ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான விசாரணையில் அஜித் தோவல் தலையிட்டார்: சிபிஐ டிஐஜி

பட மூலாதாரம், Getty Images
மத்திய புலனாய்வு முகமையின் விசாரணையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலையிட்டதாக உச்சநீதிமன்றத்தில் சிபிஐ டிஐஜி எம்.கே. சின்ஹா மனு தாக்கல் செய்துள்ளார்.
சிபிஐயின் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீதான விசாரணையில் தலையிட்டார் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை உச்ச நீதிமன்றம் செவ்வாயன்று விசாரிக்கும்.
அஸ்தானாவின் வீட்டில் சோதனை நடத்துவதற்கு தோவல் தடை விதித்ததாக சின்ஹா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா லஞ்சம் வாங்கியதான குற்றச்சாட்டை விசாரித்துவந்த சி.பி.ஐ. அதிகாரிகளில் சின்ஹாவும் ஒருவர். அதுமட்டுமல்ல பிறகு அக்டோபர் மாதத்தில் பிற அதிகாரிகளுடன் சேர்ந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்களில் சின்ஹாவும் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அஸ்தானா லஞ்ச வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு இடைத்தரகர்களுடன் தோவல் நெருக்கமாக இருந்ததாக சின்ஹா குற்றம் சாட்டியுள்ளார்.
லஞ்ச ஊழல் வழக்கு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட சனா சாதீஷ் பாபுவிடம் விசாரணை நடத்தியபோது, இந்த விவகாரத்தில் உதவி செய்ததற்காக நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் ஹரிபாயி பார்திபாயி செளத்ரிக்கு பல கோடி ரூபாய் லஞ்சம் வழங்கப்பட்டது தெரிய வந்திருப்பதாகவும் சின்ஹா தெரிவித்துள்ளார்.
'ரா' அதிகாரி சமாந்த் கோயாலுடனான உரையாடலின் பதிவுகள் சேதப்படுத்தப்பட்டதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. அந்த பதிவில், சிபிஐ விவகாரத்தை பிரதமர் அலுவலகம் கவனித்துவருவதாக சாமந்த் கூறியிருந்தார். அன்றைய இரவே அஸ்தானாவை விசாரித்த சி.பி.ஐ. குழுவில் இருந்த அனைவரும் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மொயின் குரேஷி வழக்கில் மத்திய புலனாய்வு ஆணையர் கே.வி.செளத்ரியை, சனா சதீஷ் பாபு சந்தித்திருக்கிறார். மத்திய சட்டத்துறைச் செயலாளர் சுரேஷ் சந்திரா, நவம்பர் 11ஆம் தேதியன்று சனாவை தொடர்பு கொண்டார்.

பட மூலாதாரம், PTI
"மனோஜ் பிரசாத் (அஸ்தானாவுக்கு எதிரான வழக்கில் கைது செய்யப்பட்டவர்) கூறியதன்படி,, மனோஜின் தந்தை தினேஷ் பிரசாத் மற்றும் 'ரா' அமைப்பின் இணைச் செயலாளராக பணியாற்றிய சோமேஷ் ஆகியோர் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உடன் நெருக்கமான உறவு கொண்டுள்ளனர்" என்று சின்ஹா தனது மனுவில் கூறியுள்ளார்.
அக்டோபர் 15ஆம் தேதியன்று அஸ்தானாவுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட தகவலை, அக்டோபர் 17ஆம் தேதியன்று அஜித் தோவலிடம் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா தெரிவித்தார் என்று குறிப்பிட்டுள்ளார் சின்ஹா.
"முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த அன்று இரவே அஜித் தோவலை அழைத்து விவரத்தை தெரிவித்த அஸ்தானா, தன்னை கைது செய்யாமல் தடுக்கவேண்டும் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகரிடம் கோரிக்கை வைத்தார்" என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
விசாரணை அதிகாரி ஏ.கே.பக்ஸி, அஸ்தானாவிடம் இருந்து அவரது மொபைல் போனை பறிமுதல் செய்ய அனுமதி கோரியபோது, "சிபிஐ இயக்குநர் அதற்கு உடனடியாக அனுமதி கொடுக்கவில்லை. இதற்கான அனுமதியை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இன்னமும் கொடுக்கவில்லை என்று தெரிவித்தார்" என்பதையும் சின்ஹா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அக்டோபர் 22ஆம் தேதியன்று சிபிஐ இயக்குநரிடம் எழுத்துபூர்வமாக அனுமதி கோரியபோதிலும், பிறகு கோரிக்கை நிராகரிக்கப்பட்டது என்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
அஸ்தானாவுக்கு எதிரான வழக்கு என்ன?
சிபிஐ சிறப்புக் குழுவின் விசாரணையில் இருந்து விடுவிக்க ஆஸ்தானா மூன்று கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக ஹைதராபாதை சேர்ந்த தொழிலதிபர் சதீஷ் பாபு அளித்த புகாரின் பேரில் ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
அஸ்தானா மீது மோசடி மற்றும் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
துபாயில் வசிக்கும் மனோஜ் பிரசாத் என்பவரின் உதவியுடன் லஞ்சம் வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றதாக சதீஷ் பாபு கூறியதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சிபிஐயில் தனக்கு ஆட்கள் இருக்கிறார்கள் என்றும், விசாரணையை நிறுத்தும் அளவு தனக்கு அவர்களிடம் உறவு இருப்பதாகவும் சனாவிடம் மனோஜ் பிரசாத் உறுதி கூறியதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ராகேஷ் அஸ்தானாவின் தலைமையிலான சிறப்பு விசாரணை குழு அந்த வழக்கை விசாரித்துக் கொண்டிருந்தது.
யார் இந்த ராகேஷ் அஸ்தானா?

பட மூலாதாரம், Getty Images
1984ஆம் ஆண்டு குஜராத் மாநில பிரிவைச் சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரியான ராகேஷ் அஸ்தானா, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்தவர்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்த அவர், நரேந்திர மோதி மற்றும் அமித் ஷாவுக்கு நெருக்கமான அதிகாரிகளில் ஒருவராக கருதப்படுகிறார்.
குஜராத், கோத்ரா ரயில் தீ வைக்கப்பட்ட வழக்கை விசாரித்த குழுவில் இடம்பெற்றவர் அஸ்தானா. நரேந்திர மோதி பிரதமரான போது குஜராத்தில் இருந்து மத்திய அரசுக்கு அழைக்கப்பட்ட 20 அதிகாரிகளில் அஸ்தானாவும், நிதியமைச்சகத்தில் செயலராக பதவி வகிக்கும் ஹஸ்முக் அதியாவும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவர்கள்.
தனது பணிக்காலத்தில் ராகேஷ் அஸ்தானா விசாரித்த பல முக்கியமான வழக்குகள் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் மிகவும் முக்கியமான வழக்குகளாக கருதப்படுபவை என்பதை குறிப்பிட்டுச் சொல்லலாம்.
பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் சம்பந்தப்பட்ட கால்நடைத் தீவன மோசடி வழக்கு, அகமதாபாத் குண்டு வெடிப்பு, ஆசாராம் பாபுவுக்கு எதிரான வழக்கு என பலவற்றை ராகேஷ் அஸ்தானா விசாரித்திருக்கிறார்.
ஆனால் கால்நடைத் தீவன வழக்கில் லாலு பிரசாத் யாதவிடம் தொடர்ந்து ஆறு மணி நேரம் விசாரணை நடத்திய பிறகுதான், ராகேஷ் அஸ்தானா பிரபலமானார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












