எல்.ஏ.வுமான ஆகாஷ் விஜய்வர்கியா கட்டிடங்களை அகற்றும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என தடுத்தார்.
இதனால் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ஆகாஷ் விஜய்வர்கியா பணியில் இருந்த அதிகாரியை கிரிக்கெட் மட்டையால் தாக்கினார். அவரது ஆதரவாளர்களும் அதிகாரிகளை அடித்து விரட்டினர். இந்த தாக்குதல் சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் 'வைரல்' ஆனது.
இதனை தொடர்ந்து ஆகாஷ் விஜய்வர்கியா மற்றும் அவரது ஆதரவாளர்கள் 10 பேர் மீது அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் ஆகாஷ் விஜய்வர்கியாவை நேற்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: நிடி ஆயோக் அறிக்கையில் திருத்தம் கோரும் தமிழக அரசு
மத்திய அரசின் நிடி ஆயோக் சமீபத்தில் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி தமிழகம் பொதுச் சுகாதாரத் துறையில் மூன்றாம் இடத்தில் இருந்து ஒன்பதாவது இடத்திற்கு இறங்கியுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதப் போவதாகவும், திருத்தப்பட்ட அறிக்கையை கோரப்போவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
நிடி ஆயோகின் வெளியிட்டுள்ள தரவுகளில் முரண்பாடுகள் இருப்பதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்தார்.
"தமிழகத்தில் 99.9 சதவீதம் பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடக்கிறது, ஆனால் நிடி ஆயோகின் அறிக்கையில் 20 சதவீதம் பிரசவங்கள் வீடுகளில் நடப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 14 வருடங்களாக போலியோ இல்லாமல் இருக்கிறது. ஆனால் அறிக்கையில் கடந்த ஏழாண்டுகளாகத்தான் தமிழகத்தில் போலியோ இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்
அறிக்கைக்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளதாகவும், ஏற்கனவே இது தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளதாகவும் குறிப்பிட்ட விஜயபாஸ்கர், தாமும் இதுகுறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதப் போவதாக தெரிவித்தார்.
நிடி ஆயோகின் தரவுகள் முற்றிலும் தவறானது என்று அவர் கூறியதாக மேலும் அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












