ஆந்திர மாநிலத்துக்குள் சி.பி.ஐ செயல்படும் அதிகாரங்களை முடக்கிய சந்திரபாபு நாயுடு

பட மூலாதாரம், Getty Images
மத்தியப் புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ ஆந்திரப் பிரதேசத்துக்குள் நுழைந்து விசாரணை மற்றும் சோதனை மேற்கொள்ள அளிக்கப்பட்டிருந்த சட்டப்பூர்வ ஒப்புதலை அந்த மாநில அரசு விலக்கிக்கொண்டுள்ளது.
நவம்பர் 8ஆம் தேதியே அதற்கான ரகசிய அரசாணை, பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் அது தற்போது வெளியே கசிந்துள்ளது.
டெல்லி சிறப்பு காவல் அமைப்புச் சட்டம், 1946 பிரிவு 6-இன் கீழ், அந்தச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட அமைப்புகள் ஆந்திர எல்லைக்குள் தங்கள் அதிகாரங்களை பயன்படுத்த வழங்கப்பட்டிருந்த ஒப்புதலை திரும்பப்பெற்றுக் கொள்வதாக அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
சி.பி.ஐ அமைப்பு, மேலே குறிப்பிடப்பட்டுள்ள சட்டத்தின்கீழ் நிறுவப்பட்ட அமைப்பாகும். சி.பி.ஐ-க்கு டெல்லி மாநில எல்லைக்குள், தங்கள் அதிகாரங்களை பயன்படுத்த எந்த விதமான தடையும் இல்லை.
ஆனால், யூனியன் பிரதேசம், ரயில்வே பகுதிகள் அல்லாத மாநில எல்லைகளுக்குள் தமது அதிகாரங்களைப் பயன்படுத்த டெல்லி காவல் அமைப்புகளுக்கு சம்மந்தப்பட்ட அரசின் ஒப்புதல் தேவை என்று அந்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பிபிசி தமிழிடம் கருத்துத் தெரிவித்த சிபிஐ முன்னாள் இயக்குநர் டி.ஆர். கார்த்திகேயன், உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்கள் உத்தரவிட்டால், மாநில அரசின் அனுமதி இல்லாமலேயே சிபிஐ தங்கள் விசாரணைகளை எந்த மாநிலத்திலும் தொடர முடியும் என்று தெரிவித்தார்.
இத்தகைய அரசாணைகள், சிபிஐ-யின் வழக்கு விசாரணைகளில் குழப்பத்தை உண்டாக்கும், இது நாட்டுக்குத்தான் இழப்பு என்றும் கார்த்திகேயன் குறிப்பிட்டார்.
பிபிசியிடம் பேசிய சி.பி.ஐ முன்னாள் இணை இயக்குநர் லக்ஷ்மிநாராயணா, "இவ்வாறு உத்தரவிட மாநில அரசுக்கு சட்டப்படி உரிமை உள்ளது. ஆனால் அரசியலமைப்பின் நோக்கங்களை இது பாதிக்கும். இந்த உத்தரவால் ஆந்திர மாநிலத்தில் ஊழல் பெருக வாய்ப்புண்டு," என்று கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி உடனான கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியபின், வருமான வரித்துறை, சி.பி.ஐ உள்ளிட்ட அமைப்புகளை அரசியல் நோக்கத்துடன் மத்திய அரசு பயன்படுத்துவதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியிருந்தார்.
சந்திரபாபு நாயுடுவின் இந்த நடவடிக்கை, மத்திய - மாநில அரசுகளின் உரிமைகள் தொடர்பாகவும், அரசியல் சட்ட ரீதியான செயல்பாடுகள் குறித்த விவாதங்களையும் கிளப்பியுள்ளது.
இதுதொடர்பாக, இன்னும் மத்திய அரசுத் தரப்பிலிருந்து எதிர்வினை எதுவும் வரவில்லை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












