கத்துவா வன்புணர்வு வழக்கை ஜம்முவில் நடத்தக்கூடாது: சிறுமியின் குடும்ப வழக்கறிஞர்

பட மூலாதாரம், MOHIT KHANDHARI/ BBC
- எழுதியவர், சரோஜ் சிங்
- பதவி, பிபிசி இந்தி
நாட்டையே உலுக்கிய கத்துவா பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. வழக்கு விசாரணை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற கூடாது, என கொலை செய்யப்பட்ட எட்டு வயது சிறுமியின் குடும்பத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
"அந்த சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும். ஆனால் வழக்கு விசாரணை ஜம்மு காஷ்மீரில் நடைபெற்றால் அது நியாயமாக இருக்காது. கத்துவாவில் குற்றப்பிரிவு போலீஸார் மிரட்டப்பட்டனர். எங்கும் 'பார்த் மாதா கீ ஜே' என்று கோஷங்கள் எழுப்பப்படுகின்றன. இது போன்ற சூழலில் இம்மாநிலத்தில் வழக்கு முறையாக விசாரிக்கப்படாது " என்கிறார் பிபிசியிடம் பேசிய பாதிக்கப்பட்ட குடும்பத்தின் வழக்கறிஞர் தீபிகா ராஜாவத்
கடந்த ஜனவரி மாதம், இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீர் பகுதியில் உள்ள கத்துவா மாவட்டத்தின் அருகே ரசனா கிராமத்தில் தன் குதிரையை மேய்க்க சென்ற 8 வயது சிறுமி வீடு திரும்பவில்லை. ஏழு நாட்களுக்கு பிறகு சிறுமியின் உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டது. உடலில் ஆழமான காயங்கள் இருந்தன.

பட மூலாதாரம், MOHIT KHANDHARI/ BBC
சிறுமியை கொலை செய்வதற்கு முன், அவளுக்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டு வன்புணர்வு செய்யப்பட்டதாக உடற்கூறாய்வு அறிக்கை உறுதிப்படுத்தியது.
இதனை ஜம்மு காஷ்மீர் மாநில குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக இதுவரை 8 நபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஏப்ரல் 9ஆம் தேதியன்று, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு போலீஸார் கத்துவா மாவட்ட நீதிமன்றத்துக்குள் நுழைய முற்பட்டபோது அவர்களை சில வழக்கறிஞர்களே தடுக்க முயன்றனர்.
இதனை அடிப்படையாகக் கொண்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தின் வழக்கறிஞர் இந்த வழக்கு விசாரணை ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வெளியே நடைபெற வேண்டும் என்று கோருகிறார்.

பட மூலாதாரம், Getty Images
ஆனால், இப்படி வழக்கு விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்றுவது நடைமுறையில் சாத்தியமா? விசாரணை நடைபெறும் நாட்களில் எல்லாம் வேறு மாநிலத்துக்கு சென்று, வருவது அந்தக் குடும்பத்தால் முடியுமா?
"இந்த வழக்கில் ஒட்டு மொத்த நாடும் எங்களுடன் உள்ளது. ஆதலால், அக்குடும்பத்தினரைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை" என்கிறார் தீபிகா.
கத்துவா வழக்கில் வழக்கறிஞராக இருப்பதால் தமக்கு பல மிரட்டல்கள் வருவதாக அவர் கூறுகிறார். நீதிமன்ற படிகளில் வைத்தே, வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் தன்னை மிரட்டியதாக தீபிகா தெரிவித்தார்.
ஆகவே, தமக்கு பாதுகாப்பு கோரியிருப்பதாகவும் அவர் கூறினார்.
2013ஆம் ஆண்டில் வேறொரு விஷயம் தொடர்பாக வழக்கறிஞர்கள் சங்கத்தில் இருந்து தீபிகா நீக்கப்பட்டார்.
இதன் மறுப்பக்கம்
தீபிகாவின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதராமற்றவை என்கிறார் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பூபீந்தர் சிங்.
கத்துவா வழக்கில் தீபிகாதான் வழக்கறிஞர் என்பதே தமக்கு தெரியாது என்கிறார் பிபிசியிடம் பேசிய பூபீந்தர். ஆனால், இந்த வழக்கை மொத்தமாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றார் அவர்.
குற்றப்பிரிவு போலீஸார் இந்த வழக்கிற்கு இந்து - முஸ்லிம் சாயம் பூச முயற்சித்ததாக அவர் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
இந்நிலையில், குற்றப்பிரிவு விசாரணையானது பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு திருப்தி அளிப்பதாகவும், அவர்கள் சிபிஐ விசாரணை கேட்கவில்லை என்றும் தெரிவித்தார் வழக்கறிஞர் தீபிகா.
"தற்போது சிபிஐயால் இந்த வழக்கில் என்ன செய்துவிட முடியும்? சிறுமியின் உடைகள் துவைக்கப்பட்டு விட்டன. அனைத்து ஆதாரங்களும் காணாமல் போயுள்ளன" என்று அதற்கு காரணம் கூறுகிறார் தீபிகா.
இவ்வழக்கிற்கு இந்து - முஸ்லிம் சாயம் பூசப்படுவதாக மனம் வருந்தியுள்ளார் தீபிகா.
"நான் ஒரு காஷ்மீரி பண்டிட். காஷ்மீரில் பிறந்தேன். ஆனால் என் பணியிடம் ஜம்முதான். நானும் இந்து சமூகத்தை சேர்ந்தவள்தான். அவ்வப்போது எனக்கே அதை நினைத்து வெட்கமாக இருக்கிறது" என்கிறார் அவர்.
இந்த வழக்கு தீபிகாவிடம் வந்தது எப்படி?
இதற்கு பதிலளித்த தீபிகா, "நான் குழந்தைகளின் நலன் மற்றும் உரிமைக்காக பல காலமாக வேலை செய்து வருகிறேன். நான் இந்த வழக்கை முதலில் இருந்தே கவனித்து வந்தேன். எனக்கும் ஐந்து வயது பெண் குழந்தை இருக்கிறாள். பாதிக்கப்பட்ட சிறுமியை நினைக்கும் போது மிகவும் வருத்தமாக இருந்தது. எனவே, நானே அவர்களை சந்தித்து வழக்கை எடுத்துக் கொள்ள முன் வந்தேன்" என்றார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












