ஐஎன்எக்ஸ் முறைகேடு விவகாரம்: கார்த்தி சிதம்பரம் கைது
ஐஎன்எக்ஸ் முறைகேடு விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை மத்திய புலனாய்வுத் துறை இன்று சென்னையில் கைதுசெய்தது.

பட மூலாதாரம், KARTI P CHIDAMBARAM FACEBOOK
சென்னை விமான நிலையத்தில் கார்த்தி சிதம்பரம் கைதுசெய்யப்பட்டார்.
ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் தனக்கு எதிராக அமலாக்கப் பிரிவு அனுப்பியிருக்கும் சம்மன்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தை அணுகினார் கார்த்தி சிதம்பரம்.
முன்னதாக கடந்த பிப்ரவரி 16ஆம் தேதியன்று கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரான எஸ்.பாஸ்கரராமன் கைது செய்யப்பட்டார்.
ஐஎன்எக்ஸ் மீடியா என்ற நிறுவனம் அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரிய விதிகளுக்கு மாறாக மொரீசியஸ் நாட்டிலிருந்து முதலீடுகளைப் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக அந்த நிறுவனத்திற்கு எதிரான விசாரணையை திசை திருப்ப கார்த்தி சிதம்பரம் பணம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக சி.பி.ஐ. நடத்திய சோதனைகளில் இதற்கென வழங்கப்பட்ட பத்து லட்ச ரூபாய் மதிப்பிலான வவுச்சர் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

பட மூலாதாரம், Pti
இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை ஜனவரி 18ஆம் தேதி கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடத்தியது. அதற்குப் பிறகு பிப்ரவரி 2ஆம் தேதி மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டபோது, இது தொடர்பாக வழக்குத் தொடர்ந்திருப்பதாகக் கூறிய கார்த்தி சிதம்பரம், விசாரணைக்கு வரவில்லை.
ஐஎன்எஸ் மீடியா விவகாரம் தொடர்பாக கடந்த மே மாதம் கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. இதே வழக்கில் ஐஎன்எஸ் மீடியா நிறுவனத்தின் இயக்குனர் பீட்டர் முகர்ஜி, இந்திராணி முகர்ஜி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தற்போது சென்னை விமான நிலையத்தில் உள்ள கார்த்தி சிதம்பரம் தில்லி கொண்டுசெல்லப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிற செய்திகள்:
- எகிப்து: 2,000 ஆண்டுகள் பழமையான சுடுகாட்டில் கிடைத்த வாழ்த்துச் செய்தி
- ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்த திரண்ட பொதுமக்கள்
- மேலும் 1,251 கோடி ரூபாய் அதிகரிக்கும் நீரவ் மோதியின் முறைகேடு
- ‘சர்வாதிகார பூமியில் சாந்தம் அளித்த ஸ்ரீதேவி’ - பாகிஸ்தான் நினைவு குறிப்புகள்
- உலகப் பார்வை: 'சிரியாவுக்கு வடகொரியா ரசாயன ஆயுதம் வழங்குகிறது'
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












