''பச்சை குத்துவது அப்படி என்ன பெருங்குற்றமா?" - கேள்வி எழுப்பும் பெண் #BeingMe

பெண்கள் தங்கள் சுயத்துடன் வாழ்வதில் என்னென்ன சவால்களையும், பிரச்சனைகளையும் சந்திக்கிறார்கள் என்று விளக்கும் பிபிசி தமிழின் #beingme தொடரின் ஆறாவது கட்டுரை இது.

பிபிசி

"பிரேக் தி ரூல்ஸ்…காதில் வளையம் போட்டால் தப்பு, உடம்பில் டாட்டூ குத்தினா தப்பு." - இது 'பாய்ஸ்' திரைப்படத்தில் வாழ்க்கையில் சாதிக்க துடிக்கும் இளைஞர்கள் பாடும் பாடல் வரிகள்.

"ஆம் காதில் வளையம் போட்டால் தப்பு, உடம்பில் டாட்டூ குத்தினால் தப்பு" இது இங்கு அனைவருக்கும் அல்ல சில பெண்களுக்கு மட்டும்.

என் உடல் என் உரிமை

இது என் உடல் இது தொடர்பாக எனக்கு மட்டுமே உரிமை உண்டு என்று இன்றளவும் எத்தனை பெண்களால் சமூகத்துக்கோ ஏன் அவளது குடும்பத்துக்கோ உரக்க கூறிவிட முடியும்?

"இருக்கிற பிரச்சனைகளில் இதுதெல்லாம் ஒரு பிரச்சனையா" என்றுகூட நீங்கள் நினைக்கலாம். ஆனால் இங்கு சிறு சிறு விஷயங்கள்தான் பெரியதொரு விஷயங்களின் ஆரம்ப புள்ளியாக அமைகிறது.

Presentational grey line
Presentational grey line

இன்று பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகள் அனைத்துமே அவர்கள் குறித்த சமூக கண்ணோட்டம்தான் காரணம் என்று கூறலாம்.

டாட்டூ குத்தி இருக்கும் பெண்கள் குறித்தான பொது புத்தி என்ன? அவள் எப்படி பார்க்கப்படுகிறாள் என்பதை நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

முன்பு மேற்கொள் காட்டிய அந்த பாடல் வரிகள் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருக்கும் என்று நினைக்கிறேன் ஆனால் அப்போது இருந்த சூழல் இன்றளவும் மாறியதாகவே தெரியவில்லை.

நான் கேட்கும் வசைகள் ஏராளம்

lavanya

பட மூலாதாரம், Lavanya Narayan

என் பெயர் லாவன்யா நாராயன். ஆண் பெண் வேறுபாடுகள் குறித்தும், கலாசாரம் பற்றியும் பல கட்டுரைகளை எழுதி வருகிறேன், எந்த நிறுவனத்தையும் சாரா பத்திரிகையாளராகவும் இருந்து வருகிறேன் எனக்கு டாட்டூக்கள் குத்திக்கொள்வதும், பாடி ஆர்ட் எனப்படும் உடலில் படங்களை வரைந்து கொள்வதும், வளையங்களை குத்திக் கொள்வதும் பிடித்தமான ஒன்று.

எனக்கு பிடித்தமான ஒன்றுதான். ஆனால் அதற்காக நான் கேட்கும் வசைகளும் ஏராளம் ஆம் உடம்பில் வளையங்களை குத்திக் கொள்வதோ அல்லது டாட்டூக்களை வரைந்து கொண்டாலோ அந்த பெண்ணை பார்த்த மாத்திரத்தில் எடை போட துணிந்து விடுகிறது இந்தச் சமூகம்.

என்னை `டாம்கேர்ள்` என்றோ எதிர்கெடுத்தாலும் முரண்டு பிடிப்பவள் என்றோ ஏன் சில சமயங்களில் நான் `லெஸ்பியன்` என்றோ கூறியவர்கள் கூட உண்டு.

Presentational grey line
Presentational grey line

எவ்வளவு அக்கறையாக நான் நடந்து கொண்டாலும் நான் எதைப் பற்றியும் யாரைப்பற்றியும் கவலைப்படாமல் சுற்றித்திரிபவள் என்பது போன்ற பேச்சுக்களை நான் கேட்டால் எனக்கு சிரிப்பை தவிர வேறு ஏதும் பதிலாக தர தோன்றாது ஏனென்றால் அவர்கள் எல்லோருக்கும் தெரியாது நான் பல்வேறு பணிகளை வெற்றிகரமாக மேற்கொண்டு எனது கணவரையும், எனது செல்லப்பிராணிகளையும் நன்றாகவே பராமரித்து வருகிறேன் என்று.

அவர்கள் அனைவருக்கும் தெரியாதுதான் ஆனால் நான் இவ்வாறு இருப்பது குறித்து எனது அம்மாவே நான் ஒரு பொறுப்பற்ற பெண் என்பது போல் நினைக்கிறார் ஏன்னென்றால் குடும்பத்து பெண், அதுவும் ஒரு கட்டுப்பாடான குடும்பத்து பெண்ணுக்கான அவர்கள் வகுத்த வளையத்துக்குள் நான் பொருந்த தொடர்ந்து மறுப்பதால் எனக்கு இந்த பெயர் ஆனால் இதற்காக நான் என்றும் வருந்தியதும் இல்லை மாறாக எனது எண்ணங்களை எனது கட்டுரைகள் மூலம் பதிலாக அளித்து வருகிறேன்.

திரைப்படங்களில் சித்தரிப்பு

நான் தற்போது நல்ல பணியில் உள்ளேன் அதிர்ஷ்டவசமாக எனது பணியில் எனது தோற்றம் குறித்த கவலை அவர்களுக்கு இல்லை. ஆனால் சில சமயங்களில் நேர்காணலுக்குச் சென்றபோது உங்களைப் பார்த்தால் நமது வாடிக்கையாளர்கள் என்ன நினைப்பார்கள் என்று கேட்கப்பட்டதும் உண்டு.

இப்படி நான் சந்தித்த கேள்விகளுக்கு நமது திரைப்படங்களும் ஒரு காரணம் என்றே சொல்லாம். அவர்களை பொறுத்த வரையில் யாரையும் மதிக்காமல் சுற்றித் திரியும் அடவடியான ஒரு பெண் கதாப்பாத்திரம் என்றால் அவள் உடம்பில் டாட்டூ வரைந்திருப்பாள்.

சீரியலில் வில்லி என்று அவர்கள் கூறுபவர்கள் டாட்டூ வரைந்தவர்களாக இருப்பார்கள். ஏன் அவர்கள் குணமற்றவர்கள் என்பதுபோலும் சித்திரிக்கப்பட்டு இருப்பார்கள்.

beingme

நல்ல மனிதர்கள் என்று தங்கள் மனதுக்குள் ஒரு உருவத்தை வரைந்து அதற்கு சற்று பிசகியிருந்தால் அடுத்த நொடி உங்களை ஆய்வு செய்து தீர்ப்பு வழங்கிவிடுவார்கள் சமூக பெரிய மனிதர்கள்.

அது அவர்களின் விருப்பம், அவர்களின் சுதந்திரம் நமக்கும் அதற்கும் என்ன தொடர்பு என்ற நினைக்கும் பொதுபுத்தியெல்லாம் இங்கு மிகக்குறைவே.

நான் சிறு வயதில் இருந்தபோது எனது அப்பாவின் நண்பர் மகள் டாட்டூ போட்டுக் கொண்டதாக பேசிக் கொண்ட என் பெற்றோர்கள் உடனடியாக அவன் பிள்ளை வளர்க்க தெரியாதவன் என்று என் காதில்படும்படியாகவே பேசிக் கூறினர். நான் சொல்லும் இந்த சம்பவம் பத்து வருடங்களுக்கு முன் நடந்தவைதான் ஆம் இன்று சூழல் அவ்வாறு இல்லைதான் ஆனால் அதே சமயம் சூழல் அவ்வளவு இலகுவானதாகவும் இல்லை என்பதுதான் எனது கருத்து.

தன்நம்பிக்கையின் அடையாளம்

நான் முதன்முதலில் டாட்டூ பற்றி கேள்வி பட்டது அப்போதுதான். என் உடல் எடை சற்று அதிகமானதாக இருப்பதால் எனது சிறு வயதில் என் உடல் தோற்றத்தை குறித்து மிகவும் கவலைக்கொள்வேன். ஏன் சில சமயங்களில் என்னை நான் தாழ்வாக நினைத்துக் கொண்டது கூட உண்டு ஆனால் இப்போது அவ்வாறெல்லாம் நினைப்பதுதில்லை.

என் உடம்பில் நான் குற்றியிருக்கும் டாட்டூ எனது தன்நம்பிக்கையின் அடையாளம் என்றும் நான் கூறுவேன்.

சிறிது விவரம் தெரியவந்த சமயத்தில் எனக்கு லேடி காகாவை மிகவும் பிடிக்க தொடங்கியது. அவரைப் போன்று, அவரின் வாழ்க்கையில் நடந்தவற்றையெல்லாம் உடலில் ஓவியமாக வரைந்து கொள்ள வேண்டும் என்றுகூட யோசித்தது உண்டு.

எனக்கு இருபது வயதிருக்கும் நான் டாட்டூ குத்திக் கொள்வது குறித்து எனது பெற்றோரிடம் பேசியபோது, இப்போது அதெல்லாம் வேண்டாம் உனக்கு திருமணம் ஆனதும் உன் கணவரிடம் அனுமதி வாங்கி குத்திக் கொள்ளலாம் என்றனர்.

முதல் டாட்டூ

அவர் கூறிய அந்த பதில் என் உடம்பு ஏன் மற்றொவரின் சொத்தாக பார்க்கப்படுகிறது என்ற கேள்வியே என்னுள் எழுப்பியது. அதன்பின் இரண்டு வருடங்கள் கழித்து நான் எனது முதல் டாட்டூவை குத்திக் கொண்டேன்.

மேலும் பல டாட்டூக்களை குத்திக் கொள்ளவும் நான் எண்ணியுள்ளேன்.

''டாட்டூ குத்துவது அப்படி என்ன பெருங்குற்றமா?" - கேள்வி எழுப்பும் பெண் #BeingMe

பட மூலாதாரம், Lavanya Narayan

டாட்டூக்கள் என்றால் அது எதிர்மறையானதாக இருக்க வேண்டும் என்று மட்டுமே அர்த்தம் இல்லை சிலருக்கு அது அவர்கள் கடந்து வந்த பாதையாகக்கூட இருக்கலாம். அவர்கள் பெற்ற வெற்றியை நினைவுப்படுத்தும் சின்னமாகவும் இருக்கலாம்.

நான் டாட்டூக்கள் குத்திக் கொள்வது சரி என்றோ அதற்கோ விளம்பரமோ செய்யவில்லை நாம் மனதில் வைத்திருக்கும் கோட்பாடுகள்படி ஒருவர் இல்லை என்றால் பார்த்த மாத்திரத்தில் ஒரு முடிவுக்கு வந்து அவர்களின் குணங்களை ஆராயும் பழக்கத்தை மாற்ற வேண்டும் என்ற கருத்தை மட்டுமே முன் வைக்க முயல்கிறேன்.

சிறு வயதில் என் உடல் குறித்து குறைவாக நினைத்துக் கொண்டிருந்த நான் இன்று புகைப்படத்துக்கு மாடலாகும் அளவுக்கு தன்னபிக்கை பெற்றுள்ளேன்.

ஒருவர் உடம்பில் குத்தியிருக்கும் டாட்டூக்கள் அவர்களின் விருப்பங்கள் எண்ணங்கள் ஆகியவற்றின் பிரதிபலிப்பு. என் உடல் இதைப்பற்றி கருத்து கூறுவதற்கு எவருக்கு உரிமையில்லை அப்படியே கூறினாலும் அதில் எனக்கு கவலையில்லை இந்த எண்ணமே என்னை ஆட்கொண்டுள்ளது.

என்னை பொறுத்தவரை டாட்டூ வரைந்து கொள்வது என் விருப்பத்தின் வெளிப்பாடு அது ஒரு கலை என்றே எனக்கு தோன்றுகிறது.

(#beingme தொடர், பிபிசி தமிழ் செய்தியாளர் விஷ்ணுப்ரியா ராஜசேகரால் தயாரிக்கப்பட்டது)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: