இந்தியாவில் பாலியல் வல்லுறவு குறைவதற்கான அறிகுறி இல்லாதது ஏன்?

girl holds a placard during a protest against the rape of an eight-year-old girl in Kathua, near Jammu, in Kochi, India April 15, 2018.

பட மூலாதாரம், Reuters

    • எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ள ஒரு சிறுமியின் முகம் சரியாக தெரியாத நிலையில், பெயரோ அல்லது வீட்டு முகவரியோகூட கண்டுபிடிக்க முடியாத நிலையில் இந்திய காவல்துறையினர் பாலியல் வல்லுறவு செய்த நபரை தேடிவருகின்றனர்.

அந்த சிறுமி ஒன்பது முதல் 11 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்கலாம். உருச்சிதைவு செய்யப்பட்ட நிலையில் அந்த சிறுமியின் சடலமானது, குஜராத்தின் சூரத் நகரில் ஒரு விளையாட்டுத்திடலுக்கு அருகேயுள்ள புதரில் இருந்து எடுக்கப்பட்டது.

அச்சிறுமியின் உடலில் 86 காயங்களுக்கான அடையாளங்கள் உள்ளன. பிரேதப்பரிசோதனை செய்த மருத்துவர் '' சடலம் கண்டெடுக்கப்பட்ட தினத்துக்கு முன்தைய ஒரு நாள் முதல் ஒரு வாரத்துக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் காயங்கள் உண்டாக்கப்பட்டிருக்கலாம்'' எனக் கூறியுள்ளார்.

இச்சிறுமி அடைத்து வைக்கப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி சிதைக்கப்பட்டிருக்கலாம் என காவல்துறை நம்புகிறது. இவ்வாறு சித்திரவதை செய்யப்பட்டு பத்து நாட்களுக்கும் மேலான நிலையில் அவளது உடலை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அந்தப் பெண் யார் என அறிவதற்காக அம்மாநிலத்தில் காணாமல் போன எட்டாயிரம் குழந்தைகள் பட்டியலில் காவல்துறை தேடியது. அனால் கண்டுபிடிக்க இயலவில்லை.

''உடல் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் அச்சிறுமி போராட்டம் நடத்தியதற்கான எந்த அடையாளமும் இல்லை'' என உள்ளூர் காவல்துறை தலைமை அதிகாரி தெரிவித்தார்.

இந்தியாவில் வலிமையற்றவர்களை வலியோர் தாக்குவதற்கு வல்லுறவு கொள்ளுதலை ஓர் ஆயுதமாக பயன்படுத்துவது அதிகரித்துவரும் நிலையில் போராட்டம் நடத்துவது வீண் செயலாகத் தெரிகிறது. இவை ஆச்சரியப்படுத்தவில்லை.

ஆணாதிக்கம் பெருகிய மற்றும் அதிகரிக்கும் பல துருவ சமூகத்தில் ஓட்டுகளை அறுவடை செய்ய, மக்களை பிரிப்பதற்கு வெறுப்பு முக்கிய கருவியாக பயன்படுத்தப்படுகிறதென்பதை பலரும் நம்புகிறார்கள்.

மோசமான பாலின விகிதம் அதிகரித்து வருகிறது. இதற்கு சட்டவிரோத பாலியல் தேர்வுகளும், கருக்கலைப்புகளும் முக்கிய காரணமாக இருக்கிறது . இதையடுத்து நாடு முழுவதும் ஆண்களே அதிகளவு உள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை நூறு பெண் குழந்தைகள் பிறக்கும் அதேவேளையில் 112 ஆண் குழந்தைகள் பிறக்கின்றன. இவை ஒவ்வொரு நூறு பெண் குழந்தைகளுக்கும் 105 ஆண் குழந்தைகள் என்ற இயல்பான விகிதத்துக்கு எதிராக உள்ளது.

People participate in a protest against the rape of an eight-year-old girl in Kathua near Jammu, and a teenager in Unnao, Uttar Pradesh state, in Mumbai, India, April 15, 2018

பட மூலாதாரம், Reuters

ஆண் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் இருப்பதால் நாட்டில் 63 மில்லியன் பெண்களுக்கும் அதிகமானோர் புள்ளியியல் ரீதியாக 'காணவில்லை'. பாலின விகிதம் போன்ற புள்ளிவிவரங்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கக் காரணமாக இருப்பதாக பலர் நம்புகின்றனர்.

வட மாநிலமான ஹரியானாவில்தான் இந்தியாவிலேயே அதிகளவு கூட்டுப் பாலியல் வல்லுறவு நடக்கிறது. ஹரியானாவில் பாலியல் விகிதம் மிகமோசமாக உள்ளது. கடந்த ஜனவரியில் மட்டும் பல சம்பவங்கள் நடந்துள்ளன. பத்து வயது சிறுமியை உருக்குலைத்த குற்றத்துக்காக 50 வயது முதியவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்;

ஒரு 15 வயது சிறுவன் மூன்றரை வயது பெண் குழந்தையை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியதாக கூறப்படுகிறது; 20 வயது பெண் ஒருவர் இரண்டு ஆண்களால் வல்லுறவுக்குள்ளாகியிருக்கிறார் ; ஒரு மாணவியை கடத்திய குற்றத்துக்காக 24 வயது ஆண் கைது செய்யப்பட்டிருக்கிறார்; மிருகத்தனமாக தாக்கப்பட்ட ஓர் பதினெட்டு வயதை எட்டாத சிறுமியின் உடல் வயலில் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவங்கள் மட்டுமே அதிகாரபூர்வமாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டவை.

இந்திய ஆட்சியின் கீழ் இருக்கும் காஷ்மீர் பகுதியில் கடந்த ஜனவரியில் எட்டு வயது இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த சிறுமி கொடூரமான முறையில் பாலியல் வல்லுறவுக்குள்ளாகினார். அவள் கடத்தப்பட்டு இந்து கோவில் ஒன்று அடைத்து வைக்கப்பட்டு பலமுறை வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு காட்டில் தூக்கியெறியப்பட்டார்.

அங்குள்ள இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களது விலங்குகளை இந்துக்களுக்கு சொந்தமான பகுதியில் மேய்ச்சலுக்கு விடுவதை நிறுத்துவதற்காக எச்சரிக்கை விடுக்கும் விதமாக இச்செயல் புரியப்பட்டது. ஆகவே, இது அப்பகுதியில் மத பதட்டங்களை உண்டாக்கியிருக்கிறது.

காஷ்மீரில் நடந்த இக்கூட்டு பாலியல் வல்லுறவு மற்றும் கொலை ஆகியவற்றுக்காக எட்டு இந்துக்களின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. திங்களன்று அவர்கள் மீது விரைவு விசாரணை துவங்குகிறது. குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு ஆதரவாக பேரணி சென்ற ஆளும் இந்து தேசியவாதிகளான பாஜகவைச் சேர்ந்த இரு அமைச்சர்கள், ட்விட்டரில் கடும் கண்டனங்கள் எழுந்ததையடுத்து பிரதமர் நரேந்திர மோதி கண்டனம் தெரிவிக்கும் அளவுக்கு கட்டாயப்படுத்தப்பட்டதையடுத்து பதவியை ராஜிநாமா செய்தனர்.

தென் இந்தியாவில் உள்ள கேரளா மாநிலத்தில், ஒரு வங்கி மேலாளர் தனது பேஸ்புக் சுவரில் '' அந்த பெண் கொல்லப்பட்டது நல்லது. ஏனெனில், அவள் நாளைக்கு இந்தியாவுக்கு எதிராக மனித வெடிகுண்டாக உருவாகியிருப்பாள்'' என எழுதியுள்ளார். அவரை வேலையில் இருந்து நீக்கியுள்ளனர் அந்நிறுவன முதலாளிகள்.

''இந்தியாவின் மகள்களுக்கு நீதி கிடைக்கும்'' என மோதி ட்வீட் செய்திருந்தார். பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டுக்குள்ளான எம்.எல்.ஏக்கள் பாஜகவைச் சேர்ந்தவர்கள், மேலும் வல்லுறவு செய்தவரை நியாயப்படுத்தியவர்களும் பாஜக கட்சியைச் சேர்ந்தவர்களாவர். அவர்களின் செயலுக்கு நாடு முழுவதும் கண்டனம் எழுந்ததனால் மட்டுமே சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதை விட மற்ற அரசியல்வாதிகள் யாரும் மிகச்சிறப்பாக செய்துவிடவில்லை. கடந்த 2014-ல் பத்திரிகையாளர் மீது கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டபோது குற்றம் நிரூபிக்கப்பட்டு மூன்று பேருக்கு தண்டனை கிடைத்தது. சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் '' ஆண்கள் தவறு செய்வார்கள். அதற்காக அவர்கள் தூக்கிலிடப்படக்கூடாது. நாம் பாலியல் வல்லுறவு எதிர்ப்பு சட்டங்களை திருத்தவேண்டும்.'' என்றார்.

A woman holds a placard as she participates in a protest against the rape of an eight-year-old girl in Kathua near Jammu, and a teenager in Unnao, Uttar Pradesh state, in Mumbai, India, April 15, 2018

பட மூலாதாரம், Reuters

நீங்களே உங்களை காத்துக்கொள்ள வேண்டும்; ஒழுங்காக உடை அணியவேண்டும்; பாதுகாப்பின்றி வெளியில் செல்ல கூடாது அல்லது எளிமையாக வீட்டுக்குளேயே இருக்க வேண்டும் இல்லையெனில் உங்களை காப்பாற்றமுடியாது என்பன போன்ற பொதுவான விஷயத்துடன் பெண்கள் வெளியில் நடக்கும் உண்மையான நிலவரத்தோடு ஒத்துப்போக வேண்டும் தங்களை தாங்களே சமரசம் செய்து கொள்ள வேண்டும்.

கவலைதரும் அம்சம் என்னவெனில் இந்தியாவில் குறிவைக்கப்படும் சிறுவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. சிறுவர் சிறுமி மீதான வல்லுறவு தாக்குதல் புகார்கள் வழக்கு பதிவு செய்யப்பட்டவகையில் கணக்கில் எடுத்துக்கொண்டால் வழக்குகள் எண்ணிக்கையானது 2012 -2016 இடைப்பட்ட காலத்தில் இரண்டு மடங்குகளுக்கும் மேல் அதிகரித்திருக்கிறது . நாட்டில் பாதிக்கப்பட்ட பெண்களில் 40 சதவீதக்கும் அதிகமானோர் 18 வயதை எட்டாத சிறுமிகளாவர்.

சட்டப்படியான பாலியல் வல்லுறவு

பாலியல் வல்லுறவு அதிகம் நடக்கும் நாடுகளில் இந்தியா மட்டும் தனியாக நிற்கவில்லை. ஆனால், ஆணாதிக்கமும், மோசமான பாலின விகிதமும் இந்த விஷயத்தில் இந்தியாவின் நிலைமையை மோசமாக்கியுள்ளதாக பலரும் கருதுகிறார்கள். இதில் பொது அக்கறையின்மையும் உள்ளது. பெண்கள் பாதுகாப்பு மற்றும் உரிமை குறித்த விஷயங்கள் எப்போதும் தேர்தலில் முக்கியப் பிரச்னையாக எதிரொலித்ததில்லை.

வல்லுறவு என்பது கலாசாரத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது மேலும் நியாயப்படுத்தப்பட்டுள்ளது. கிபி 410-ல் கிழக்கு ஜெர்மானியர்களான கோத்ஸ் ரோம் நகரைத் தாக்கியபோது செயின்ட் அகஸ்டின் போர் நேரத்தில் நடக்கும் வல்லுறவானது ''பண்டைய மற்றும் வழக்கமான கேடு'' என கூறியுள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த வெண்டி டோனிகர் இந்தியாவைப் பற்றிய வரலாறு, இலக்கியம், தத்துவம் மற்றும் கலாசாரம் ஆகியவை குறித்த பிரத்யேக படிப்பை முடித்தவர். பண்டைய இந்தியா குறித்த ஆய்வுக்கட்டுரையில் '' சட்டப்படியான வல்லுறவு என்பது திருமணம் என்ற வடிவத்தில் உள்ளது. வல்லுறவுக்கு சட்டப்பூர்வ அனுமதியளிக்கும் விதமாக திருமணம் உள்ளதாகவும், வல்லுறவுக்குள்ளாக்கப்ட்ட பெண்களுக்கு திருமணம் எனும் சட்ட நடவடிக்கையும் தருவதாக இருந்தது'' என குறிப்பிட்டுள்ளார்.

ஆக உலகளாவிய சீற்றத்தையும் வன்முறை நிறைந்த பொது எதிர்ப்பையும் தூண்டிய 2012 டெல்லி கூட்டு பாலியல் வல்லுறவு நிகழ்வுக்குப் பின் எதுவும் மாறிவிடவில்லை ?

அப்படிச் சொல்வது கடினம். ஒரு நல்ல சேதி என்னவெனில் வல்லுறவு குறித்து தற்போது அறிக்கை தயாரிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்வது அதிகரித்துள்ளது. ஆனால் கெட்ட சேதி என்னவெனில் ஒழுங்கற்ற குற்றவியல் தண்டனை அமைப்பு தொடர்ந்து அரசியல் அழுத்தங்களால் பாதிக்கப்படக் கூடியதாக இருக்கிறது மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சுதந்திரமாக நடமாட உதவுகிறது. இந்தியாவில் நான்கு பாலியல் வல்லுறவு வழக்கில் ஒன்றில் மட்டுமே தண்டனை அறிவிக்கப்பட்டு முடித்து வைக்கப்படுகிறது.

மேலும், இந்தியாவில் பெரும்பாலான ஆண்கள் மற்றும் பெண்கள் பாலியல் வன்முறை முக்கியமான பிரச்னை என்பதையும் அவை உலகரங்கில் இந்தியாவுக்கு பல ரூபங்களில் தீவிர பிரச்னை விளைவிக்கின்றன என்பதையும் நம்ப மறுக்கிறார்கள். மேலும், மோதியின் பாஜக உட்பட பெரும்பாலான அரசியல் கட்சிகள் பாலியல் வல்லுறவானது இந்தியாவை முடக்கக்கூடிய சமூக நெருக்கடி என்பதை உணர்ந்து அதனை கருத்தில் கொண்டு செயல்படுவதில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: