அமிதாப் பச்சனின் டுவிட்டர் கணக்கு 'ஹாக்கிங்' செய்யப்பட்டுள்ளது

சமூக வலைத் தளங்களில் மிகவும் செல்வாக்கு மிக்க இந்தியர் அமிதாப் பச்சன்

பட மூலாதாரம், Getty

படக்குறிப்பு, சமூக வலைத் தளங்களில் மிகவும் செல்வாக்கு மிக்க இந்தியர் அமிதாப் பச்சன்

இந்தியாவின் பாலிவுட் திரையுலகின் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன், தனது டுவிட்டர் கணக்கு ஹாக்கிங் செய்யப்பட்டுள்ளதாக (ஹாக்கிங்-இணையத்தள கணக்குகளுக்குள் அத்துமீறி நுழைவது) முறையிட்டுள்ளார்.

'எனது டுவிட்டர் கணக்கு ஹாக்கிங் செய்யப்பட்டுள்ளது. நான் பின்தொடரும் இணையப் பக்கங்களில் நீலப்பட இணையதளங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. வேறு யாரிடமாவது முயலுங்கள்... எனக்கு இது வேண்டாம்..' என்று அமிதாப் பச்சன் தனது டுவட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த ஹாக்கிங் தொடர்பான மேலதிக தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.

அமிதாப் பச்சனின் டுவிட்டர் கணக்கை சுமார் ஒரு கோடியே 66 லட்சம் பின்தொடர்கின்றனர்.

சமூக வலைத்தளங்களில் மிகவும் செல்வாக்கு மிக்க இந்தியர்களின் பட்டியலில் அமிதாப் பச்சன் முதலிடத்தில் உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர், தலாய் லாமா ஆகியோரை விடவும் அமிதாப் பச்சனை அதிகம் பேர் டுவிட்டரில் பின்தொடர்கின்றனர்.

அமிதாப் பச்சன் பின்தொடர்கின்ற இணையதளங்களின் பட்டியலில் இருந்து இப்போது நீலப்பட இணையதளங்கள் நீக்கப்பட்டுள்ளன.

அமிதாப் பச்சனின் டுவிட்டர் கணக்கு ஹாக்கிங் செய்யப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் கருத்துக் கூற மறுத்துவிட்ட டுவிட்டர் இந்தியா, தாங்கள் வழக்கமாக தனிப்பட்ட நபர்களின் கணக்குகள் தொடர்பில் கருத்துக்கூறுவதில்லை என்று கூறியுள்ளது.