கரையேற வழியின்றித் தவிக்கிறது காணாமல் போன மீனவர் குடும்பம்
- எழுதியவர், விக்னேஷ்.அ
- பதவி, பிபிசி தமிழ்
மே 21 2017. அன்று ஒரு ஞாயிற்றுக் கிழமை. ராமேஸ்வரம் அருகே உள்ள, பெரும்பாலும் கிறித்தவர்கள் வாழும் மீனவ கிராமமான ஓலைக்குடாவில் உள்ள மக்களில் பெரும்பாலானோர் தேவாலயம் சென்றிருந்தனர்.

பட மூலாதாரம், Getty Images
தனது சிறிய நாட்டுப் படகை எடுத்துக்கொண்டு நண்டு வலையை விரிக்க கடலுக்குள் சென்றார் 62 வயதாகும் மீனவர் எட்வர்ட் ஃபிரான்சிஸ். அவர் கடலுக்குள் போனதை அதிகமாக யாரும் கவனிக்கவில்லை.
நாட்டுப்படகுகளுக்கு மூன்று கடல் மைல்களுக்கு மேல் செல்ல அனுமதி இல்லை.
வழக்கமாக, கடலுக்குள் சுமார் ஒரு கடல் மைல் தொலைவுதான் உள்ளே செல்வார் எட்வர்ட். முதல் நாள் சென்று வலையை கடற்பரப்பில் விரித்து வைத்துவிட்டு வந்தால், அடுத்தநாள் சென்று வலையையும், அதில் சிக்கியுள்ள நண்டுகளையும் எடுத்து வருவார்கள்.
இந்த முறை வலை விரிக்கச் சென்ற எட்வர்ட் கரை திரும்பவே இல்லை. அவர் கடலுக்குள் சென்றதையே பெரும்பாலானவர்கள் கவனிக்கவில்லை என்பதால் அவர் திரும்பிவிட்டாரா என்பதும் யாருக்கும் தெரியவில்லை.
இரவு வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை என்று அவரது குடும்பத்தினர் சொன்னவுடன்தான் பதற்றத்துடன் அனைவரும் கடலுக்குள் அவரைத் தேட ஆரம்பிக்கிறார்கள். இன்றுவரை எட்வர்ட்டின் உடல் கிடைக்கவில்லை. அவருக்கு என்ன ஆனது என்றும் தெரியவில்லை.
அவரது மகளுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இரண்டு மகன்களும் தினக்கூலிகளாக வேலைக்குப் போகிறார்கள். அவர்களில் ஒருவர் பேசும் மற்றும் கேட்கும் திறன் இல்லாத மாற்றுத் திறனாளி. குடும்ப பொருளாதாரதிற்கு பெரும் உறுதுணையாக இருந்த அவரது இழப்பு அக்குடும்பத்தை பெரும் இன்னலுக்கு ஆளாக்கியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
"மீனவர்கள் காணாமல் போனால் அரசு நாளொன்றுக்கு ரூபாய் 250 வீதம் கொடுக்கும் உதவித்தொகை, என் சித்தப்பா காணாமல் போன, சுமார் 6 மாதம் கழித்து கடந்த வாரம்தான் கிடைத்தது. அதுவும் முதல் 100 நாட்களுக்கு மட்டுமே," என்கிறார் பிபிசி தமிழிடம் பேசிய, அதே கடலோர கிராமத்தில் வசிக்கும் அவரது அண்ணன் மகனான பிரின்ஸ்.
"பல முறை பல அலுவலகங்களுக்கு அலைந்து திரிந்த பின்னரே அதுவும் கிடைத்தது. ஏற்கனவே வருமானம் இன்றி கடனில் இருந்த குடும்பத்துக்கு அந்தப் பணமும் பெரிய அளவில் உதவியாக," இல்லை என்கிறார் பிரின்ஸ்.
எட்வர்ட் காணாமல் போன பிறகு, குடும்பத்தை நடத்த கருவாடு வாங்கி விற்க முயற்சி செய்தும் போதிய பணம் இல்லாததால் அதைச் செய்ய முடியவில்லை என்று அவரது மனைவி சகாயமேரி(58) கூறியதாகவும் தெரிவிக்கிறார் பிரின்ஸ்.
இது ஒரு குடும்பத்தின் நிலை மட்டுமல்ல. காணாமல் போன அல்லது இலங்கை கடல் படையின் துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்த பல தமிழக மீனவக் குடும்பங்களின் நிலையும் இதுதான்.
"முன்பெல்லாம் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடோ, தாக்குதலோ நடந்தால் அரசாங்கத்திடம் இருந்து கண்டனக் குரலாவது எழும். இப்பொது இருக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் இருந்து ஒரு அறிக்கை கூட வருவதில்லை. நமது கடலோரக் காவல் படையே நம்மைத் தாக்கும் நிலைதான் இப்போது உள்ளது," என்று பிபிசி தமிழிடம் கூறினார் தமிழக கடலோர விசைப் படகு மீனவர் நலச் சங்கத்தின் பொது செயலாளர் என்.ஜே.போஸ்.
"விதிமுறைகளை மீறி அதிக நீளம் மற்றும் அகலமுள்ள படகுகளை மீன்பிடிக்க பயன்படுத்துதல், தடை செய்யப்பட்ட ரெட்டை வலை, குறுக்கு வலை உள்ளிட்டவற்றை பயன்படுத்துதல், ஆட்டோவுக்கு லைசன்ஸ் வாங்கிவிட்டு அதில் லாரி ஓட்டுவதுபோல, சிறிய படகுகளுக்கு அனுமதி வாங்கிவிட்டு அதிக குதிரைத் திறன் உள்ள எஞ்சின்களை பயன்படுத்தி மீன்பிடித்தல் உள்ளிட்டவற்றையே அப்பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீதான குற்றச்சாட்டுகளாக இலங்கை அரசும், இலங்கை மீனவர்களும் முன்வைக்கின்றனர்," என்கிறார் போஸ்.
"மீனவர்களின் சுயகட்டுப்பாடு மட்டுமல்லாமல், முறையாக அனுமதிக்கப்பட்டுள்ள படகுகள் மற்றும் மீன்பிடிக் கருவிகளைத்தான் மீனவர்கள் பயன்படுத்துகிறார்களா என்பதையும் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். எல்லா மீனவர்களுக்கும் அத்தைய கருவிகள் வாங்க வசதி இருக்காது. ஆனால், சில பணம் படைத்தவர்கள் மட்டுமே வாங்கமுடியும். அத்தகைய பணக்கார மீனவர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுவதில்லை," என்கிறார் அவர்.
ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தம் என்று பக்தர்கள் புனித நீராடும் பகுதியிலேயே சாக்கடை கலந்துள்ளது என்றும் சாக்கடை மற்றும் பிற கழிவுகள் கலக்கப்படுவது கட்டுப்படுத்தப்படமால் கண்ணாடி போல் காட்சியளித்த மீன்பிடித் துறைமுகங்கள் கூட சேறும் சகதியுமாகத்தான் காட்சியளிக்கின்றன என்றும் மீன்வளமும் பாதிப்புக்கு உள்ளாகிறது என்றும் கூறுகிறார் போஸ்.
காணாமல் போன மீனவர்கள் தொடர்பாக தமிழக அரசின் கருத்தை அறிய பிபிசி தமிழ் பல முறை முயன்றும் உடனடியாக அரசின் கருத்தைப் பெற முடியவில்லை.
(உலக மீன் வள தினத்தை ஒட்டி இந்தக் கட்டுரை வெளியிடப்படுகிறது)
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













