பெண்களின் சமத்துவத்திற்காக ஆடைகளைக் களையும் பெண் நாடகக் கலைஞர்
ஓர் இளம் பெண் ஆடைகளின்றி மேடையில் தனது நிகழ்ச்சியைத் தொடங்குவதை நீங்கள் கற்பனை செய்து பாருங்கள். மிகவும் பழமைவாதம் நிறைந்த இந்தியச் சமூகத்தில் அவ்வாறு கற்பனை செய்து பார்ப்பது மிகவும் கடினம்.

பட மூலாதாரம், Claudia Pajewski
ஆனால், மேடை நாடக நடிகரும், நாடக ஆசிரியருமான மல்லிகா தனேஜாவுக்கு பெண்களின் சமத்துவத்திற்குப் போராட்ட அவரது உடல்தான் வலிமையான ஆயுதம். இவ்வாறு செய்ய அவரைத் தூண்டியது எது என்பதை பிபிசியின் ஆயிஷா பெரேராவிடம் அவர் பகிர்ந்து கொள்கிறார்.
"நான் முதல் முறையாக ஆடைகளின்றி நடித்தது ஒரு பொது வெளியில். அது ஒரு கேளிக்கையாக இருந்தது," என்கிறார் மல்லிகா.
"அதன் காணொளியை நீங்கள் பார்த்தால், வெளிச்சம் வரும்போது அதில் ஒரு திடீர் அசைவு இருப்பது தெரியும். அது அதைப் பதிவு செய்த ஒளிப்பதிவாளருக்கு ஏற்பட்ட அதிர்ச்சியால் அவர் கீழே விழும் நிலைக்கு சென்றதால் ஏற்பட்ட அசைவு. பார்வையாளர்களில் யாரோ ஒருவர் 'ஐயோ!' என்றே கத்திவிட்டார்," என்று சிரித்துக்கொண்டே அந்த நிகழ்ச்சியை நினைவுகூர்கிறார்.
ஆடைகளின்றி நடிப்பதே அதிகமாகப் பேசப்பட்டாலும், தனது நாடகங்களில் மையப்பொருளாக இருப்பது நிர்வாணமல்ல என்கிறார் 33 வயதாகும் அந்தக் கலைஞர்.
"தோடா தியான் சே" (கொஞ்சம் கவனமாக இருங்கள்) எனும் அவரது நாடகம் பெண்களின் ஆடைகளுக்கும், அவர்கள் மீதான பாலியல் வன்முறைக்கும் உண்மையிலேயே தொடர்பு உள்ளதா என்று சிந்திக்க வைக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.
"ஒரு கூட்டம் களைய என்ன தேவைப்படுகிறது? ஒரு நபர் வெளியேறுவது. ஒரு கூட்டத்தின் நடுவில் நிற்கும் ஒரு உடல் அந்தக் கூட்டத்தையே நிலைபெறச் செய்ய முடியும்," என்கிறார் மல்லிகா.
"எடுத்துக்காட்டாக, ஒரு குழுவினர் ஒரே திசையில் ஓடும்போது, எதிர்திசையில் ஓடும் ஒருவரால் அவர்கள் அனைவரின் ஓட்டத்தையும் தொந்தரவு செய்ய முடியும்."

பட மூலாதாரம், Claudia Pajewski
நாடகத்தின் முதல் காட்சியில், தொடர்ந்து எட்டு நிமிடங்கள் ஆடைகளின்றி நின்றுகொண்டு பார்வையாளர்களை அவர் நோக்குவது அதைப் போன்றதே.
கடந்த நான்கு ஆண்டுகளில், ஒவ்வொரு முறையும் அந்த நாடகம் அரங்கேற்றப்படும்போதும், அந்த முதல் சில நிமிடங்கள் அமைதியால் அரங்கம் நிறைந்திருக்கும்.
அந்தத் தருணத்தில் பார்வையாளர்கள் தன்னைப் பார்ப்பதை அவர் பார்க்கிறார். எண்ணிக்கையில் தன்னைவிட அவர்கள் அதிகமாக இருந்தாலும், அங்கு மிகவும் வலிய உடலாக அவர்தான் உள்ளார். மிகவும் எளிய இலக்காகவும் அவர்தான் உள்ளார்.
நிர்வாணமாக நடிப்பது அவருக்கு அச்சமூட்டும் ஒன்றாகவும் உள்ளது. செல்பேசிகள் மற்றும் மற்ற காணொளிகளை பதிவு செய்யும் கருவிகளை அவர் அரங்கத்தினுள் அனுமதிப்பதில்லை. அவர் இந்த நாடகத்தை அரங்கேற்றத் தொடங்கிய இந்த நான்கு ஆண்டுகளில் அவரின் நிர்வாணமான புகைப்படமோ, காணொளியொ இணையத்தில் வரவில்லை.
அந்த நாடகம் தொடரும்போது ஒன்றின் மேல் ஒன்றாக பல ஆடைகளை அணியும் மல்லிகா, ஒரு கட்டத்தில் ஹெல்மெட் அணிந்துகொள்கிறார். ஒரு பெண்ணாக அவர் 'கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்' என்று தனது பார்வையாளர்களிடம் கூறுகிறார்.

பட மூலாதாரம், Claudia Pajewski
பாலியல் வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்களையே குறைகூறுவதற்கான அடிநாதமாக 'கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்' எனும் தொடரே உள்ளது. இரவு நேரங்களில் ஏன் அவர்கள் வெளியில் வருகிறார்கள்? ஆண்களுடன் அவர்கள் ஏன் தனியாகச் செல்கின்றனர்? அவர்கள் ஏன் குறிப்பிட்ட வகையில் ஆடைகளை அணிந்தனர்? ஏதாவது தவறாக நடந்தால் அதற்கு அவர்களும் பொறுப்பு. 'அவர்கள் கொஞ்சம் கவனமாக இருந்திருக்க வேண்டும்' என்று கூறப்படுகிறது.
இந்த எண்ணத்தை மாற்ற, தனது உடலையே ஆயுதமாக பயன்படுத்த முடிவு செய்தார் மல்லிகா.
"பெண்கள் இதை எளிதில் புரிந்து கொள்கின்றனர். ஆனால், இது தங்களுக்கு ஒரு விழிப்புணர்வை உண்டாக்கியதாக பல ஆண்கள் கூறுகின்றனர். அந்த நாடகத்தைப் பார்த்தபின்னர், ஓர் ஆணாக இருப்பதை எண்ணி மிகவும் கோரமாக உணர்வதாக பலர் கூறுகின்றனர். ஆண்களை, தாழ்மையாக உணரச் செய்வது என் நோக்கமல்ல. ஒரு விவாதத்தை உண்டாக்குவதே என் நோக்கம்," என்கிறார் மல்லிகா.
தனியாக மேடையில் நடிக்கும் எண்ணத்தை தனது சொந்த வாழ்வில் இருந்தே உண்டாக்கிக்கொண்டார் மல்லிகா. திருமணம் செய்து கொள்ளாத அவர், வழக்கமான 9-5 மணி வேளையில் அல்லாமல் மேடை நாடகங்களில் நடிப்பதன் மூலமே பொருள் ஈட்டுகிறார்.
"என் தந்தையோ, என் குடும்பத்தினரோ என் வாழ்க்கை முறை அல்லது வேலை குறித்து கேள்வி எழுப்புவதில்லை," என்கிறார் அவர்.
முன்பு இருந்தது போல பெண்கள் தனியாக வாழ்வது அரிதான ஒன்றாக இல்லாமல் போனாலும்,இந்தியச் சமூகத்தில் இது பரவலான ஒன்றல்ல. திருமணம் ஆகாத பெண்கள் தங்கள் பிறந்த வீட்டிலேயே வாழ வேண்டும் என்றுதான் இன்னும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், அதிகம் கண்டுகொள்ளப்படாத எனினும் முக்கியமான, இத்தகைய கலகங்களே நிழல் உலகில் இருந்து வெளியில் வந்து, பெண்கள் தங்கள் உரிமைகளை நிலை நாட்டுவதற்கான வழிமுறையாக உள்ளன.

பட மூலாதாரம், Claudia Pajewski
"வேண்டாம் என்று சொல்வதற்கான வலிமை எங்களுக்கு உள்ளது. அதனால் பின்விளைவுகள் இருக்கலாம். வேண்டாம் என்று சொல்வது சிலருக்கு பிறரை விடவும் எளிதாக இருந்தாலும், இறுதி முடிவு எங்களுடையதே. எங்களுக்கு நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக நாங்களே குரல் கொடுக்காவிட்டால், வேறு யார் கொடுப்பார்கள்?" என்று கேள்வி எழுப்புகிறார் மல்லிகா.
ஒரே ஒரு முறையேனும் ஒரு பெண் வேண்டாம் என்று கூறிவிட்டால் கூட அவர் பெண்களின் சமத்துவத்திற்கான பங்கை ஆற்றிவிட்டார். தனிநபர்கள் ஒரு நிலையை எடுக்க முடிவு செய்துவிட்டால் மாற்றம் நடக்கும்.
கடந்த 2012-இல் அது நடந்தது. மோசமான டெல்லி பாலியல் வன்முறை சம்பவம் நூற்றுக்கணக்கான பெண்களை வீதிகளில் இறங்கிப் போராடத் தூண்டியது.
இந்தியாவின் கடுமையான பாலியல் வன்முறைக்கு எதிரான சட்டம், பாலியல் வன்முறை குற்றங்கள் பதிவு செய்யப்படுவது மற்றும், அது குறித்துப்பேசப்படுவது ஆகியன அந்தக் கோபத்தின் நேரடி விளைவுகளே ஆகும்.
அவர் மெலிதான தேகம் உடையவராக இல்லாவிட்டால், ஆடைகளின்றி நடிப்பாரா என்று பலரும் அவரைக் கேள்வி கேட்கின்றனர்.

பட மூலாதாரம், CLAUDIA PAJEWSKI
"எனக்கு அதற்கான பதில் தெரியாது. இந்த உடல்தான் எப்போதும் எனக்கு இருந்தது. அப்படித்தான் செய்திருப்பேன் என்று நம்புகிறேன் என்றுதான் என்னால் கூறமுடியும். ஆனால், மெலிய உடல்தான் சமூகத்தில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது," என்று அவர் கூறுகிறார்.
"சில நேரங்களில் நான் நன்றாக உணர்வதில்லை. சில நேரங்களில் எனக்கு மாதவிடாய் உண்டாகிறது. ஆனாலும் மேடையேறி நான் அதைச் செய்ய வேண்டியுள்ளது," என்று கூறுகிறார் அந்தக் கலைஞர்.
"இது என் உடல். இதன் மீதான எனது கட்டுப்பாட்டை நான் இழக்க மாட்டேன்," என்று முடிக்கிறார் மல்லிகா.
சமத்துவத்துக்காகப் போராடும் இந்திய பெண்கள் பற்றிய தொடரின் ஒரு பகுதி இந்தக் கட்டுரை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












