கல் தட்டுப்பாடு நீங்கினால், புவி சார் குறியீடு பலன் தரும்: மாமல்லபுர சிற்பிகள்
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற மாமல்லபுரம் சிற்பக்கலைக்கு கடந்த வாரம் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இது இச்சிற்பங்களின் விற்பனைக்கு சர்வதேச அளவில் ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இச் சிற்பங்களை வடிப்பதற்கான கல்லுக்கு நிலவும் தட்டுப்பாட்டினை நீக்க தமிழக அரசு முன்வந்தால்தான் புவிசார் குறியீடு கிடைத்ததன் பலன் முழுமையாகக் கிடைக்கும் என்று நினைக்கிறார்கள் மாமல்லபுர சிற்பிகள்.

பட மூலாதாரம், DIBYANGSHU SARKAR/AFP/Getty Images
ஏழாம் நுற்றாண்டில் பல்லவர் காலத்தில் இருந்து கலைநயம் மிக்க கற்சிற்பங்கள் செய்யப்படும் இடமாக மாமல்லபுரம் விளங்கிவருகிறது.
புவிசார் குறியீட்டால் என்ன பயன்?
சிற்ப சாஸ்திரம் மற்றும் வாஸ்து சாஸ்திரம் ஆகியவற்றின் அடிப்படையில், உண்மை தோற்றத்தில் இருப்பதுபோல மாமல்லபுரத்தில் சிற்பங்கள் செதுக்கப்படுவதாலும், தொன்மையான சிற்ப நுணுக்கம் இன்றும் பின்பற்றப்படுவதாலும், மாமல்லபுர சிற்பக்கலைக்கு புவிசார் குறியீடு அளிக்கப்பட்டுள்ளது என புவிசார் குறியீடு வழக்கறிஞர் சஞ்சய்காந்தி கூறுகிறார்.
புவிசார் குறியீடு அளிக்கப்பட்டால் ஒரு பொருளோ அல்லது கலைவடிவமோ உலகளவில் அங்கீரம் பெறும் என சஞ்சய்காந்தி குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், AFP
''பெரிய சிற்பங்களாக இருந்தாலும், உயரம் குறைந்த சிற்பங்களாக இருந்தாலும், அவற்றின் தோற்றம், உணர்வுகளை வெளிப்படுத்தும் அமைப்பு போன்றவை மாமல்லபுர சிற்பங்களின் தனிச்சிறப்பு. பரம்பரை பரம்பரையாக சிற்பம் செய்வதையே தொழிலாக கொண்ட நூற்றுக்கணக்கான குடும்பங்கள் மாமல்லபுரத்தில் வசிக்கின்றனர். வருங்கால சந்ததிகளும் இந்த கலைத்துறையில் ஈடுபடுவதில் ஆர்வத்துடன் உள்ளதால், மேலும் இதை வளர்தெடுக்க இந்த அங்கீகாரம் உதவும்,'' என்றும் அவர் தெரிவித்தார்.
கருங்கற்களுக்கு தொடரும் தட்டுப்பாடு
கருங்கற்களில் கலைநயம்மிக்க கடவுள் உருவங்களை செதுக்குதல், தமிழிலக்கியத்தில் உள்ள கதைகளை வடித்தல் மற்றும் விலங்கு உருவங்களை உயிருள்ளவை போன்று தோன்றும் வகையில் சிற்பமாக செதுக்குதல் ஆகியவை இங்கு நடைபெறுகின்றன. ஆனால், சில சமயம் கற்கள் இல்லாமல் பணிகள் பாதிக்கும் நிலை உள்ளது என சிற்பிகள் சங்கத்தினர் கூறுகின்றனர்.
''பல வெளிநாட்டினர் தேடிவந்து மாமல்லபுர சிற்பங்களை வாங்கிச் செல்கின்றனர். எங்களின் கலைவடிவத்திற்கு ஊக்கம் கொடுக்கும் விதமாக புவிசார் குறியீடு கிடைத்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் மூலப்பொருள் இல்லாமல் சில நேரங்களில் சிற்பங்களை தேவையான உரிய நேரத்தில் ஆர்டர் கொடுத்தவர்களிடம் அளிக்க முடியவில்லை,'' என வேதனையுடன் கூறுகிறார் 63 வயதான தேசிய விருது பெற்ற சிற்பி தேவராஜ் முனுசாமி.

பட மூலாதாரம், DIBYANGSHU SARKAR/AFP/Getty Images
புவிசார் குறியீடு காரணமாக மாமல்லபுரம் சிற்பங்களுக்கான வியாபாரம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என்றும், இந்த நேரத்தில் கற்களை விற்பனை செய்யும் பொறுப்பை அரசு ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் கூறுகிறார் தேவராஜ்.
''சிலைசெய்வதற்கான கற்களுக்கு தனி குவாரி வேண்டும்''
தற்போதுவரை தனியார் நிறுவனங்கள் மூலம் சாலைபோடுவதற்கு தேவையான ஜல்லிகளை உடைக்கும் குவாரிகளில் இருந்து சிற்பங்கள் செய்வதற்கான கற்களை பெறுவதாக சிற்பி பாஸ்கர் தெரிவித்தார்.
''மாமல்லபுரத்தில் மட்டும் 2 ஆயிரம் சிற்பிகள் உள்ளனர். அரசு பொறுப்பேற்று கற்களை விநியோகம் செய்தால், மூலப்பொருளைப் பெற சிற்பிகள் சிரமப்படாமல் இருக்கமுடியும். தரமான கற்கள் உள்ள சங்கராபுரம் கல்குவாரி 15 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் அந்த குவாரியை மட்டுமாவது சிற்பக்கலைக்கான குவரியாக அறிவிக்கவேண்டும்,'' என்கிறார் சிற்பி பாஸ்கரன்.

பட மூலாதாரம், Richard Harrington/Three Lions/Getty Images
சர்வதேச சந்தையை எதிர்நோக்கி சிற்பிகள் வேலை செய்ய ஆர்வத்துடன் உள்ளதாகவும், கற்கள் கிடைப்பதை உறுதிசெய்தால், தனியார் நிறுவனங்களிடம் அதிக விலைக்கு கற்கள் வாங்குவதை தடுக்கமுடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
அரசு பதில்
சிற்பிகளின் கோரிக்கைகள் தொடர்பாக கைவினை கலைத்துறை இயக்குநர் சந்தோஷ் பாபுவிடம் கேட்டபோது, ''கற்கள் கிடைப்பதில் உள்ள சிக்கலை தீர்க்கச் சிறப்பு கவனம் செலுத்துவோம். அரசே கற்களை விநியோகம் செய்ய வேண்டும் என சிற்பிகள் விரும்புவது நியமான ஒன்றுதான். அவர்களுக்கு உதவி செய்ய சிறப்பு திட்டம் ஒன்றைக் கொண்டு வருவோம்,'' என பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
இந்தியாவில் ஜெய்ப்பூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய இரண்டு நகரங்கள் மட்டுமே இதுபோன்ற கைவினைக் கலைத்துறைக்கு புகழ்பெற்ற நகரங்களாக உள்ளன என சர்வதேச அளவில் கருதப்படுகிறது. மாமல்லபுர சிற்பக்கலையை ஊக்குவிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம் என்று மேலும் கூறினார் சந்தோஷ்பாபு.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












