நாளிதழ்களில் இன்று: முதல்வரா? எதிர்க்கட்சி தலைவரா? - ரசிகர்களுக்கு கமல் ஹாசன் பதில்
முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
தி இந்து (தமிழ்)

பட மூலாதாரம், Getty Images
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன், யூ-டியூப் மூலம் நேரலையில் பொதுமக்களின் கேள்விகளுக்கு நேற்று பதிலளித்தார். அப்போது, சமூக குறைபாடுகளை அரசுக்கு தெரியப்படுத்தும் விதமாக விரைவில் 'மய்யம் விசில் ஆஃப்' (செல்போன் செயலி) அறிமுகப்படுத்தப்படும் என்று கமல் அறிவித்துள்ளார். மேலும், அடுத்த தேர்தலில் தான் முதல்வராக இருப்பேனா அல்லது எதிர்க்கட்சித் தலைவராக இருப்பேனா என்று மக்கள் கேட்பதாகவும், ஆனால், அதை மக்கள்தான் முடிவு செய்யவேண்டுமென்றும் நேரலையில் பேசிய கமல் ஹாசன் கூறியதாக ’தி இந்து’ தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.
கத்துவா சம்பவத்தில் பாஜகவின் நிலைப்பாடுதான் என்ன? என்ற தலைப்பில் இன்று தலையங்கம் வெளியிட்டுள்ளது ’தி இந்து’ தமிழ். "காஷ்மீர் மாநிலம் கத்துவாவில் எட்டு வயது சிறுமி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக இரட்டை நாக்குடன் பேசிவருகிறது பாஜக. இவ்விவகாரத்தில் ஜம்மு பகுதியில் பாஜக காட்டும் முகமும் தேச மக்களுக்குக் காட்டும் முகமும் ஒன்றுக்கொன்று முரணானவை. பிரதமர் என்பதைத் தாண்டி பாஜக கூட்டணி ஆளும் மாநிலம் என்ற வகையிலும் கூடுதல் பொறுப்பு இந்த விஷயத்தில் மோடிக்கு இருக்கிறது. நடவடிக்கைகளை சொந்தக் கட்சியிலிருந்து அவர் தொடங்க வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தினத்தந்தி

பட மூலாதாரம், Getty Images
இஸ்லாமியர்களின் புனித நகரான மக்காவுக்கு ஆண்டுதோறும் உலக முஸ்லிம்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த பயணத்துக்கு இந்தியர்களுக்கான ஒதுக்கீடு சுதந்திரத்துக்குப்பின் எப்போதும் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு 1.75 லட்சம் பேருக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார் என்று தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டின் பிரதமராக நரேந்திர மோதி பதவியேற்றபின் நான்காவது முறையாக இரண்டு நாள் பயணமாக வரும் 27 ஆம் தேதி சீனா செல்கிறார். இந்திய-சீன எல்லையில் அவ்வப்போது பதற்றம் நிலவி வரும் நிலையில், சீன அதிபரின் அழைப்பின் பேரில் இந்த சுற்றுப்பயணம் நடைபெற உள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
தினமலர்

பட மூலாதாரம், DINAMALAR
போராட்டங்களில் பங்கேற்கும் பலர் பணம் கொடுத்து திரட்டப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டை மையமாக வைத்து கார்ட்டூன் வெளியிட்டுள்ளது தினமலர்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

பட மூலாதாரம், EPA
12 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வல்லுறவு செய்தால் மரண தண்டனை அளிக்கும் மத்திய அரசின் அவசர சட்டத்திருத்தத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று கையெழுத்திட்டதை தொடர்ந்து அச்சட்டமானது உடனடியாக அமலுக்கு வந்தது. இந்நிலையில், நேற்றைய தினம் மட்டும் நாடுமுழுவதும் 12 வயதிற்குட்பட்ட குறைந்தது பத்து சிறுமிகள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது ’தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












