"நச்சுக் காற்று கொல்கிறது; ஆனாலும் வேறு வழியில்லை" - குமுறும் டெல்லி ரிக்க்ஷா ஓட்டுனர்கள்

பட மூலாதாரம், Ankit Srinivas
- எழுதியவர், விகாஸ் பாண்டே
- பதவி, பிபிசி
"ரிக்க்ஷவை மிதிக்கும்போது எனக்கு கண்கள் எரிகின்றன, சுவாசிக்க முடியவில்லை, உடலோ இந்த வேலையை விட்டுட்டு டெல்லி நச்சுக்காற்றிலிருந்து தப்பித்துப்போ என்கிறது; ஆனாலும், எனது குடும்பத்துக்காக தொடர்ந்து ரிக்க்ஷா மிதித்து வருகிறேன். நான் வேறு எங்கு செல்வது? இங்குள்ள தெருக்கள் எங்களது வீடுகள்" என்று கூறுகிறார் சஞ்சய் குமார்.
பீகாரிலிருந்து பிழைப்பை தேடி ஐந்து வருடங்களுக்கு முன்னர் டெல்லிக்கு வந்த சஞ்சய்க்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதனால், வேறு வழியின்றி ரிக்க்ஷா ஓட்ட ஆரம்பித்த சஞ்சய், அதில் கிடைக்கும் சிறிதளவு பணத்தை செலவுகளுக்கு வைத்துக்கொண்டு, மீதியை ஊரில் இருக்கும் குடும்பத்துக்கு அனுப்புகிறார்.
பெருமளவு பணத்தை குடும்பத்தினருக்கு அனுப்பிய இவரால் தனியே வாடகைக்கு வீடு எடுக்க முடியாத காரணத்தால் தெருவோரங்களில் வசிக்க தொடங்கினார்.
"ஒரு மெத்தையில் தூங்க வேண்டுமென்பது எனது ஆசை; அது நீண்டதூரத்திலுள்ள கனவு என்றும் எனக்கு தெரியும். சரியான உணவு உண்பதும் அரிதானதாக உள்ளது. குறைந்தபட்சம் நல்ல காற்றையாவது சுவாசிக்கலாமென்று நினைத்தால் குளிர்காலத்தில் அதுவும் இயலாத ஒன்றாகிறது" என்று அவர் மேலும் கூறுகிறார்.
டெல்லிக்கு அருகிலுள்ள மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் குளிர்காலத்தின்போது தங்களது நிலத்தை சுத்தம் செய்வதற்கு கழிவுகளை எரிப்பதால், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் டெல்லியில் நச்சுக் காற்றின் அளவு மோசமான கட்டத்தை அடைகிறது. அதுமட்டுமின்றி, இதே காலகட்டத்தில் வரும் தீபாவளி பண்டிகையின்போது வெடிக்கப்படும் பட்டாசுகள் நச்சு நிறைந்த காற்றின் தரத்தை மென்மேலும் மோசமடைய வைக்கிறது.

பட மூலாதாரம், Ankit Srinivas
டெல்லி மிகப் பெரிய நகரமாக இருந்தாலும் மக்களை அவர்களது வீடுகளுக்கு கொண்டுசேர்க்கும் பணியை இன்னமும் இதுபோன்ற ஆயிரக்கணக்கான ரிக்க்ஷா ஓட்டுனர்கள்தான் செய்துவருகிறார்கள். பாதுகாப்பான அளவைவிட டெல்லியின் சில இடங்களில் நச்சுக் காற்றின் அளவு 30 மடங்குகளுக்கு மேல் அதிகமாகும்போது, அதனால் அதிகம் பாதிக்கப்படுவது இந்த ரிக்க்ஷா ஓட்டுநர்கள்.
இதுபோன்ற மோசமான சூழ்நிலைகளின்போது காற்றிலுள்ள பிஎம் 2.5 என்ற நச்சு மூலக்கூறுகள் மூச்சின் வழியே உள்ளே சென்று நுரையீரலிலும், சில சமயங்களில் இரத்த ஓட்டத்திலும் கலப்பதால் இவர்களது நிலை அபாய கட்டத்தை அடைகிறது.

பட மூலாதாரம், Ankit Srinivas
சமீபத்தில் டெல்லியில் நிலவும் மோசமான காற்று தரம் குறித்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மக்கள், ரிக்க்ஷா ஓட்டுனர்கள் போன்றோரை இதுபோன்ற சூழ்நிலைகளில் வீட்டிற்குள்ளேயே இருக்க சொல்வது மட்டும் இந்த விவகாரத்துக்கு தீர்வாகாது என்று கூறியிருந்தது. மேலும், "ரிக்க்ஷா ஓட்டுனர்கள் அதிக உடல் உழைப்பு தேவைப்படும் வேலையை செய்கிறார்கள். காலையில் காற்றில் அதிகளவு மாசு இருக்கும் என்பதற்காக அவர்களை நீங்கள் வேலையை செய்ய வேண்டாம் என்று கூறமுடியாது. இது மிகவும் மோசமான நிலைமை" என்று உச்சநீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருந்தது.
நான் சந்தித்த கிட்டத்தட்ட அனைத்து ரிக்க்ஷா ஓட்டுநர்களும் தங்களுக்கு இருமல் அல்லது மூச்சு விடுவதில் பிரச்சனையுள்ளது என்று கூறினார்கள். சிலர் தங்களது பேச்சை முடிப்பதற்கு கூட சிரமப்பட்டனர். நான் சென்ற ஒரு மெட்ரோ ரயில் நிலையத்தில் அப்போது மிக கடுமையான நச்சுக் காற்றுடன் கூடிய பனி சூழ்ந்திருந்தது. அதாவது சில மீட்டர் தூரத்தில் இருப்பதைக் கூட பார்க்கமுடியாத சூழல். ஆனால், அந்நிலையிலும் சிரமப்பட்டு ரிக்க்ஷா மிதிக்கும் பலரை அங்கு காணமுடிந்தது.
கடந்த ஏழு வருடங்களுக்கு முன்னர் பிழைப்பை தேடி டெல்லிக்கு வந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த மற்றொரு ரிக்க்ஷா ஓட்டுனரான ஜெய் சந்த் ஜாதவ், தனது பணியில் சிறிதுகாலம் ஓய்வெடுப்பதென்பது இதற்கு தீர்வாகாது என்று கூறுகிறார்.

பட மூலாதாரம், Ankit Srinivas
"நான் ஒரு ஒருநாளைக்கு ஈட்டும் 300 ரூபாயில் உணவுக்கு சிறிது தொகையை செலவழித்துவிட்டு, மீதியை என்னை நம்பி இருக்கும் மனைவிக்கும், இரண்டு குழந்தைகளுக்கும் அனுப்பி வைக்கிறேன். என்னுடைய குடும்பம் என்னை மட்டுமே நம்பியுள்ளது. எனக்கு சுவாசிப்பதில் பிரச்சனை இருந்தாலும், நான் தொடர்ந்து ரிக்க்ஷா மிதித்துக்கொண்டேதான் இருக்க வேண்டும்." என்று அவர் கூறுகிறார்.
காலை ஆறு மணியளவில் தனது நாளை தொடங்கும் ஜாதவ், அருகிலுள்ள மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சென்று பணியை ஆரம்பிக்கிறார். அருகிலுள்ள கோயில்கள், ஆதரவு இல்லங்களில் இலவச உணவு வழக்கப்படுகிறதா என்று பார்த்தவாறு பதினோரு மணிவரை பணிபுரிகிறார்.

பட மூலாதாரம், Ankit Srinivas
இலவச உணவே கிடைக்காத சூழ்நிலையில்தான் தனது பணத்தை கொண்டு ஜாதவ் உணவு வாங்குகிறார். நள்ளிரவு வரை தொடர்ந்து ரிக்க்ஷா ஓட்டும் இவர் இடையிடையே சவாரி கிடைக்காதபோது மட்டுமே ஓய்வெடுக்கிறார். அருகிலுள்ள உணவகங்கள் அன்றைய தினத்தில் மிஞ்சிய உணவு பொருட்களை இலவசமாக விநியோகிப்பதை நம்பியே இவரது இரவு உணவு இருக்கிறது.
"உணவே கிடைக்காத சில சமயங்களில் ஒன்றுமே உண்ணாமல் ரிக்க்ஷா ஓட்டிய அனுபவம் எனக்கு உள்ளது. ஆனால், என்னால் இந்த நச்சுக் காற்றை சமாளிக்க முடியவில்லை. நெஞ்சில் 50 கிலோ எடையை சுமந்துகொண்டு ரிக்க்ஷா மிதிப்பது போல உணர்கிறேன்" என்று அவர் கூறுகிறார்.
இருவாரங்களுக்கு முன்னர் கொண்டாடப்பட்ட தீபாவளி பண்டிகைக்குப் பிறகு தனது உடல்நிலை மோசமடைந்து உள்ளதாக இவர் கூறுகிறார்.
"காற்றின் தரம் ஏற்கனவே மிகவும் மோசமாக இருக்கும்போது மக்கள் ஏன் பட்டாசு வெடிக்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. மக்கள் பட்டாசு வெடித்துவிட்டு தத்தமது வீடுகளுக்குள் செல்கிறார்கள். ஆனால், தெருவோரத்தில் வசிக்கும் எனக்குதான் அனைத்து பிரச்சனைகளுமே ஏற்படுகின்றன. இங்குள்ள மக்கள் மற்றவர்களின் நிலையை எண்ணி செயல்படுவதே இல்லை" என்று அவர் மேலும் கூறுகிறார்.
ஜாதவ் தனது தினசரி வாழ்க்கையை விவரித்துக்கொண்டே இருக்கும்போது, அவரை சூழ்ந்த மற்ற ரிக்க்ஷா ஓட்டுனர்கள் தங்களது பிரச்சனைகள் குறித்தும் கூறத் தொடங்கினார்கள். அதில் ஒருவர் 18 மணிநேர வேலையை நள்ளிரவு முடித்துவிட்டு வந்த ஆனந்த் மண்டல் என்பவர்.

பட மூலாதாரம், Ankit Srinivas
"அவ்வளவு நேரம் தொடர்ந்து வேலை செய்வது மிகவும் சவாலானது. ரிக்க்ஷா மிதிக்கும்போது, எனது நெஞ்செல்லாம் எரிகிறது, சுவாசிப்பதற்கே மிகவும் சிரமப்படுகிறேன். இதேபோன்ற அறிகுறிகளை கொண்டிருந்த என்னுடைய நண்பர் ஒருவர் கடந்தாண்டு நிலைமை மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய சூழ்நிலைக்கு சென்றதால் பல மாதங்களுக்கு அவரால் ரிக்க்ஷா ஓட்ட முடியாத நிலை ஏற்பட்டது. அதே நிலை எனக்கும் ஏற்படக்கூடாது என்று கடவுளை பிராத்தித்து வருகிறேன்" என்று அவர் கூறுகிறார்.
டெல்லியிலுள்ள பெரும்பாலான ரிக்க்ஷா ஓட்டுனர்களின் கதை இதைப் போலவே உள்ளது.
டெல்லிக்கு வந்து ரிக்க்ஷா ஓட்ட ஆரம்பித்து இருபதாண்டுகளான ஹிமாசுதீன் என்பவர், தேசிய தலைநகர் இவ்வளவு மோசமான நிலையை அடைந்து இதுவரை பார்த்ததில்லை என்று கூறுகிறார்.

பட மூலாதாரம், Ankit Srinivas
"நான் ரிக்க்ஷா தொழிலை மேற்கொள்வதால் காற்று மாசடைவதற்கும் எனக்கும் பெரும்பாலும் சம்பந்தமே இல்லை. ரிக்க்ஷாக்கள் சுற்றுச்சூழலுக்கு தீங்கிழைக்காத போக்குவரத்து முறையாக உள்ளது. ஆனால், எவரோ செய்யும் செயல்களால் ஏற்படும் நச்சுக் காற்றினால் பாதிக்கப்படுவது என்னமோ நாங்கள்தான்" என்று அவர் கூறுகிறார்.
அரசாங்கம் ரிக்க்ஷா ஓட்டுனர்களுக்கு உதவவேண்டுமென்று அவர் வேண்டுகோள் விடுகிறார்.
"முதற்கட்டமாக அரசாங்கம் எங்களுக்கு தற்காலிக தங்குமிடத்தையாவது வழங்க வேண்டும். நாங்கள் செய்யாத தவறுக்காக நான் துளித்துளியாக இறந்து வருகிறேன். எங்களது மோசமான சூழ்நிலை குறித்து ஒருவர் கூட கவலைப்படுவதில்லை" என்று அவர் கூறுகிறார்.
அவரது ஏமாற்றத்தை புரிந்துகொள்ள முடியாது. ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில் காற்றின் தரம் மோசமான நிலையை அடையும்போது, மத்திய, மாநில அரசாங்கங்கள் மக்களை வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்துகின்றன. ஆனால், தெருவோரத்தில் வசிக்கும் இந்த ரிக்க்ஷா ஓட்டுனர்களுக்கு அந்த அறிவுறுத்தல்கள் பொருந்துவதில்லை.
"நச்சுக் காற்றை விட இன்னமும் பசியைதான் பெரிய பிரச்சனையாக உணர்கிறேன். அதனால்தான் எங்களை ஒருவர்கூட கண்டுகொள்வதில்லை. எனவே, என்ன நடக்கிறதோ இல்லையோ எங்களது பிழைப்பை காப்பதற்காக நாங்கள் தொடர்ந்து உழைத்துக்கொண்டேதான் இருக்க வேண்டும்" என்று கூறுகிறார் ஹிமாசுதீன்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












