நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி தமிழகமெங்கும் போராட்டங்கள்

கட்டாய நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு காரணமாக தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் மாணவி அனிதாவின் மரணத்திற்கு நியாயம் கேட்டு தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் மாணவர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் போராட்டம் நடத்திவருகின்றனர்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் காலவரையற்ற போராட்டம் நடத்திவருகின்றனர்.
திருவள்ளூர், திருச்சி, தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் உள்ள கல்லூரி மாணவர்கள் வகுப்பைப் புறக்கணித்து போராடிவருகின்றனர்.
இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கல்வித் திட்டம் இல்லாதபோது எல்லோரும் ஒரே மாதிரியான தேர்வை எழுதவேண்டும் என்று கட்டாயப்படுத்துவது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்கிறார் இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் மாரியப்பன்.
''நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் தவறு இழைத்துவிட்டன. கட்டாய நுழைவுத் தேர்வு குறித்து உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கில் மாநில உரிமைகளை புறக்கணிக்கக்கூடாது என்ற கூறப்பட்டதை அனைவரும் மறந்துவிட்டனர்'' என்றார் மாரியப்பன்.

திருவண்ணாமலையில் நடந்த போராட்டத்தில் உதவித்தொகை கொடுத்து மாணவி அனிதாவின் மரணத்தை அரசு மறைக்கப் பார்க்கிறது என்று மாணவர்கள் விவாதித்தாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமன், நீட் தேர்வுக்கு விலக்கு கொடுக்க தமிழகம் அவசரச் சட்டம் கொண்டுவந்தால், மத்திய அரசு உதவும் என்று கொடுத்த வாக்குறுதியைத் தமிழக மாணவர்கள் பெரிதும் நம்பியதாக மாணவ அமைப்புகள் கூறுகின்றனர்.
சென்னையில் உள்ள கல்லூரிகளில் மற்றும் மெரினா கடற்கரை பகுதிகளில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் உடனடியாக அவர்களை அப்புறப்படுத்தத் திட்டமிட்டுள்ளனர்.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னையில் லயோலா கல்லூரியில் தமிழக திரைப்பட இயக்குநர்கள் பலர் ஒன்றிணைந்து அனிதாவுக்கு அஞ்சலிக் கூட்டம் நடத்தினர்.
அதில் பேசிய இயக்குநர் கரு.பழனியப்பன், சமுத்திரக்கனி மற்றும் பா.ரஞ்சித் உள்ளிட்டோர் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் மட்டுமே நீட் தேர்விலிருந்து விலக்கு பெறமுடியும் என்றும், மாணவி அனிதாவுக்கு செலுத்தும் அஞ்சலி அதுதான் என்றும் கூறினர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












