மக்களவைத் தேர்தல் 2019: நரேந்திர மோதியின் நாற்காலியை குறிவைக்கும் மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி

பட மூலாதாரம், Mint

கடந்த இரண்டு ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக எதிர் கட்சிகளை ஒன்று திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி. மம்தாவின் பிரதமர் நாற்காலி கனவு நனவாகுமா?

இந்த புத்தாண்டில் ஜனவரி 19ஆம் தேதியன்று மம்தா பானர்ஜி, மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவின் சரித்திர சிறப்பு மிக்க ப்ரிகேட் பரேட் மைதானத்தில் எதிர்கட்சிகளுடன் இணைந்து மாபெரும் மாநாட்டை நடத்தினார்.

அந்த பேரணியில் பல்வேறு முன்னணித் தலைவர்களோடு ஒன்றாக கரம் கோர்த்து அவர் நிற்பதை லட்சக்கணக்கான மக்கள் பார்த்துக் கொண்டிருந்தபோது, மம்தாவின் கண்களின் தெரிந்தது பிரதமர் கனவு.

அதன்பிறகு அடுத்த இரண்டே வாரத்தில் சாரதா சிட்ஃபண்ட் ஊழல் விவகாரத்தில், கொல்கத்தா மாநகர காவல்துறை ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிப்பது தொடர்பாக இரவு 8 மணியளவில் மம்தா திடீரென்று தர்ணா போராட்டத்தில் அமர்ந்தபோதும் அவரது இலக்கு பிரதமர் நாற்காலியை நோக்கியதாகவே இருந்தது.

பார்க்கப்போனால், மத்திய அரசு மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான மம்தா பானர்ஜியின் எதிர்ப்புகளும், முனைப்புகளும் 2014ஆம் ஆண்டில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி ஆட்சிக்கு வந்ததுமே தொடங்கிவிட்டது.

ஆனால், கடந்த ஒன்றரை இரண்டு ஆண்டுகளாக, மம்தாவின் இலக்கு கூர்முனைப்பு கொண்டதாகிவிட்டது. அர்ஜுனனின் கண்ணுக்கு தனது இலக்கான மீனின் கண்களைத் தவிர வேறு எதுவுமே தெரியாததுபோல, பிரதமர் நாற்காலி என்ற இலக்கைத் தவிர மம்தாவின் கண்களுக்கு வேறு எதுவுமே தெரியவில்லை என்றே சொல்லலாம்.

மம்தா பானர்ஜி

பட மூலாதாரம், Hindustan Times

தனது இலட்சியத்தை நிறைவேற்றும் குறிக்கோளில் திடமாக இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா, இதுவரை தனது லட்சியத்தைப் பற்றி வெளிப்படையாக எதுவுமே சொல்லியதில்லை என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். ஆனால், அவருக்கு பதிலாக கட்சியின் பிற தலைவர்களும், செயற்பாட்டாளர்களும், மம்தா தான் இந்தியாவின் அடுத்த பிரதமர் என்று ஆரூடம் கூறுகின்றனர்.

கடந்த ஆண்டு ஜூலை 21ஆம் தேதியன்று நடைபெற்ற பேரணியில் அனைத்துத் தலைவர்களும் மம்தாவே அடுத்த பிரதமர் என்ற ஒற்றை முழக்கத்தையே முன்வைத்தனர். தற்போது, நாட்டின் அடுத்த பிரதமராக மம்தா பானர்ஜி வரவேண்டும் என்ற விருப்பத்தை, மாநிலத்தின் பல பகுதிகளிலும் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், சுவரொட்டிகள் மற்றும் பதாகைகள் வாயிலாக வெளிப்படுத்துகின்றனர்.

பிடிவாதமும் போராட்டக்குணமும் மம்தாவின் ரத்தத்திலேயே ஊறியவை என்று சொன்னால் அது மிகையாகாது. தனது தந்தையும், கல்வியாளர் மற்றும் விடுதலை போராட்ட வீரருமான ப்ரமிலேஷ்வர் பானர்ஜியிடன் இருந்து மம்தாவின் பிடிவாதமும், போராட்டக் குணமும் வந்தது என்றே சொல்லலாம். 1998ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து தனிக்கட்சி ஆரம்பிக்க தூண்டியதும் அவருடைய இந்த பிரத்யேக குணமே.

ஆனால் தன்னுடைய கடுமையான உழைப்பால், பல தசாப்தங்களாக மேற்கு வங்கத்தில் கோலோச்சிக் கொண்டிருந்த இடதுசாரிகளின் ஆட்சியை 13 ஆண்டுகளிலேயே வீழ்த்தி, தனது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை ஆட்சிப்பீடத்தில் அமரவைத்து, முடி சூடினார் மம்தா.

2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்களில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிப் பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இதற்கெல்லாம் காரணம் மம்தாவின் முனைப்பான செயல்பாடுகள்தான்.

சிங்கூர் மற்றும் நந்திகிராம் போன்ற இடங்களில் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக பெரிய அளவில் போராட்டங்களை முன்னெடுத்து போராளித் தலைவராக மக்களின் மனதில் இடம்பெற்றார் மம்தா. அதுவே அவரை முதலமைச்சர் நாற்காலியிலும் அமரவைத்தது.

தனது அரசியல் வாழ்க்கையின் தொடக்கத்தில் இருந்தே போராட்டக்காரராக இருந்த மம்தா, பொதுமக்கள் தொடர்பான பிரச்சனையில் நடவடிக்கைகளை துரிதமாக எடுப்பது, போலீஸின் தடியடியை எதிர்கொள்வது என எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வாங்கியது இல்லை.

மம்தா பானர்ஜி

பட மூலாதாரம், Getty Images

லாப நட்டங்களை பாராமல், மிகப்பெரிய முடிவுகளை எடுக்கும் துணிச்சல் கொண்ட மம்தா பானர்ஜிக்கு இந்த குணம் பல வெற்றிகளை கொடுத்திருந்தாலும், சறுக்கல்களையும் கொடுத்திருக்கிறது.

நல்லதோ, கெட்டதோ, தான் எடுத்த முடிவுகளுக்கு அவர் வருத்தம் தெரிவித்ததில்லை. பிடிவாதம் மற்றும் மோதல் போக்கே, அவருக்கு அரசியலில் வெற்றியை தந்திருக்கிறது. நாளடைவில் அவரது ஆளுமையானது மத்திய அரசு, தேசிய ஜனநாயக கூட்டணி, பிரதமர், பா.ஜ.க மற்றும் அதன் வலிமையான தலைவர்களையும் தாக்கி பேசவும் தயங்காத தைரியத்தை கொடுத்தது.

மாநில காங்கிரஸின் மாணவர் பிரிவின் தலைவராக தனது அரசியல் வாழ்க்கையைத் துவக்கிய மம்தா, தன்னுடைய சொந்த முயற்சிகளின் காரணமாகவே உயர்நிலையை அடைந்தார். போலீஸ் மற்றும் சிபிஐ (எம்) தொண்டர்களின் தடியடியையும், பல பிரச்சனைகளையும் நூற்றுக்கணக்கான முறை எதிர்கொண்டதற்கு அவருடைய பிடிவாதமும் போராட்ட குணமுமே துணை நின்றது. அவருடைய இந்த பிடிவாதத்தையும், திடச் சித்தத்தையும் பார்த்த ஊடகங்கள் அவருக்கு "அக்னி கன்யா" என்று பெயர் சூட்டின.

காங்கிரஸில் இருந்தபோதிலும், தனது கட்சியின் பிற தலைவர்களைப் போல, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம் அனுசரித்து போகவில்லை, அவர்களுடைய மிரட்டல்களுக்கோ, நடவடிக்கைகளுக்கோ அவர் அஞ்சி, வாய் மூடிய மெளனியாகவும் இருந்தில்லை, பாராட்டி பேசியதும் இல்லை.

எளிமை என்பதை வாழ்க்கையின் ஒரு அடிப்படை கொள்கையாகவே வைத்துள்ளார் மம்தா பானர்ஜி. வெண்ணிற சேலை மற்றும் ஹவாய் செருப்பு அணியும் பழக்கத்தை அவர் எப்போதும் மாற்றிக் கொண்டதும் இல்லை. அவர் மத்திய அமைச்சராக இருந்தபோதும், மாநிலத்தின் முதலமைச்சராக பதவி வகித்தபோதும் கூட தனது நடை உடை பாவனைகளை மாற்றிக் கொள்ள அவர் விரும்பியதில்லை.

அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றியோ, பொதுவாழ்வைப் பற்றியோ யாரும் கேள்வி எழுப்பிவிட முடியாது. தனது மண்ணுடன் உறவு கொண்ட, அதை நேசிக்கும் தலைவர் என்பது மம்தாவின் மிகப் பெரிய பலம். சிங்கூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக தர்ணா நடத்தி போராடியது மற்றும் சாகும் வரை உண்ணாவிரதம் என காலவரையற்ற உண்ணவிரத போராட்டத்தை முன்னெடுத்த அவர், நந்திகிராமில் போலீசாரின் துப்பாக்கி குண்டுகளுக்கு ஆளான மக்களின் உரிமைக்கான போராட்டங்களையும் வீரியத்துடன் மேற்கொண்டார். இவ்வாறு மக்களுக்காக எப்போதும் களத்தில் இறங்கும், மக்களுடன் இயல்பாக பழகக்கூடிய மக்கள் தலைவராகவே மம்தா பானர்ஜி பார்க்கப்படுகிறார்.

மம்தா பானர்ஜி

பட மூலாதாரம், Getty Images

'தீதீ: த அண்டோல்ட் மம்தா பானர்ஜி" (Didi: The Untold Mamata Banerjee) என்ற பெயரில், மம்தாவின் வாழ்க்கையை புத்தமாக எழுதியிருக்கும் சுத்பா பால் இவ்வாறு சொல்கிறார்: "நாட்டின் மிகவும் வலிமையான பெண் தலைவர்களில் மம்தா பானர்ஜியும் ஒருவர்".

"தனது தனித்துவமான செயல்பாடு மற்றும் போராட்ட குணத்தின் காரணமாக, தீதி அரசியலில் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத பல விஷயங்களை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். மிகவும் வலிமையான இடதுசாரி அரசுக்கு எதிரான போராட்டமாக இருந்தாலும் சரி, அவர்களை தனது உறுதியான நிலைப்பாட்டாலும் செயல்பாடுகளாலும் வீழச் செய்த போர் குணமாக இருந்தாலும் சரி, இப்படிப்பட்ட மாற்றங்கள் நடைபெறும் என்று யாருமே கற்பனை செய்துகூட பார்த்திருக்க மாட்டார்கள்," என இந்த புத்தகத்தில், சுத்பா பால் குறிப்பிட்டிருக்கிறார்.

"டீகோடிங் தீதி" (Decoding Didi) என்ற புத்தகம் எழுதிய பிரபல பத்திரிகையாளர் தோலா மித்ராவின் கருத்துப்படி, "நாட்டில் மம்தா பானர்ஜியின் செயல்பாடுகளில் மக்கள் காட்டும் ஆர்வம் வேறு எந்த தலைவரிடம் காட்டாதது என்பதும், மம்தா போன்று வேறு யாரும் இந்த அளவு பிரபலமாக இருப்பார்களா என்ற கேள்விக்கு, அநேகமாக இல்லை என்றே சொல்லலாம். இதுபோன்ற மாயாஜால ஆளுமைத்தன்மை கொண்டவர்களைக் காண்பது அரிது."

1976ஆம் ஆண்டு, தனது 21 வயதில் காங்கிரஸ் கட்சி மூலம் அரசியலில் காலடி எடுத்து வைத்தார் மம்தா பானர்ஜி. 1984ஆம் ஆண்டு இந்திரா காந்தி படுகொலைக்கு பிறகு, மக்களவைத் தேர்தலில் முதன்முறையாக தேர்தல் களத்தில் இறங்கிய மம்தா பானர்ஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டின் பிரபல தலைவர் சோம்நாத் சாட்டர்ஜியை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் காலடி எடுத்து வைத்தார்.

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, கட்சியின் இளைஞர் காங்கிரஸ் பிரிவின் தேசிய பொதுச் செயலராக பணிபுரிந்தார். காங்கிரஸுக்கு எதிர்ப்பு இருந்தபோது நடைபெற்ற 1989ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் அதன் தாக்கம் மம்தாவையும் விட்டு வைக்கவில்லை, அவரும் தோல்வியைத் தழுவினார்.

மம்தா பானர்ஜி

பட மூலாதாரம், Getty Images

ஆனால், தோல்வியைக் கண்டு துவளாத மம்தா, மாநில அரசியலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். 1991ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற அவர் அதன்பிறகு திரும்பிப் பார்க்க வேண்டிய அவசியமே ஏற்படவில்லை. காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று பி.வி நரசிம்ம ராவ் பிரதமராக பொறுப்பேற்றபோது, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சராக பொறுப்பேற்றார் மம்தா பானர்ஜி.

ஆனால் மத்தியில் இரண்டு ஆண்டுகள் அமைச்சராக இருந்தபிறகு, மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்து கொல்கத்தாவின் ப்ரிகேட் பரேட் மைதானத்தில் மாபெரும் பேரணி ஒன்றை ஏற்பாடு செய்த மம்தா, மத்திய அரசின் கொள்கைகளை விமர்சித்தார். பிறகு அமைச்சரவையில் இருந்தும் ராஜினாமா செய்தார். மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடுங்கோல் ஆட்சியால் பாதிக்கப்படும் காங்கிரஸ் கட்சியினருடன் இணைந்து பணியாற்றப் போவதாக அவர் தெரிவித்தார்.

1998ஆம் ஆண்டு மம்தாவின் அரசியல் வாழ்வில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. மாநிலத்தில் அதிகாரத்தில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம் காங்கிரஸ் கட்சி சமரசம் செய்துகொண்டதாக குற்றம் சாட்டிய மம்தா பானர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். மம்தாவின் கடும் உழைப்பும், மாநிலத்தில் அவருக்கு இருந்த நற்பெயரும், கட்சியை வெகுவிரைவில் மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்துக்கு உயர்த்தியது. 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்களில் தனது சொந்த பலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியை அமைத்தார் மம்தா பானர்ஜி.

இடதுசாரிகளை மேற்கு வங்க மாநில ஆட்சியில் இருந்து அகற்றுவதே அரசியல் வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்து, மம்தாவின் ஒரே லட்சியமாக இருந்து வந்துள்ளது. இதற்காக அவர் பல போராட்டங்களை எதிர்கொண்டார், நண்பர்களை மாற்றினார். அது பாஜக என்றாலும் சரி, காங்கிரசாகவும் இருந்தாலும் சரி, தனக்கு பிடிக்காவிட்டால் பதவியை தூக்கி எரியவும் தயங்கமாட்டார் மம்தா.

2001ஆம் ஆண்டு அக்டோபரில், அடல் பிஹாரி வாஜ்பாயின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தில் ரயில்வே அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார் மம்தா. ஆனால் தெஹல்கா ஊழல் விவகாரம் காரணமாக, 17 மாதங்களுக்குப் பின்னர், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பிறகு அவர் காங்கிரஸ் உடன் கைகோர்த்தார்.

மம்தா பானர்ஜி

பட மூலாதாரம், Getty Images

2004ஆம் ஆண்டு ஜனவரி மாதம், மீண்டும் ஒரு சில நாட்களுக்கு மத்திய அமைச்சராக மம்தா பதவி வகித்தார். ஆனால், அதே ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தோல்வியடைந்ததால், மம்தாவின் இந்த பதவிக்காலம் குறுகியதாகவே இருந்தது. 2006ஆம் ஆண்டில், மீண்டும் காங்கிரசுடன் கைகோர்த்து, கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் கூட்டணியில் இருந்தார்.

2004ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளில் ஒற்றை தொகுதியில் மட்டுமே திரிணாமல் கட்சியால் பெறமுடிந்தது. வென்றதும் மம்தா மட்டுமே. ஆனால் அதன்பிறகு, சிங்கூர் மற்றும் நந்திகிராமில் விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிராக போராடிய மம்தா, ஏழைகளின் ரட்சகராக பார்க்கப்பட்டார். பிறகு 2009ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 19 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இந்தியாவில் ரயில்வே அமைச்சராக பணிபுரிந்த முதல் பெண்மணி மம்தா பானர்ஜி தான். அதைத் தவிர, நிலக்கரி, மனிதவள மேம்பாடு, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை என பல அமைச்சரவைகளின் தலைமைப் பதவிகளை கையாண்டிருக்கிறார் மம்தா. 2012ஆம் ஆண்டு சர்வதேச அளவில் வலிமைமிக்க 100 பேர் என்று டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட பட்டியலில் மம்தாவும் இடம் பெற்றிருந்தார் என்பது அவரின் பெருமைக்கு சான்று.

மத்திய அமைச்சரவையில் இரண்டாவது முறையாக ரயில்வே அமைச்சராக பதவியேற்ற அவர், தனது சொந்த மாநிலத்திற்கு பல புதிய ரயில் சேவைகளையும், நலத் திட்டங்களையும் கொண்டு வர காரணமாக இருந்தார். அந்த சமயத்தில் அவர் மாநிலத்திலேயே அதிகமாக இருந்ததால், அவரை மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் என்று சொல்வதற்கு பதிலாக, மேற்கு வங்கத்திற்கான ரயில்வேத் துறை அமைச்சர் என்றே சொல்லலாம் என்றும் கேலி செய்யப்பட்டிருக்கிறார். ஆனால், தனது மாநிலத்திற்கு முன்னுரிமை கொடுத்தார் அவர் என்பதை யாரும் மறுக்கமுடியாது.

ரயில்வே அமைச்சராக இருந்த காலகட்டங்களில் அவரால் அறிவிக்கப்ட்ட மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் பிரபலமானவை. ஆனால் ரயில்வேயின் மோசமான நிலையை சீர்திருத்த தேவையான முயற்சிகளை எடுக்கவில்லை என்ற எதிர்க் கட்சிகளின் கடும் விமர்சனங்களை மம்தா எதிர்கொண்டார். ஆனால் விமர்சனங்களை பெரிதாக எடுத்துக் கொள்ளாத அவர், தனது இலக்கை நோக்கி சென்றுக் கொண்டேயிருந்தார்.

மம்தா பானர்ஜி

பட மூலாதாரம், PRAKASH SINGH

அவரது இலக்கை நோக்கிய தொடர் முயற்சிகள் 2011ஆம் ஆண்டு லட்சியத்தை அடைய வைத்தது. சுமார் மூன்றரை தசாப்தங்களாக மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சியில் இருந்த வலுவான கம்யூனிஸ்ட் ஆட்சியை வீழ்த்தி, முதலமைச்சராக அரியணை ஏறினார் மம்தா பானர்ஜி.

மத்திய மற்றும் மாநில அரசிலும் ஆட்சியில் இருந்த மம்தா, 2012ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதியன்று மத்திய அரசுக்கு வழங்கிய ஆதரவை திரும்பப் பெற்றார். அவரது அரசியல் வாழ்க்கையில் இதுபோன்ற பல சர்ச்சைக்குரிய முடிவுகளை அவர் தைரியமாக எடுத்துள்ளார். இதனால், சுயநலமானவர், விசித்திரமானவர், தற்பெருமை கொண்டவர் என பல விமர்சங்களையும் அவர் எதிர் கொண்டார்.

சர்வாதிகாரி என்ற விமர்சனத்தையும் மம்தா பானர்ஜி விமர்சிக்கப்படுகிறார். ஆனால், மாநிலத்தின் கடன் இரண்டு லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிலையில் அவர் அமல்படுத்திய மக்கள் நலத் திட்டங்கள், அவரது துணிச்சலையும், மக்களின் மீதான அக்கறையையும் வெளிப்படுத்துவதாக இருந்தன.

ஊழல் அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு வழங்குவது உட்பட பல விமர்சனக்களையும் மம்தா எதிர்கொண்டாலும், அவரை கடுமையாக விமர்சனம் செய்பவர்கள் கூட, தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் நேர்மையானவர் என்பதை மறுப்பதில்லை.

இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்தபோது, 1993ஆம் ஆண்டு ஜுலை 21ஆம் தேதியன்று, சில கோரிக்கைகளை முன்வைத்து, எழுத்தாளர் சங்கத்திற்கு பேரணியாக சென்றபோது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.

அப்போதிருந்து ஆண்டுதோறும் ஜுலை 21ஆம் தேதியன்று தியாகிகள் பேரணியை மம்தா பானர்ஜி நடத்தி வருகிறார். அந்த பேரணியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்த தலா ஒருவருக்கு அரசு வேலை அளித்திருக்கும் மம்தா, அந்த குடும்பங்களுக்கு பொருளாதார உதவிகளையும் செய்து கொடுத்திருக்கிறார்.

அந்த பேரணியின்போது ஏற்பட்ட தள்ளு-முள்ளு சம்பவத்தில் மம்தா அணிந்திருந்த சேலை கிழிந்துபோனது. "இடதுசாரிகளை ஆட்சியில் இருந்த அகற்றியபிறகுகே இந்த எழுத்தாளர் சங்க கட்டடத்திற்குள் நுழைவேன்' என்று அன்றைய தினம் சபதம் மேற்கொண்ட மம்தா, 2011 ஆண்டு தனது சபதத்தை நிறைவேற்றிய பிறகு தான் எழுத்தாளர் சங்க கட்டடத்திற்குள் காலடி எடுத்து வைத்தார்.

மம்தா பானர்ஜி

பட மூலாதாரம், The India Today Group

ஒரு அரசியல்வாதியாக நன்கு அறியப்பட்ட மம்தா, கவிஞர், எழுத்தாளர், ஓவியர் என பன்முகத்திறமை கொண்டவர். கடந்த சட்டமன்ற தேர்தல் சமயத்தில் தனது ஓவியங்களை விற்பனை செய்து கிடைத்த பல லட்ச ரூபாய் நிதியை கட்சி தேர்தல் பிரசாரத்திற்காக வழங்கினார். இருந்தாலும்கூட, அந்த ஓவியங்களை வாங்கியவர் யார் என்பது பற்றி பிறகு பலவிதமான கேள்விகள் எழுந்து.

மாநிலத்தில் நிதிமோசடி திட்டங்களில் சிக்கிய பல நிதி நிறுவனங்களின் உரிமையாளர்கள், மம்தாவின் ஓவியங்களை வாங்கியவர்களின் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர் என்பதால் எதிர்க்கட்சியினர் மம்தாவை கடுமையாக விமர்சித்தனர். முதலமைச்சராக மம்தா பதவியேற்ற பிறகு, அவரது கவிதை மற்றும் கதைகள் டஜன் கணக்கில் வெளியாகியுள்ளது என்பதும் விமர்சனங்களை எழுப்பின. தனது உரைகளில் ரவீந்திரநாத் தாகூர் மற்றும் சரத் சந்திரா ஆகியோரைக் குறிப்பிட்டு பேசும் வழக்கம் கொண்டவர் மம்தா பானர்ஜி.

மாநிலத்தில் ஒரு நீண்ட இன்னிங்ஸ் விளையாடிய பிறகு, தற்போது தேசிய அரசியலில் முக்கியமான பதவியை வகிக்க மம்தா மிகவும் ஆவலாக உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இது குறித்து கூறும் அரசியல் நிபுணர் விஸ்வநாத் கோஷ், "2016ம் ஆண்டில் இரண்டாவது முறையாக மாநிலத்தில் ஆட்சிக்கு வந்த பிறகு, மம்தாவின் அரசியல் லட்சியங்கள் மேலும் விரிவடையத் தொடங்கிவிட்டன. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்களும் இதையே விரும்புகின்றனர்."

இந்த இலக்கை அடையும் முயற்சியில், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர்களை ஒன்றிணைக்க மம்தா பானர்ஜி முயன்று வருகிறார். தீதி பிரதமராவது உறுதி என்று சூளுரைக்கிறார் மம்தா பானர்ஜிக்கு நெருக்கமானவரான முன்னாள் போக்குவரத்து அமைச்சர் மதன் மித்ரா.

கொல்கத்தாவில் மம்தா தர்ணா போராட்டம் நத்தியபோது அங்கு சென்ற ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, இந்த பொதுத்தேர்தலில் மாநிலத்தின் 42 மக்களவை தொகுதிகளையும் திரிணாமுல் காங்கிரஸ் வென்றுவிடும் என்று நம்பிக்கை வெளியிட்டிருக்கிறார். அவரது ஆரூடம் பலித்தால், மத்தியில் யார் ஆட்சி அமைத்தாலும் அதில் தீதியின் பங்கு மிகவும் முக்கியமானதாக மாறிவிடும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :