அதிமுக ஒரு குடும்பச் சொத்தாக மாறுவதைத் தடுக்க அறப்போர் : ஓ. பன்னீர்செல்வம்

அடைத்து வைக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து ஒரு அரசு அமைக்கப்படுவதைக் கண்டு தமிழக மக்கள் கொதித்துப் போயிருப்பதாகவும் மக்கள் நல அரசை நிலைநாட்டுவதற்கான அறப்போர் தொடரும் என்றும் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்.

முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்

தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்க எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு மாநில பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுத்துள்ளார்.

ஆளுநரின் இந்த முடிவு, முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இது தொடர்பாக பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில், எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் வளர்த்தெடுத்த அ.தி.மு.க. ஒரு குடும்பத்தின் சொத்தாக மாறிவிடக்கூடாது என்பதற்காகவே ஒரு அறப்போராட்டத்தைத் தொடங்கியதாகக் கூறியுள்ளார்.

இந்த அறப்போராட்டத்திற்கு மக்களும் தொண்டர்களும் ஆதரவளித்ததாகவும் ஆனால் அவர்களது உணர்வுகளைப் புரிந்துகொள்ளாது பலவந்தமாக அடைத்துவைக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கொண்டு ஒரு அரசு அமைக்கப்படுவதை எண்ணி தமிழக மக்களும் அ.தி.மு.க. தொண்டர்களும் கொதித்துப் போயிருப்பதாக பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்.

ஜெயலலிதாவின் மரணத்திற்குக் காரணமானவர்கள் கையில் அரசா என்று மக்கள் துடித்துப் போயிருப்பதாகவும் இதற்காகவே தான் ஒரு தர்மயுத்தத்தை மேற்கொண்டதாகவும் இந்த அறப்போர் தொடருமென்றும் அவர் கூறியிருக்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்