கேரள பழங்குடியின் ஆச்சரியமூட்டும் வாழ்க்கை: நிலச்சரிவுக்குப் பின்னும் இடம் பெயர மறுப்பு

- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
கேரளாவில் ஆகஸ்ட் 2018 வெள்ளத்தின் போது நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் குடியிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். ஆனால், நிலச்சரிவுகளால் அதிகமாக பாதிக்கப்பட்ட வயநாடு மாவட்டம் மேப்பாடி மலையில் வசித்துவரும் சோழநாயக்கர் இனத்தைச் சேர்ந்த செரிய வெளுத்தா என்ற ஆதிவாசி முதியவர் வனத்திலிருந்து வெளியேறவில்லை.
சோழநாயக்கர் இனத்தைச் சேர்ந்த எல்லா குடும்பங்களும் கிளம்பிவிட்டபோதும், எந்த பயமும் இல்லாமல் தனது இரண்டு மனைவிகளுடன் தொடர்ந்து அங்கு வசிப்பதாக கூறுகிறார் செரிய வெளுத்தா.
வனமகன் வெளுத்தாவுடன் ஒரு சந்திப்பு
அடர்ந்த செங்குத்தான மேப்பாடி மலையில், மூன்று மணிநேரம் நடந்து சென்றபோது, வழியில் நமக்கு ஏற்பட்ட அனுபவங்களும், அவரது குடியிருப்புக்கு சென்று உரையாடியபோது கிடைத்த விவரங்களும் ஆச்சரியம் தந்தன.
மேற்குத்தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான மேப்பாடி மலையின் கீழ் பகுதிக்குச் செல்ல எட்டு கிலோமீட்டர் பயணித்தோம்.
குறுகலான மலைப்பாதையில் நம்முடன் வயநாட்டைச் சேர்ந்த சமூகஆர்வலர் சுனில் குமார் வேகமாக நடந்து சென்றார்.
தனது சிறுவயதில் இருந்து சோழநாயக்கர் இனமக்களுடன் பழகிவரும் இவர், மேப்பாடி பகுதியில் வனத்துறையின் நிலம் அளக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டவர்.
செரிய வெளுத்தாவின் நம்பிக்கையைப் பெற்ற ஒரு சில ஆதிவாசி அல்லாத நபர்களில் ஒருவர் சுனில்.

நம் பயணத்தின்போது, ஒவ்வொரு நூறு அடி தூரத்திற்கும் சென்று ஆபத்து இல்லை என்று உறுதிப்படுத்திவிட்டு நம்மைக் கூட்டிச்சென்றார்.
லேசான குளிர் நம்மை சூழ்ந்தது. ஆங்காங்கே சிறிய நீரோடைகள் காணப்பட்டன. நான்கு இடங்களில் ஓய்வெடுத்துச் சென்ற நமக்கு, வனப்பகுதியில் இத்தகைய நீரோடைகளின் அவசியம் புரிந்தது.


அந்த வனப்பகுதி யானைகளின் வழித்தடம் என்பதால், பல இடங்களிலும் சாண குவியல்களைப் பார்த்தோம்.
ஒதியம்பாறை என்ற இடத்தில் பாறைகள் செங்குத்தாக அமைந்திருந்தன. பத்து அடி தூரம் மட்டும் உள்ள அந்த இடத்தை கடக்க நமக்கு 20 நிமிடங்கள் தேவைப்பட்டது.
பச்சை மிளகு கொடிகள், வனத்தில் வானத்தை முட்டும் அளவுக்கு உயர்ந்த மரங்களின் உச்சியை தொடும் அளவு நெளிந்து, வளர்ந்திருந்தன.
சோழநாயக்கர் மக்களின் உணவு தேவைகளுக்கு இன்றியமையாத மரமாக அறியப்படும் ஈந்து மரங்கள் ஒரு சில இடங்களில் தென்பட்டன. அடியில் இருந்து உச்சிவரை வரிசையான முட்கள் நிறைந்த காட்டு தேக்கு மரங்கள், பல மூங்கில் மரங்களும் இருந்தன.
வெளுத்தாவின் வனப்பகுதி அருகில் வந்ததும், நம்மை காத்திருக்கச் சொல்லிவிட்டு சுனில் மட்டும் சென்றார். 15 நிமிடங்கள் கழித்துவந்த அவர், காட்டுக்குள் வரும் வெளிநபர்கள் பலரும் காட்டை அசுத்தப்படுத்தி, வளத்தை அபகரித்துக்கொண்டு செல்வதாலும், வெளுத்தா உள்ளிட்ட பல ஆதிவாசிகளும் வெளிநபர்கள் மீது நம்பிக்கையற்று இருப்பார்கள் என்று விளக்கினார் சுனில்.
வெளியுலக தொடர்புகளை விரும்பாத செரிய வெளுத்தாவிடம், பிபிசி செய்திக்காக அவரை சந்திக்க நாம் வந்துள்ளதை விவரித்து அனுமதிபெற்று வந்தார் சுனில்.
பிறப்பும், இறப்பும்
வெளுத்தாவின் வனப்பகுதி சாலியார் நதியின் தொடக்கப்புள்ளியாக இருப்பதால், நதி பொங்கி ஓடும் சத்தமும், அவ்வப்போது விதவிதமான பறவைகளின் ஒலிகளும் கேட்டன.
மூங்கில் தடிகளால் வேயப்பட்ட மண் குடிசை ஒன்று இருந்தது. அருகில் சில பாறைகள் அமர்ந்து பேசுவதற்கான பலகை போலவே இருந்தன.

சுமார் ஐந்து அடி உயரம், கருப்பும், நரையும், தங்க நிறமும் கொண்ட சுருட்டை முடியுடன் ஒல்லியான தேகம் கொண்டவராக இருந்த செரிய வெளுத்தா சிறிய புன்னகையை உதிர்த்தார்.
அவரது மனைவி ஒருவர் கிழங்கை வேகவைத்துக்கொண்டிருந்தார். வெளுத்தாவைக் காண அவரது உறவினர்கள், சில குழந்தைகள் வந்திருந்தனர்.
நாம் கடந்துவந்த எட்டு கிலோமீட்டர் தூரத்தில், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளையும் காணமுடிந்தது. வெள்ளத்தின்போது, பாதிக்கப்பட்ட இந்த மேப்பைநாடு பகுதியில் அரசின் மீட்புகுழுவினர் வந்து அழைத்தபோதும், செரிய வெளுத்தா காட்டில் இருந்து வராமல் இருந்தார் என்றார் சுனில்.
நிலச்சரிவு ஏற்பட்ட பிறகும் ஏன் வனத்தைவிட்டு வெளியே வரவில்லை என்ற கேள்வியை செரிய வெளுத்தாவிடம் முன்வைத்தோம்.
"மழை வந்தால் வெள்ளம் வரும். அது இயற்கை. வெள்ளம், நிலச்சரிவு என எவ்வித இடர்பாடுகள் வந்தாலும், உயிரைக் காப்பாற்றிக்கொள்ள எந்த இடத்தில் ஒதுங்கவேண்டும் என்று எனக்கு தெரியும். வனத்தை விட்டு நான் ஏன் வெளியேறவேண்டும்?
இந்த இடம் உங்களைப் பொருத்தவரை காடு. எனக்கு இதுதான் வீடு. இதோ இந்த சாலியார் நதிக்கு அருகில் யானை போல நிற்கும் இந்த பாறையின் மீதுதான் என் அம்மா என்னை பிரசவித்தார்.
இந்த இடத்தைவிட்டு நான் எப்படி வெளியேறுவேன். இங்குதான் நான் பிறந்தேன். இங்குதான் என் முடிவும். என் முன்னோர்கள் வாழ்ந்த, மறைந்த இடமும் இங்கு உள்ளது,'' என்கிறார்.


"பிறப்பு, இறப்பு என்பதை நாம் தீர்மானிக்கமுடியாது. இறக்க வேண்டிய நபர் இறந்துபோவதை நாம் தடுக்கவேமுடியாது.
தற்போது வெள்ளம் வந்ததால், இந்த வனத்தை விட்டு நாம் சென்றால், ஒரு காலத்தில் தண்ணீர் பஞ்சத்தால் கூட நாம் இறந்துபோகலாம்.
வாழ்கையை தைரியமாக எதிர்கொள்ளவேண்டும். ஒவ்வொரு நாளையும் அச்சத்துடன் வாழக்கூடாது.
ஒருகட்டத்தில் அந்த அச்சமே நம்மை கொன்றுவிடும். காட்டைப் பற்றி மட்டுமே எனக்கு தெரியும் என்பதால் வெளியுலக வாழ்க்கை எனக்கு தேவையில்லை,'' என்கிறார் வெளுத்தா.

சோழநாயக்கர் இனத்தின் தலைவராக இருக்கும் செரிய வெளுத்தா மற்றும் அவரது இரண்டு மனைவிகளைத் தவிர மற்ற அனவைரும் வனத்தைவிட்டு அரசாங்கத்தின் வெள்ளநிவாரண முகாம்களுக்குச் சென்றுவிட்டனர்.
ஒரு சிலர் இனி எப்போதும் வனத்திற்கு திரும்பப்போவதில்லை என்று முடிவுடன் நிரந்தரக் குடியிருப்பு வசதிக்காக காத்திருக்கிறார்கள்.
காட்டில் இருந்து நகரங்களுக்கு செல்லும் குடும்பங்கள் மீது கோபமோ, வருத்தமோ வெளுத்தாவுக்கு இல்லை.
வெளியேறும் யாரையும் தடுப்பதில்லை என்றும், அதேபோல தான் எப்படி வாழவேண்டும் என்று யார் சொல்வதையும் ஏற்பதில்லை என்ற முடிவுடன் இருக்கிறார்.
பூச்சிக்கொல்லி உணவுகளால் உடல்நலன்பாதிப்பு
"என் விருப்பம்போல, இயற்கையின் மடியில் நான் இறுதிவரை இருப்பேன். இங்கு கிடைக்கும் தூய்மையான நீர், காற்று, உணவு எதுவும் வெளியுலகில் இல்லை.
கேரள வெள்ளம்: நிலச்சரிவுக்கு பின்னரும் காட்டை விட்டு செல்ல மறுக்கும் பழங்குடி தலைவர்
நீங்கள் கடைகளில் விற்கப்படும் குப்பி வெள்ளம் குடிப்பீர்கள். எனக்கு அந்த தண்ணீரைக் குடித்தால், தொண்டையில் புண் ஏற்படும்.
பூச்சிக்கொல்லி தெளித்து விளைவிக்கப்படும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை நான் உண்பதில்லை.
பூச்சிக்கொல்லி பயன்படுத்தி விவசாயம் செய்யப்படும் காய்கறிகள் விஷமானவை. காட்டில் கிடைக்கும் கிழங்கும்,தேனும், உடும்பு இவைதான் என் உணவு.
சமீபமாக நான் பிடித்த உடும்பின் தோலில் வியாதி இருந்ததைப் பார்த்தேன். தற்போது காட்டில் உணவு கிடைப்பது குறைந்துவருகிறது.
ஆனாலும், வெளிமார்கெட்டில் கிடைக்கும் விஷமான உணவுப்பொருட்களை விட இங்குள்ள இயற்கை பொருட்கள் மட்டுமே என் உடலுக்கு உகந்தவையாக இருக்கின்றன,'' என்று காட்டின் வளம் குன்றிவருவதை சுட்டிக்காட்டினார்.

நாட்டில் குடியேறிய ஓர் இளைஞனுக்கு மருத்துவம் பார்த்தது குறித்து பேசிய வெளுத்தா, ''கோழிக்கோட்டில் சமீபத்தில் குடியேறிய ஓர் ஆதிவாசி இளைஞன் உடல்நலம் குன்றி மருந்தை தேடி இங்கு வந்தான்.
அவனை குணப்படுத்தி அனுப்பினேன். அவனது தேவைக்கு அவன் வெளியேறிவிட்டான். எனக்கு காசு,பணம் வேண்டாம். எனக்கான தேவைகளை இந்த வனமே தருவதால், வெளியேற எனக்கு விருப்பம் இல்லை.
வெளி உணவை ஏற்றுக்கொண்டு அங்கு வாழ்வது சிரமம்தான். நகரத்தில் வாழ்ந்து பழகிய உங்களை காட்டில் இருங்கள், இங்கு எல்லா வசதியும் உள்ளது என்று கூறினால் நீங்கள் ஒத்துக்கொள்வீர்களா?.'' என்று கேள்விகளை அடுக்கினார்.
"வயது தெரியாது, நாள் கணக்கு தேவையில்லை''
வெளுத்தாவின் வயது குறித்து கேட்டபோது வெடித்து சிரித்தார். ''இங்குள்ள மரங்கள் நான் சிறுவயதில் இருந்த போதே மரங்களாக இருந்தன.
தற்போதும் உயரமாக, வளர்ந்துகொண்டே இருக்கின்றன. இந்த வனத்தில் உள்ள மரங்களைப் போல தான் நானும். என்னுடைய வயது எனக்கு தெரியாது.
நாளும், கிழமையும் எங்களுக்கு இல்லை. எதையும் கணக்கிடவேண்டிய அவசியம் இல்லை.


பருவம் மாறும்போது, செடிகள் துளிர்க்கும், தேன் கிடைக்கும். இவற்றைக்கொண்டு காலம் மாறுகிறது என்பதை அறிந்துகொள்ளலாம். வேறு கணக்குகள் கிடையாது,'' என்கிறார் வெளுத்தா.
நாளை என்ற தினத்திற்கான எந்த திட்டமும் அவருக்கு இல்லை. அன்றைய பொழுதை, அப்போது வாழ்வது என்பது மட்டுமே அவரின் வாழ்க்கை.
சூரியன் உதிக்கும்போது எழுந்து, சூரியன் அஸ்தமிக்கும் போது உறங்கப்போவது அவரது அன்றாட நடைமுறை.
வெளியிடங்களுக்குச் சென்றால் கூட, இரவு வனத்திற்கு திரும்பி வந்துவிடவேண்டும், வெளியிடங்களில் உணவு சாப்பிடுக்கூடாது என்றும் கருதுகிறார் வெளுத்தா.


வெளிவுலக பழக்கத்தில் இருந்து வெற்றிலை போடுவது, தேநீர் குடிப்பது போன்ற பழக்கங்களை வெளுத்தா ஏற்றுக்கொண்டுள்ளதை நாம் பார்த்தோம்.
ஆச்சர்யம் என்பது அன்றாட நிகழ்வு
நகர வாழ்க்கையில் பாதுகாப்பு அதிகம் என்றும், காட்டில் இருந்து வெளியேறினால் நல்ல முன்னேற்றத்தை அடைய முடியும் என பலவிதத்தில் அரசாங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்திய பிறகும் வெளுத்தாவின் மனம், வனத்தை விட்டு வெளியேற ஒப்புக்கொள்ளவில்லை.
''இங்குள்ள பெரும்பாலான மூலிகைச்செடிகள் பற்றிய அறிவு எனக்கு இருக்கிறது. இந்தக் காட்டில் பாம்பு கடித்தால் என்ன செய்யவேண்டும்? யானை வந்தால் என்ன செய்யவேண்டும்? எந்த பருவத்தில், தேன் எவ்வளவு எடுத்துக்கொள்ளலாம்? மழைப்பருவத்தில் என்ன கிடைக்கும்? என்ற அறிவு எனக்கு உள்ளது.
எனது குழந்தைப் பருவத்தில் இருந்து என் முன்னோர்கள் வகுத்த நெறிகளை பின்பற்றி இந்த காட்டில் இயற்கையைப் பாதுகாத்து, அதற்கு கட்டுப்பட்டு வாழ்ந்துவருகிறோம்.
இதைவிட எனக்கு நகர வாழ்க்கை எப்படி பாதுகாப்பாக இருக்கும்? அங்கு நான்கு சுவர்களுக்குள் என் வாழ்கையை முடக்கிக்கொள்ளவேண்டுமா?
எனது இறுதிக்காலத்தில் ஒரு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு நான் இறக்கக்கூடாது. என் பிறப்பு இங்குதான், என் முடிவும் இதோ, இந்த வனத்தில்தான்,'' என்கிறார்.

நம்மில் பலருக்கு அதிசயமாக தெரியும் பலவும் வெளுத்தாவின் வாழ்கையில் அன்றாட நிகழ்வு. எதுவுமே அவரை பயப்படுத்தவோ, ஆச்சரியப்படவோ வைப்பதில்லை.
இயற்கையின் செழிப்பில் அரிய பூக்களை பார்ப்பது, மலை முகடுகளில் பெரிய தேன்கூடுகள், சில்லென்ற சாலியார் நதியின் வெள்ளம், சட்டென பெய்யும் மழை, குளிர்ந்த காற்று, ஆர்ப்பரிக்கும் நதியில் தெரியும் முழு நிலவு, வறட்சி, கோடைகாலத்தில் காட்டில் உணவு இல்லாமை, கடும் வெயில் என எல்லாம் அவருக்கு பழகிய ஒன்றாகிவிட்டன.
1970களின் தொடக்கத்தில்தான் சோழநாயக்கர் இனத்தைச் சேர்ந்த மக்கள் வனப்பகுதிகளில் வாழ்ந்துவருவது குறித்து வெளியுலகத்திற்கு தெரியவந்தது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
2011ல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி வெறும் 124 சோழநாயக்கர் மக்கள் மட்டுமே இருப்பதாக தெரியவந்துள்ளது.
அதிலும், கடந்த பத்து ஆண்டுகளில் காட்டின் வளம் குறைந்து வருவதால் பலரும் வெளியேறி வருகின்றனர் என்று சுனில் நம்மிடம் கூறினார்.

''இங்கு அரிய வகை திராட்சை உள்ளிட்ட பழங்கள், சத்துமிக்க கிழங்குகள் இருந்தன. சமீப காலங்களில் காட்டுக்குள் வந்த தனிநபர்கள், காட்டுப்பொருட்களை சூறையாடும் நபர்கள் பல மரங்களை வெட்டி எடுத்துச்சென்றுவிட்டனர்.
ஆதிவாசி மக்கள் இங்குள்ள மரங்களை அவர்களின் வீட்டில் உள்ள மரங்களாக பார்ப்பார்கள். அவர்களின் உணவு தேவைக்கு பழங்களை பறிப்பார்கள்.
ஆனால் வெளிநபர்களுக்கு இந்த மரங்களின், விலங்குகளின் சிறப்பு தெரியாது. தேக்கு, மூங்கில் மரங்களை கடத்துவது, சுற்றுலாவுக்கு வந்தவர்கள் அரிய செடிகளை, பூக்களை பறிப்பது என காட்டில் உள்ள வளங்களை எடுத்துச்செல்லும் பேராசையில் இந்த மக்களின் வளங்களை பலரும் அழித்துவிட்டனர்,'' என்று விவரித்தார்.
தேன்,பழங்கள், மீன் போன்ற பொருட்களை சோழ நாயக்கர் மக்கள் வெளிச்சந்தைக்கு எடுத்துவருவது தற்போது குறைந்துவருகிறது என்று கூறிய சுனில், பத்து ஆண்டுகளுக்கு முன்னர், தனது திருமணத்திற்கு 50 கிலோ சாக்கு ஒன்றில் நெல்லிக்கனிகளை பரிசளித்ததை நினைவுகூர்ந்தார்.
வனத்தின் வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டதால் ஏற்பட்ட உணவுப்பஞ்சம் மற்றும் வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றம் காரணமாக தங்களது இருப்பிடத்தை விட்டுச்செல்லும் முதல் தலைமுறை சோழநாய்க்கர் மக்களாக இங்குள்ள மக்கள் இருக்கிறார்கள் என்கிறார் சுனில்.
காட்டில் இருந்து நகரத்திற்கு செல்லும் முதல்தலைமுறை
காட்டில் இருந்து தற்போது அரசாங்கத்தின் நிவாரண முகாமுக்கு சென்றுள்ள இளம் குடும்பங்களில் வெளுத்தாவின் மகள் மினியும் ஒருவர்.
தனது பெற்றோர் பல விதமான இடர்பாடுகளுடன் வாழ்ந்ததுபோல இனி வாழவேண்டிய அவசியம் இல்லை, வெளியுலகத்திற்குச் செல்ல வேண்டிய காலம் வந்துவிட்டது என்று உறுதியாக நம்புகிறார் மினி.


''பண்டைய காலத்தில் எங்கள் முன்னோர்களுக்கு உடுப்பு கிடையாது. கிடைத்ததை உண்டு, காட்டில் ஜீவித்திருந்தனர்.
தற்போது காட்டின் வளமும் குன்றிவிட்டது. முன்பு கிடைத்ததுபோல உணவு கிடைப்பதில்லை.
வேட்டையாடி, என் குழந்தைகளுக்கு உணவு கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை இல்லை.
வெள்ளம் வந்த பிறகு, அரசாங்க அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தியபோது, வெளியுலகத்தில் என் குழந்தைகளுக்கு நல்ல உணவும், கல்வியும், சுகாதார வசதியும் கொடுக்கவேண்டும் என்று கேட்டேன்.
அவர்களின் வாக்குறுதியை ஏற்று காட்டில் இருந்து நாட்டில் வாழப்போகிறேன்,'' என்று பயம் கலந்த நம்பிக்கையுடன் பேசினார்.
வெளுத்தாவை நாம் பேட்டிகாண சென்ற சமயத்தில், கடசேரி பகுதியில் உள்ள அரசாங்க நிவாரண முகாமில் தற்காலிகமாக தங்கியுள்ள குழந்தைகள் வெளுத்தாவைக் காண வந்திருந்தனர்.
அவர்கள், சில தினங்களில் நிரந்தரமாக நகரப்பகுதிகளில் குடியேறவுள்ளனர். அந்த குழந்தைகளின் கண்கள் நம்மை வசீகரிப்பதாக இருந்தன.
அந்த விழிகளில் வெகுளித்தனம் மிகுந்திருந்தது. நாம் கைகளை நீட்டி, புன்னகைத்தால், ஒரு நிமிட தயக்கத்திற்குப் பிறகு அவர்கள் புன்னகை பூத்தனர்.
அவர்கள் கைகளைக்கொண்டு முகங்களை மூடிக்கொண்டு, ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டது, நமக்குள் பல கேள்விகளை எழுப்பின.
காட்டில் இருந்து வெளியேறி முதல் தலைமுறையாக வெளியுலகத்திற்குப் போகும் இந்த பிஞ்சு குழந்தைகள் ''வெளியுலகத்தில் எங்களுக்கு அதிசயம் காத்திருக்கும் தானே?'' என்ற கேள்வியை நம்மிடம் கேட்பது போல இருந்தது.
நாம் வனத்தில் இருந்து விடைபெறுகையில் சூரிய அஸ்தமனம் தொடங்கியிருந்தது. நாம் வந்த பாதையில் இருள் கவ்வி கொண்டிருந்தது. நமது பாதுகாப்பை கருதி, இரண்டு சோழ நாயக்கர் இளைஞர்கள் எட்டு கிலோமீட்டர் பயணத்தில் துணையாக வந்து வழியனுப்பிவிட்டு வனத்துக்குள் சென்றனர்.

2018 அக்டோபர் 4 ஆம் தேதி பிபிசி தமிழில் பகிரப்பட்ட கட்டுரை இது
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













