பாலகோட் இந்திய விமான தாக்குதல்: தேர்தலை கருத்தில் கொண்டே இந்தியா இதுபோல செய்துள்ளது - பாகிஸ்தான் அமைச்சர்

பட மூலாதாரம், Getty Images
தங்கள் நாட்டின் இறையாண்மையை இந்தியா மீறிவிட்டதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் குற்றஞ்சாட்டி உள்ளார்.
கட்டுப்பாட்டு எல்லை கோட்டை மீறிவிட்டதாகவும், இதற்கு தக்க பதிலடி கொடுக்க பாகிஸ்தானுக்கு அனைத்து உரிமைகளும் உண்டு என பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி கூறி உள்ளார்.
சூழல் மிகவும் பதற்றமாக உள்ளதாகவும், அதனை மேலும் அதிகரிக்க விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முகாமை குறி வைத்து இன்று அதிகாலை இந்தியா தாக்குதல் நடத்தியதாக இந்திய வெளியுறவுச் செயலர் விஜய் கோகலே தெரிவித்ததை அடுத்து பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் அவசர கூட்டம் நடந்தது.
இதில் கலந்து கொண்ட குரேஷி இவ்வாறாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், "இந்தியா தனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள பொய்யான ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை சுமத்துகிறது. தேர்தலை கருத்தில் கொண்டு இந்தியா இவ்வாறாக நடந்து கொண்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், @SMQURESHIPTI
அனைத்து சூழ்நிலைகளுக்கும் அனைத்து தரப்பினரும் ராணுவம் முதல் சாமானிய மக்கள் வரை தயாராக இருக்கும்படி பாகிஸ்தான் பிரதமர் வலியுறுத்தி உள்ளார் என்றும் குரேஷி கூறினார்.
இது பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல்; பாகிஸ்தான் தக்க பதிலடி கொடுக்கும் என்றும் கூறினார்.
"திறனை சந்தேக்கிக்காதீர்கள்"
பாகிஸ்தான் இதற்கு பதில் கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாமா? என்று நிருபர் கேட்ட கேள்விக்கு, பாகிஸ்தான் விமானப்படையின் திறனை சந்தேகிக்க கூடிய கேள்வியை இப்போது கேட்காதீர்கள். பாகிஸ்தான் ராணுவ தலைமைக்கும், அரசியல் தலைமைக்கும் எப்போது பதிலடி கொடுக்க வேண்டும், என்ன பதிலடி கொடுக்க வேண்டும் என்று தெரியும் என்று அவர் கூறினார்.

சர்வதேச ஊடகங்களை தாக்குதல் நடந்த இடத்திற்கு அழைத்து செல்வோம். ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் உள்ளன. தற்போது வானிலை சரியில்லை. வானிலை சரியான பின்பு அழைத்து செல்வோம் என்றும் குரேஷி கூறியதாக ஏ.என்.ஐ செய்தி முகமை கூறுகிறது.
நேரமும், இடமும் முடிவு செய்யப்படும்
முன்னதாக, இந்தியாவுக்கு பதிலடி தருவதற்கு நேரமும், இடமும் முடிவு செய்யப்படும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார்.

இந்திய விமான படைகளுக்கு எதிராக சரியான நேரத்தில் எதிர்வினையாற்றிய பாகிஸ்தானிய விமானப் படைக்கும் வாழ்த்து தெரிவித்து இருந்தார் இம்ரான்கான்.
எந்த சூழ்நிலைக்கும் தயாராக இருக்கும்படியும் படைகளை வலியுறுத்தி உள்ளார் அவர்.
தொடர்புடைய செய்திகள்:
- LIVE: இந்திய விமானப்படை ஜெய்ஷ்- இ-முகமது முகாம் மீது தாக்குதல் நடத்தியது எப்படி?
- இந்திய தாக்குதலை நேரில் பார்த்த பாகிஸ்தானியர் சொல்வதென்ன? - BBC EXCLUSIVE
- இந்தியா பதிலடி தாக்குதல் நடத்திய பாலகோட் எங்கிருக்கிறது?
- இந்திய விமானப் படை தாக்குதல் குறித்து என்ன சொல்கின்றன பாகிஸ்தான் ஊடகங்கள்?
- இந்தியா விமான படை தாக்குதல்: கடந்த 70 ஆண்டுகளாக காஷ்மீரில் நடப்பது என்ன?
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












