பணமதிப்பு நீக்கத்தால் மாண்டவர்களுக்கு மோதி பதில் சொல்ல வேண்டும்: மு.க.ஸ்டாலின்
இந்தியாவில் கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி ரூ.500 மற்றும் ரூ.1,000 தாள்களின் மதிப்பு நீக்கப்பட்டு ஒரு ஆண்டு நிறைவடைந்ததை, இந்த ஆண்டு கருப்புப் பண ஒழிப்பு நாளாக மத்தியில் ஆளும் பாஜக கொண்டாடும் வேளையில், அதே நாளை தமிழகத்தில் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் கறுப்பு தினமாக அனுசரித்துள்ளனர்.

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் கறுப்பு உடை அணிந்து திமுகவினர் போராட்டம் நடத்தினர்.
திமுகவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், "கறுப்பு பணத்தை ஒழிக்கும் நாளாக பாஜக அறிவித்த நாள், இந்தியாவின் 120 கோடி மக்களுக்கு துன்பத்தை உருவாக்கிய நாளாக அமைந்துவிட்டது," என்றார்.
''யாரும் எதிர்பாராத வகையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை நள்ளிரவில் எடுக்கபட்டது. நள்ளிரவில்தான் நாம் சுதந்திரத்தைப் பெற்றோம். அந்த சுதந்திரத்தை நள்ளிரவில் தொலைத்துவிட்டோம். ஏடிஎம் வாசலில் மக்கள் கால் கடுக்க நின்றார்கள். பணத்திற்காக ஏடிஎம் வாசலில் நின்ற பலர் மயங்கி விழுந்தனர். நூற்றுக்கணக்காணவர்கள் மாண்டுபோனார்கள். இதற்கு பிரதமர் மோதி பதில் சொல்லவேண்டும்,'' என்று பேசினார் ஸ்டாலின்.
பண மதிப்பு நீக்கப்பட்ட பிறகு 74 முறை அறிவிப்புகள் வெளியிடப்பட்டன என்று கூறிய ஸ்டாலின் மத்திய அரசு பொருளாதார நிபுணர்களை கலந்து ஆலோசிக்காமல், இந்த நடவடிக்கையில் ஈடுபட்டது கண்டிக்கத்தக்கது என்றார்.

ஸ்டாலின் பேசும்போது சாதாரண மக்கள் தங்களது அன்றாட தேவைக்காக ஏடிஎம் வாசலில் பல மணிநேரம் நிற்கவேண்டிய நிலையில் இருந்தனர் என்று குறிப்பிட்டார். ''கூலித்தொழிலாளிகள் பலர் அரிசி வாங்குவதற்குக்கூடப் பணம் இல்லாமல் வரிசையில் நிற்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.''
''மருத்துவமனையில் அறுவை சிக்கிச்சை செய்வதற்கு பணம் செலுத்த முடியாமல் பலர், ஏடிஎம் வாசலில் நிற்கவேண்டிய கட்டாயம் இருந்தது,'' என்றார் ஸ்டாலின்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோதி சென்னை வந்திருந்த சமயத்தில் திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்த காரணத்தால் திமுக பணமதிப்பிழப்புற்கு எதிரான போராட்டத்தை நடத்தாது என்று பலர் தெரிவித்தனர். ஆனால் திமுக தனது கருத்தை மாற்றிக்கொள்ளவில்லை என்று ஸ்டாலின் கூறினார்.
திமுகவுடன், பிற எதிர்கட்சிகளான காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளின் தலைவர்களும் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













