தீவன ஊழல் வழக்கு: லாலு குற்றவாளி எனத் தீர்ப்பு

பிஹார் மாநில முன்னாள் முதலமைச்சரும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் கால்நடைத் தீவன ஊழல் வழக்கு ஒன்றில் குற்றவாளி என்று ராஞ்சியில் உள்ள சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

லாலு பிரசாத் யாதவ்

பட மூலாதாரம், PRAKASH SINGH

தீர்ப்பு வெளியானவுடன் நீதிமன்ற வளாகத்திலேயே அவர் கைது செய்யப்பட்டார். வரும் ஜனவரி 3-ஆம் தேதி தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படவுள்ளன.

மொத்தம் 34 பேர் குற்றம் சாட்டப்பட்டிருந்த இந்த வழக்கில் 11 பேர் விசாரணை காலத்தின்போது மரணம் அடைந்தனர். இந்த வழக்கில் லாலு உள்பட 16 பேர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

லாலு முதலமைச்சராக இருந்த 1991 மற்றும் 1994 ஆகிய ஆண்டுகளுக்கு இடையே தியோகார்க் கருவூலத்தில் இருந்து 84 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் முறைகேடாக எடுக்கப்பட்டதாக தொடரப்பட்ட இந்த வழக்கின் வாதம் கடத்த டிசம்பர் 15 அன்று முடிவடைந்தது.

அரசுப் பணத்தை முறைகேடாக அதிகாரிகள் கையாடல் செய்தது தெரிந்தும் அப்போது முதலமைச்சராக இருந்த லாலு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்தார் என்று சி.பி.ஐ அவர் மீது குற்றம் சாட்டி இருந்தது.

இதே வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த பிஹார் மாநிலத்தின் இன்னொரு முன்னாள் முதலமைச்சரான ஜெகநாத் மிஸ்ரா உள்ளிட்ட ஆறு பேர் இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பீகார் முன்னாள் முதலமைச்சர் ஜகன்நாத் மிஷ்ரா

பட மூலாதாரம், NEERAJ SINHA

படக்குறிப்பு, பீகார் முன்னாள் முதலமைச்சர் ஜெகநாத் மிஷ்ரா

பிரிக்கப்படாத பிஹார் மாநிலத்தில் இருந்த சாயிபாசாவில் உள்ள கருவூலத்தில் இருந்து 37.7 கோடி ரூபாய் முறைகேடாக எடுக்கப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் கடந்த அக்டோபர் 2013-இல் குற்றம் நிரூபிக்கப்பட்டு லாலுவுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அதனால் தான் வகித்து வந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் அவர் இழந்தார். எனினும், இரண்டு மாதங்களிலேயே அவர் பிணையில் வெளியில் வந்தார்.

ஒரு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நபரை அதே போன்றதொரு வழக்கில் விசாரணைக்கு உட்படுத்த முடியாது என்று கடந்த 2014-இல் ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

லாலு பிரசாத் யாதவ்

பட மூலாதாரம், RAVEENDRAN

படக்குறிப்பு, லாலு பிரசாத் யாதவ்

அதை எதிர்த்து சி.பி.ஐ மேல் முறையீடு செய்ததை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ததுடன், ஒன்பது மாத காலத்துக்குள் வழக்கு விசாரணையை முடிக்க விசாரணை நீதிமன்றத்துக்கு கடந்த மே மாதம் உத்தரவிட்டது.

கால்நடைகளுக்கு தீவனம் மற்றும் மருந்து வாங்குவதாகக் காரணம் கூறி, ஜெகநாத் மிஸ்ரா மற்றும் லாலு பிரசாத் யாதவ் ஆட்சிக்கு காலத்தில் சுமார் 900 கோடி ரூபாய் அளவுக்கு அதிகாரிகள் முறைகேடாக அரசு நிதியைக் கையாடல் செய்த குற்றச்சாட்டுகளின்பேரில் கடந்த 1996-இல் சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்தது.

லாலு பிரசாத், ஜெகநாத் மிஸ்ரா, லாலு அமைச்சரவையில் இருந்த அமைச்சர்கள் உள்ளிட்டோர் மீது ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்ததாக லாலு தரப்பு வழக்கறிஞர் பிரபாத் குமார் பிபிசி-யிடம் தெரிவித்தார்.

ராஞ்சி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் லாலு பிரசாத் யாதவ் மீது இன்னும் மூன்று கால்நடை தீவன ஊழல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :