ஜெட் ஏர்வேஸ் சிக்கல் தீவிரம்: சர்வதேச விமானங்கள் அனைத்தும் ரத்து?

பட மூலாதாரம், Getty Images
நிதிச் சிக்கலில் சிக்கித் தவித்துவரும் இந்தியாவின் முன்னணி தனியார் விமானப் போக்குவரத்து நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் தமது பன்னாட்டு விமானப் பயணங்கள் அனைத்தையும் ரத்து செய்துள்ளதாகத் தெரிகிறது.
இந்த நிறுவனம் பிழைத்திருக்குமா என்ற அச்சத்தை இது ஏற்படுத்தியுள்ளது. 100 கோடி டாலருக்கும் அதிகமான கடனில் சிக்கித் தவித்துவரும் இந்த நிறுவனம் கடனில் மூழ்கி மூடப்படுவதை தவிர்ப்பதற்காக நிதியுதவியை எதிர்பார்க்கிறது.
விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பயணிகளின் நலனைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து சர்வதேச விமான சேவைகளை வழங்க விரும்பும் விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் குறைந்தது 20 விமானங்கள் வைத்திருக்கவேண்டும்.
ஆனால், ஒப்பந்தமிட்டுள்ள நிறுவனங்களுக்கு தரவேண்டிய கட்டணத்தை செலுத்தாத காரணத்தால் வியாழக்கிழமை மேலும் 10 விமானங்களை சேவையில் இருந்து திரும்பப் பெறுவதாக ஜெட் ஏர்வேஸ் தெரிவித்திருந்தது. இந்நிலையில் அந்த நிறுவனம் வெறும் 14 விமானங்களை மட்டுமே இயக்குவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிறுவனத்திடம் மொத்தம் 100 விமானங்கள் உள்ளன. இது மொத்தம் 600 உள்நாட்டு வழித்தடங்களிலும், 380 சர்வதேச வழித்தடங்களிலும் சேவை அளித்துவந்தது.
லண்டனில் இருந்து ஏப்ரல் 12-ம் தேதி இந்தியா வரும் விமானத்தை ரத்து செய்துவிட்டதாக இந்த நிறுவனம் லண்டனில் இருந்து உறுதி செய்தது.
பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களைக் குறைக்கவும், அவர்களை வேறுவிமானங்களுக்கு மாற்றுவதற்கும், தேவைப்பட்டால் பணத்தைத் திருப்பி அளிக்கவும் நடவடிக்கை எடுத்துவருவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












