கங்கை நதியை காப்பாற்ற 40 நாளாக உண்ணாவிரதம் இருக்கும் சாது ஆத்மபோதானந்த்

கங்கை நதி

பட மூலாதாரம், MANSI THAPLIYAL

    • எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

இந்தியாவில் மாசடைந்துள்ள கங்கை நதியை சுத்தப்படுத்தி புத்துயிர் அளிக்க அரசுகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி பல தசாப்தங்களாக சாமியார்கள் உண்ணாவிரதம் இருந்து வந்தனர். சமீபத்தில் அப்படி இருந்த ஒருவர் உயிரிழந்தது தலைப்புச் செய்தியானது. இந்த விவகாரத்தை பற்றி மேலும் தெரிந்து கொள்ள அங்கு சென்றார் பிபிசி செய்தியாளர் சௌதிக் பிஸ்வாஸ்.

ஹரித்வார் அருகே உள்ள அமைதியான ஆசிரமம் ஒன்றில் உள்ள இளம் சாமியார் ஒருவர், கங்கை நதியை காப்பாற்ற தாம் இறந்து போகக்கூட தயாராக இருப்பதாக கூறுகிறார்.

அந்த ஆசிரமத்தில் இருந்த நன்கு அறியப்பட்ட நபர் ஒருவர் உண்ணாவிரதம் இருந்து இரண்டு மாதங்களுக்கு முன் உயிரிழந்தார். அதனை தொடர்ந்து தற்போது ஆத்மபோதானந்த் என்ற சாமியார், 40வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

26 வயதாகும் இவர், கேரளா மாநிலத்தை சேர்ந்தவர். கணிணி அறிவியல் படிப்பை பாதியில் விட்டுவிட்டார். பல நாட்களாக அங்குள்ள மாங்காய் மரத்தின் கீழ், ஒரு போர்வை போட்டு படுத்துக் கொண்டிருக்கிறார். இரவு நேரத்தில் குளிர் அதிகமாவதால், அருகில் உள்ள வசிப்பிடத்தின் உள்ளே சென்று உறங்குவார்.

"நான் இறக்க தயாராக உள்ளேன். அப்படி பல தியாகங்களை செய்த வரலாறு எங்கள் ஆசிரமத்திற்கு உண்டு" என்கிறார் அவர்.

மத்ரி சதன், நதிக்கரை ஓரத்தில் இருக்கும் மூன்று ஏக்கர் பரப்பளவு உள்ள மரங்கள் நிறைந்த ஆசிரமம்.

கங்கை நதி

பட மூலாதாரம், Getty Images

கடந்த அக்டோபர் 24ஆம் தேதி முதல் உணவு எடுத்துக் கொள்வதை ஆத்மபோதானந்த் நிறுத்திக் கொண்டார். தற்போது, உப்பு மற்றும் தேன் கலந்த தண்ணீரில் மட்டுமே உயிர் வாழ்கிறார். அந்த ஆசிரமம் தொடங்கிய 1997ஆம் ஆண்டில் இருந்து அங்கிருப்பவர்கள் நடத்திய உண்ணாவிரதங்களில் இது 60வது உண்ணாவிரதம் ஆகும்.

இது போன்ற போராட்டம் மற்றும் உண்ணாவிரதத்தால், அந்த ஆசிரமத்தில் இருக்கும் சாமியார்கள், பெரிய அணைகள் கட்டுவது, மணல் கடத்தல் ஆகியவற்றை தடுப்பது, நதியை சுத்தப்படுத்துவது, அதனை பாதுகாக்க சட்டம் கொண்டு வருவது என அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். இவர்களின் கோரிக்கையை முந்தைய அரசாங்கங்கள் ஏற்றுக் கொண்டும் இருக்கின்றன.

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு 36 வயதான ஸ்வாமி நிகமானந்த், 115 நாட்கள் உணவு எடுத்துக் கொள்ள மறுத்து உயிரிழந்தார். இதுவே அந்த ஆசிரமத்தின் வரலாற்றில் நீண்ட நாட்கள் இருந்த உண்ணாவிரதம் ஆகும். நதியின் அருகே, கல்குவாரிகளை அமைப்பதை நிறுத்த வேண்டும் என அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

ஆசிரமத்தில் இருக்கும் மற்றொரு சாமியாரான 39 வயதான கோபால் தாஸ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரை உயிருடன் இருக்க வைக்க, அவரது விருப்பத்திற்கு மாறாக அவருக்கு உணவு அளிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், கடந்த அக்டோபர் மாதம் உயிரிழந்த 86 வயதான முன்னாள் சூழலியாளர் பொறியாளர் ஜிடி அகர்வாலின் மரணம்தான் சர்வதேச அளவில் செய்தியானது. ஸ்வாமி கியான் ஸ்வரூப் சனானந்த் என்று அறியப்படும் அகர்வால், 111 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து இறந்து போனார்.

111 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்த சூழலியாளர் ஜிடி அகர்வால்

பட மூலாதாரம், PRESS TRUST OF INDIA

படக்குறிப்பு, 111 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்த சூழலியாளர் ஜிடி அகர்வால்

கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான அகர்வால், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் பொறியாளராக பணிபுரிந்தார். அதோடு, கங்கையை சுத்தப்படுத்த அரசாங்கம் அரை மனதுடன் எடுத்த முயற்சிகளை விமர்சித்தும் வந்தார்.

2011ஆம் ஆண்டு தன் வாழ்க்கையை துறந்து, சாமியார் ஆனார். அவர் இறப்பதற்கு முன்பாக அவரது கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமர் மோதிக்கு மூன்று கடிதங்கள் எழுதினார். ஆனால், எதற்கும் பதில் வரவில்லை.

அவர் இறந்த இரண்டு வாரங்களிலேயே, ஆத்மபோதானந்த் தனது உண்ணாவிரதத்தை தொடங்கினார். ஒருவர் உண்ணாவிரதம் இருப்பது, நதிகள் இறப்பதில் இருந்து மீட்க முடியும் என அவர் நம்புகிறார்.

இந்தியாவின் மிக நீளமான நதியான கங்கை நதி, இமயமலையில் தொடங்கி, வங்காள வரிகுடாவில் போய் சேர்கிறது. 2,500 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த நதியின் தண்ணீர் அளவு குறைந்து வருவது பலரின் கவலையாக உள்ளது. இந்திய மக்கள் தொகையில் கால் பாதி பேர் இதனை நம்பி உள்ளனர்.

உலகில் மாசடைந்த நதிகளில் கங்கையும் ஒன்று

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உலகில் மாசடைந்த நதிகளில் கங்கையும் ஒன்று

இந்துக்கள் கங்கை நதியை கடவுளாக பார்க்கிறார்கள். இதில் குளித்தால், அவர்கள் செய்த பாவங்கள் நீங்கிவிடும் என்றும் நம்புகிறார்கள்.

ஆனால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட நீர்பாசண அணைகளால், கங்கை நதி அடைபட்டு தவிக்கிறது. நிலத்தடி நீரை கவலையில்லாமல் உறிஞ்சு எடுப்பதால் நதியோரத்தில் உள்ள வளம் பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு, தொழிற்சாலை கழிவுகள் மற்றும் வீட்டிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் அந்நதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

1984ஆம் ஆண்டு ஹரித்வாரில் பாயும் கங்கை நதியில், யாரோ ஒருவர் பற்ற வைத்த தீக்குச்சியை தண்ணீரில் போட, நதி தீப்பற்றி எரிந்தது.

"மாசுப்படுத்தி கங்கை நதியை இந்தியர்கள் கொல்ல, மறுபக்கத்தில் மாசடைந்த கங்கை நதி இந்தியர்களை கொன்று வருகிறது" என்கிறார் River of Life, River of Death புத்தகத்தின் ஆசிரியர் விக்டர் மெல்லட்.

கங்கையை சுத்தப்படுத்துவதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்த நரேந்திர மோதியின் பாஜக அரசு, தற்போது நதியை பாதுகாக்க எந்த ஆர்வமும் காட்டவில்லை என அந்த ஆசிரமத்தில் வாழும் சாமியார்கள் கூறுகின்றனர்.

உயிரிழந்த அகர்வால், இந்து தேசியவாத அமைப்புடன் நெருக்கமாக இருந்தும், முந்தைய காங்கிரஸ் அரசு அவரது குரலை கவனித்து கேட்ட அளவிற்கு பாஜக கேட்கவில்லை என்பது முரண்பாடாக உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

கங்கை நதி

பட மூலாதாரம், MANSI THAPLIYAL

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, எட்டு முறை உண்ணாவிரதம் இருந்த அகர்வால், நதியின் குறுக்கே அணை கட்டும் முடிவை நிறுத்தி, நதியின் முக்கிய 100 கிலோ மீட்டர் நீளத்தை ’சென்சிடிவான’ பகுதியாக அறிவிக்கச் செய்தார்.

"நாங்கள் நதிக்காக உயிரிழப்போம். அரசாங்கத்திற்கு ரத்தம்தான் வேண்டும் என்றால், நாங்கள் ரத்தத்தை அளிப்போம்" என்கிறார் அந்த ஆசிரமத்தின் தலைவரான 72 வயதாகும் ஸ்வாமி சிவானந்த். இவரும் கடந்த காலத்தில் உண்ணாவிரதம் இருந்துள்ளார்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, துறவு வாழ்க்கை வேண்டி உத்தர்கண்டில் உள்ள ஹரித்வாருக்கு பயணம் மேற்கொண்டார் ஆத்மபோதானந்த். சாமியார்கள் வாழும் வாழ்க்கையை பார்த்து பிடித்துப்போய், இமயமலையில் மறைந்து தன் வாழ்க்கையை முடித்துக்கொள்ள முடிவு செய்தார்.

அப்போதுதான், ஸ்வாமி சிவானந்தை அவர் சந்தித்தார். பின்னர் ஆசிரமத்தில் தியானம் மேற்கொள்வதில் கவனம் செலுத்த தொடங்கினார்.

2014ஆம் ஆண்டில் இருந்து ஆத்மபோதானந்த், எட்டு முறை உண்ணாவிரதம் இருந்துள்ளார். பல்வேறு விஷயங்களுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து, அந்த கோரிக்கைக்கு அரசு செவி சாய்த்த பிறகே அவர் போராட்டத்தை கைவிட்டுள்ளார்.

ஸ்வாமி புன்யானந்த்

பட மூலாதாரம், MANSI THAPLIYAL

படக்குறிப்பு, ஸ்வாமி புன்யானந்த்

"இந்த முறை இதனை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்" என்கிறார் அவர்.

உண்ணாவிரதப் போராட்டம் என்பது இந்தியாவுக்கு புதிதல்ல. இந்தப் போராட்டத்திற்கு பெயர் போனவர் காந்தி.

தெற்சாசிய அணைகள் அமைப்பை சேர்ந்த நீர் வல்லுநரான ஹிமான்ஷூ தாக்கர் கூறுகையில், மத்ரி சதானில் இருக்கும் சாமியார்கள் இருந்த உண்ணாவிரதங்கள், சில தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மைதான். மணல் சுரண்டுவது நிறுத்தப்பட்டு, கல் குவாரி தொழிற்சாலைகளை அங்கிருந்து அகற்றப்பட்டன. ஆனால், ஒரு பெரும் தந்திரத்தின் ஒரு பகுதியாகவே இது இருக்க வேண்டும் என்பதே என் எண்ணம் என்று குறிப்பிடுகிறார்.

கங்கை நதி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளை சுத்தப்படுத்த 3 பில்லயின் டாலர்கள் அளவிற்கு 254 திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், பெரும்பாலான நடவடிக்கைகள் அடுத்த ஆண்டுக்குள் நிறைவடையும் என்று பாஜகவின் நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். "கங்கையை புதுப்பிக்கும் மக்களின் கனவு விரைவில் நிறைவேறும்" என்றும் அவர் சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்தார்.

ஆனால், அரசாங்கம் செய்வது போதாது என்று சாமியார்கள் கூறுகின்றனர். அதனால் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

"அடுத்த வரிசையில் நான்தான் உள்ளேன். இந்த முறை நாங்கள் நிறுத்த மாட்டோம்" என்கிறார் ஆசிரமத்தில் வசிக்கும் 61 வயதான ஸ்வாமி புன்யானந்த்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: