மன்சூர் அலிகான் நேர்க்காணல்: "தமிழர் ஒருவரைப் பிரதமராக்குவோம்"

திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் 'நாம் தமிழர் கட்சி' சார்பாக போட்டியிடும் திரைப்பட நடிகர் மன்சூர் அலிகான், பரோட்டா கடையில் பரோட்டா போடுவது, செருப்பு தைப்பது, பெண்களுக்கு காய்கறி நறுக்கி கொடுப்பது என பிரசாரக் களத்தில் வித்தியாசமான வேலைகளை செய்து கவனத்தை ஈர்த்து வருகிறார்.
பிபிசி தமிழுக்காக பிரபுராவ் ஆனந்தன் மன்சூர் அலிகானை பேட்டி கண்டார். இந்த நேர்காணலில் மன்சூர் அலிகான் தெரிவித்த கருத்துக்களை தொகுத்து வழங்குகிறோம்.
கேள்வி: வாக்கு சேகரிக்கும் இடங்களில் நீங்கள் பரோட்டா போடுவதும், செருப்பு தைப்பதும் விளம்பரத்திற்காகவா?
பதில்: இவற்றை நான் விளம்பரத்திற்கு செய்வதாக அனைவராலும் சொல்லபடுகிறது. ஆனால் அது உண்மையல்ல.

பட மூலாதாரம், BBC Sport
எனக்கு கும்பிட்டு வாக்கு கேட்க தெரியாது. அதற்கு பதிலாக கையை உயர்த்தி, மடக்கி வணக்கம் சொல்லுவது நாம் தமிழர் கட்சியின் வழக்கம். அதுபோல் செய்கிறேன்.
தமிழ் இனத்தை நசுக்கி, வஞ்சித்து, முதுகின் மேல் ஏறி சவாரி செய்வதை இனியும் நாங்கள் அனுமதிக்க போவதில்லை.
காய்கறி விற்பவர்களோடு இணைந்து, அவர்களிடம் பேச வாய்ப்பு கிடைப்பதால் அவர்களுடன் பழக முடிவதால் நான் இவ்வாறு மக்களிடம் வாக்கு கேட்டு வருகிறேன்.

கே: திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் மக்களின் நீண்டகால கோரிக்கைகள் என்ன?
ப: இந்த நாடாளுமன்ற தொகுதியில் மக்களின் தேவைகளோ அதிகம். மக்கள் குடிக்க குடிநீர் இல்லாமல் அவதியுறுகின்றனர். எனவே நீர் ஆதாரங்களை உடனடியாக பெருக்க வேண்டும்.
விவசாயத்தை பெறுத்தவரையில் வெளிநாடுகளுக்கு இணையாக அனைத்து வளங்களும் உள்ளன. எனவே அதனை மேம்படுத்த கடுமையாக உழைப்பேன்.

அதே நேரத்தில் ஸ்டெர்லைட் பிரச்சினைபோல் மக்களை போராட விடமாட்டேன். போரட்டத்தில் 13 பேரை சுட்டு கொன்றுவிட்டு முதல்வர் எடப்பாடி அதே பகுதிக்கு சென்று வாக்கு சேகரிக்கிறார். இது எவ்வளவு பெரிய தவறான செயல்.
முகிலன் நிலை என்ன? தேர்தலுக்கு முன்னதாக திட்டமிட்டு கொலை செய்திருப்பார்கள் என நினைக்கிறேன். இதற்கு நிச்சயம் முதல்வர் பதில் சொல்ல வேண்டும்.
ஏழு தமிழர்களை விடுதலை செய்ய முடியாத காங்கிரஸ் மக்களிடம் வாக்கு சேகரிக்கவருகிறது. இது நேர்மையற்ற செயல். தமிழக அரசு நினைத்திருந்தால் அவர்களை விடுதலை செய்துவிட்டு மக்களிடம் வாக்கு சேகரிக்க வந்திருக்க வேண்டும்.

கே: வெற்றி பெற்றால் விவசாயிகளுக்கு என்ன செய்வீர்கள்?
ப: தற்சார்பு பெருளாதாரம், நம்மாழ்வாரின் இயற்கை விவசாயத்தை கடைபிடிப்போம். செயற்கை உரங்களை பயன்படுத்தாமல் இயற்கை உரங்களை விவசாயிகள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தியா முழுவதிலும் இயற்கை மூலிகைகள் உள்ளன. ஆனால் தற்போதைய நரேந்திர மோதி அரசு அவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காமல் ராம்தேவ் போன்றோரின் கார்பரேட் நிறுவனங்கள் கோடிக்கணக்கில் வருமானம் அடைய உதவி செய்து வருகிறது. எனவே நான் விவசாயிகளை கொண்டு கூட்டுறவு சங்கம் அமைத்து பொது மக்கள் நலம் பெற நடவடிக்கை எடுப்பேன்.

கே: நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் என்ன செய்வீர்கள்?
ப: நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் தன்னலம் இல்லாதவர்கள். ஆகையால் தமிழர் ஒருவரை பிரதமராக பதவியில் அமர வைப்போம். கார்ப்பரேட் நிறுவனங்களை ஒழிப்போம்.


கே: இந்த தொகுதியில் வேலையில்லாமல் திண்டாடும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?
ப: மலைகளை அழிப்பது, கனிம வளங்களை கொள்ளையடிப்பது, எட்டு வழிச்சாலை, பன்னிரண்டு வழிச்சாலை ஆகியவைகளை நிறுத்தி, நீர் ஆதாரத்தை பெருக்கி, எட்டு திக்கும் தொழில் வளத்தை பெருக்கினால் நிச்சயம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

கே: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதால் திண்டுக்கல் மாவட்டத்திற்கு என்ன பயன்?
ப: எய்ம்ஸ் மருத்துவமனையால் யாருக்கு பயன்? வட மாநிலத்தவரை வேலைக்கு அமர்த்தி அவர்கள் பயன்பெறும் வகையில் செயல்படும். ஆனால், எய்ம்ஸ் மருத்துவமனையில் அனைத்து மக்களுக்கும் இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டால் மட்டுமே தமிழர்களுக்கு பயனுள்ளதாக அமையும். சாரயம் விற்று மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கும் அரசியல்வாதிகளால்தான் தமிழகம் இப்படியுள்ளது.


கே: தேர்தலையொட்டி தமிழகத்தில் தினமும் கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்படுகிறது. அது யாருடைய பணம்?
ப: தினமும் கோடிக்கனக்கில் பணம் கைப்பற்றப்படுகிறது. ஆனால் கைப்பற்றப்படும் பணம் அதிமுக தரப்பில் அவர்களின் பணம் கிடையாது என்றும், திமுக தரப்பில் அவர்களின் பணம் கிடையாது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அப்படி, இந்த பணம் யாருடையதும் இல்லையென்றால் அது என்னுடைய (மன்சூர்அலிகான்) பணம்... அதை என்னிடம் கொடுங்கள் என அவர் நகைச்சுவையுடன் கூறினார்.
பிற செய்திகள்:
- ராகுல் ஆளுமையில் ஏற்பட்ட வளர்ச்சி, மோதியை பதவியிறக்கப் போதுமானதா?
- 'இடதுசாரிகளுக்கு எதிராக ஒரு வார்த்தைகூட பேசமாட்டேன்' - ராகுல் காந்தி
- 'இந்திய ராணுவத்தை மோதியின் ராணுவம் என்பவர்கள் தேசத் துரோகிகள்' - பாஜக அமைச்சர்
- மன்கட் முறையில் அவுட் ஆக்கியது ஏமாற்றம் அளிக்கிறது - ஜோஸ் பட்லர்
- நோட்டா என்றால் என்ன? இது தேர்தலில் வெற்றி பெற முடியுமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












