24 வருடங்களுக்குப் பிறகு தோண்டியெடுக்கப்பட்ட லெனின் சிலை

ஜெர்மனியில் ஒரு காட்டுப் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த ரஷ்ய தலைவர் லெனின் சிலையின் தலைப் பகுதி இப்போது தோண்டியெடுக்கப்பட்டிருக்கிறது.

1917லில் போல்ஷவிக் புரட்சியை ஏற்படுத்திய லெனின் சிலை ஜெர்மனி இணைப்புக்குப் பிறகு புதைக்கப்பட்டது.

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, 1917லில் போல்ஷவிக் புரட்சியை ஏற்படுத்திய லெனின் சிலை ஜெர்மனி இணைப்புக்குப் பிறகு புதைக்கப்பட்டது.

பெர்லின் நகருக்கு வெளியில் உள்ள வனப்பகுதியில் புதைக்கப்பட்டிருந்த இந்த கிரனைட் சிலையை தோண்டி எடுக்க வேண்டும் என வரலாற்றாசிரியர்கள் குரல் கொடுத்ததையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

நகரின் கிழக்குப் பகுதியில் நிறுவப்பட்டிருந்த பிரம்மாண்டமான லெனின் சிலையின் தலை இது. இந்தச் சிலை ஒட்டுமொத்தமாக 19 மீட்டர் உயரத்தைக் கொண்டிருந்தது.

பெர்லின் சுவர் உடைக்கப்பட்ட பிறகு, 1991ல் இந்தச் சிலை அகற்றப்பட்டது. துண்டாக்கப்படு காட்டுப் பகுதியில் புதைக்கப்பட்டது.

வரலாற்றாசிரியர்களின் பிரச்சாரத்தைத் தொடர்ந்து காட்டுப் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த சிலை தோண்டியெடுக்கப்பட்டிருக்கிறது.
படக்குறிப்பு, வரலாற்றாசிரியர்களின் பிரச்சாரத்தைத் தொடர்ந்து காட்டுப் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த சிலை தோண்டியெடுக்கப்பட்டிருக்கிறது.

கிழக்கு - மேற்கு ஜெர்மனிகள் இணைக்கப்பட்டதைப் பற்றிய திரைப்படமான "குட் பை லெனின்" படத்தில் இந்தச் சிலையும் இடம்பெறும். ஹெலிகாப்டர் மூலம் இந்தச் சிலை தூக்கிச்செல்லப்படும் காட்சியும் படத்தில் இடம்பெற்றிருந்தது.

3.5 டன் எடையுள்ள இந்தத் தலை காட்டிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு ஸ்பனடாவ் சிட்டாடெல் அருங்காட்சியகத்தில் வைக்கப்படவிருக்கிறது.

புதைக்கப்பட்ட சிலையின் பகுதிகளில், தலை மட்டுமே தோண்டியெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.