இரான் ஹிஜாப் எரிப்பு போராட்டம்: "என் மகளை பார்க்க விரும்பினேன். ஆனால் அவர்கள் விடவில்லை" - மாசா அமினி தந்தை பேட்டி
"என் மகள் மரணத்தில் அதிகாரிகள் சொல்வது பொய்". இரானில் நடைபெற்று வரும் ஹிஜாப் எரிப்பு போராட்டங்களுக்கு வித்திட்ட மாணவி மாசா அமினியின் மரணம் குறித்து அவரது தந்தை அம்ஜத் அமினி வைக்கும் குற்றச்சாட்டு இது.
பிபிசி பாரசீக சேவையிடம் பேசிய அவர், தன் மகளது உடற்கூராய்வு அறிக்கையைக் கூட பார்க்க அனுமதிக்கவில்லை என்பதுடன் தன் மகளுக்கு உடல்நிலை மோசமாக இருந்தது என்பதையும் மறுக்கிறார்.
மேலும், காவலில் வைக்கப்பட்ட மாசா தாக்கப்பட்டார் என்று நேரில் பார்த்தவர்கள் தன் குடும்பத்திடம் தெரிவிப்பதாகவும் தந்தை கூறினார். ஆனால், இரான் அதிகாரிகள் இதை மறுக்கின்றனர்.
ஹிஜாப் அணிவதற்கான விதிகளை மீறியதற்காக, இரான் இஸ்லாமிய அடிப்படைவாத அமலாக்க காவல்துறையால் மாசா கைது செய்யப்பட்டார்.

பட மூலாதாரம், Mahsa Amini family
வடமேற்கு நகரமான சாகேஸ் பகுதியில் வசிக்கும் குர்து இனத்தைச் சேர்ந்த இளம்பெண்னான மாசா, வெள்ளிக்கிழமை டெஹ்ரானில் உள்ள மருத்துவமனையில் கோமா நிலையை எய்தி மூன்று நாட்களுக்குப் பின் இறந்தார்.

அடிப்படைவாத அமலாக்க காவல்துறை என்றால் என்ன?
இரானில் இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காக இயங்கி வரும் காவல் அமைப்பு அது. அதாவது அடிப்படைவாத நடைமுறைகளை அமல்படுத்தும் காவல் பிரிவு என்று புரிந்து கொள்ளலாம்.
இஸ்லாமிய மத நெறிமுறகளை மீறினால் இந்த காவல்துறை நடவடிக்கை எடுக்கும். அப்படித்தான், கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாசா அமினியும் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக இந்த அடிப்படைவாத அமலாக்க காவல்துறை குறித்து பேசிய, இரான் அதி உயர் தலைவர் அலி காமனெயியின் பழைய உரைகளின் பகுதிகள் சமூக வலைத்தளங்களில் மீண்டும் பரப்பப்படுகின்றன. அந்த வீடியோவில் "இஸ்லாமிய அரசின் கீழ் பெண்கள் அனைவரும் இஸ்லாமிய உடைக் கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும். அதை உறுதி செய்வதே இந்த காவல் குழுவின் வேலை" என்று அவர் பேசியுள்ளார்.

முறையற்ற உடை
மாசா அமினி துன்புறுத்தப்படவில்லை. ஆனால், அவருக்கு திடீரென இதயக் கோளாறு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் அடிப்படைவாத அமலாக்க காவல்துறையால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்று இரானிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், கைது செய்யப்படும்போது மாசா தாக்கப்பட்டார் என்று, சம்பவத்தின்போது உடனிருந்த மாசாவின் தம்பி கியாராஷ் தெரிவிக்கிறார்.
என் மகன் அவளோடுதான் இருந்தான். சில சாட்சியங்கள் அவள் கைது செய்யப்படும்போதும், வேனிலும் பின் காவலில் இருந்தபோதும் தாக்கப்பட்டாதாக தெரிவிக்கின்றன " என்கிறார் தந்தை அம்ஜத் அமினி.
"என் மகளை கைது செய்யவேண்டாம் என்று என் மகன் கெஞ்சியுள்ளான். ஆனால், அவனும் தாக்கப்பட்டான். அவனது உடைகள் கிழிக்கப்பட்டன". அவர்களது உடையில் இருக்கும் கேமரா பதிவுகளைக் காட்டும்படி நான் கேட்டேன். ஆனால், கேமராக்களில் பேட்டரி தீர்ந்துவிட்டது என்று அவர்கள் சொன்னார்கள்."
கைது செய்யப்படும் வேளையில், மாசா 'முறையற்ற உடை' அணிந்திருந்ததாக இரானிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், எப்படியானலும் ஒரு நீளமான மேலங்கியை எப்போதும் அணிவார் என்று தந்தை கூறுகிறார்.
"நான் என்ன வேண்டுமானாலும் எழுதுவேன்"
இறந்த பிறகும் தன் மகளைப் பார்க்கவிடாமல் தான் மீண்டும் மீண்டும் தடுக்கப்பட்டதாக தந்தை கூறுகிறார்.
"நான் என் மகளைப் பார்க்க விரும்பினேன். ஆனால், என்னை உள்ளே விடவில்லை. நான் என் மகளின் உடற்கூராய்வு அறிக்கையை பார்க்க வேண்டும் என்று கேட்டேன், ஆனால், நான் என்ன வேண்டுமானலும் எழுதுவேன். அதில், நீங்கள் செய்வதற்கு ஒன்றுமில்லை" என்று மருத்துவர் சொன்னதாகவும் அம்ஜத் தெரிவிக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
குடும்பத்தினருக்கு உடற்கூராய்வு அறிக்கை குறித்து ஏதும் தெரிவிக்கப்படவில்லை. இறுதிச் சடங்குக்காக பொட்டலம் கட்டி தரப்பட்ட தன் மகளின் உடலை மட்டுமே அவர் பார்த்தார். வெறும் பாதமும் முகமும் மட்டுமே அதில் தெரிந்தன.
"அவளது காலில் கன்றிப்போன தடயங்கள் இருந்தன. பாதங்களை சோதனை செய்யுங்கள் என்று நான் கேட்டேன்." சோதனை செய்வதாக அதிகாரிகள் எனக்குத் தெரிவித்தனர். ஆனால், எந்த பதிலும் வரவில்லை. "அப்போது என்னை தவிர்த்தனர். இப்போது பொய் சொல்கின்றனர்"
முன்னதாக, டெஹ்ரான் காவல்துறையின் தடயவியல் மருத்துவப்பிரிவின் தலைமை இயக்குநர் மேடி ஃபரூசேஷ் வெளியிட்ட அறிக்கையில், "தலை, முகத்தில் எந்த அறிகுறிகளும் இல்லை. கண்ணைச்சுற்றி கன்றிப்போன தடயங்களும் இல்லை. மண்டை ஓட்டில் முறிவுகளும் ஏதுமில்லை என்பது ஆய்வில் அறியப்பட்டது" என்று தெரிவித்திருந்தார்.
வேறெந்த உள்காயங்களும் கூட இல்லை என்று அதிகாரிகளும் தெரிவித்தனர்.
உடல்நலக் குறைவா?
மாசாவின் மரணத்துக்கு அவரது உடல்நலக்கோளாறுகள் காரணம் என்ற குற்றச்சாட்டின் மீது தந்தை அம்ஜத்துக்கு முரண்பாடு உண்டு. அவர் அதை விமர்சிக்கிறார்.
8 வயதில் மாசாவுக்கு மூளையில் ஒரு அறுவை சிகிச்சை நடந்துள்ளது என்று டெஹ்ரான் காவல்துறையின் தடயவியல் மருத்துவப்பிரிவின் தலைமை இயக்குநர் தெரிவித்திருந்தார். ஆனா, "அது பொய்" என்கிறார் தந்தை அம்ஜத்.
"சளி தொடர்பாக மருத்துவமனை சென்றதைத் தவிர, கடந்த 22 ஆண்டுகளாக அவள் எந்த கோளாறுக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெறவில்லை. அவளுக்கு எந்த மருத்துவக் கோளாறும் இல்லை. எந்த அறுவை சிகிச்சையும் நடைபெறவில்லை" என்கிறார் அம்ஜத்.

பட மூலாதாரம், EPA
மாசாவின் வகுப்பு நண்பர்கள் இருவரிடம் பிபிசி பேசியது. அப்போது "அவள் உடல்நலக் கோளாறு காரணமாக இதுவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தங்களுக்கு தெரியவில்லை" என்றனர்.
அதேபோல, மாசாவின் உடல்நிலை குறித்த ஒன்னொரு கூற்றையும் அம்ஜத் மறுக்கிறார். அண்மையில் ஒரு கடையில் வேலை செய்து வந்தபோது மாசா அடிக்கடி மயங்கி விழுவார் என்ற அந்தக் கூற்றை 'பொய்யானது' என்று மறுக்கிறார் அவர்.
குடும்பம் என்ன செய்கிறது?
பல்கலைக்கழகத்தில் தன் படிப்பை அடுத்த வாரம் தொடங்கவிருந்தார் மாசா என்கிறது மாசாவின் குடும்பம். அதற்கு முன்பாக விடுமுறை நாளைக் கழிக்கவே டெஹ்ரானுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
"அவள் நுண்ணுயிரியல் படிக்க விரும்பினாள். மருத்துவராக வர வேண்டும் என்பது அவள் கனவு. அவளது தாய் இப்போது உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். எங்களுக்கு அவள் நினைவாகவே இருக்கிறது."
எல்லாவற்றுக்கும் மேலாக, "அவள் இருந்திருந்தால் நேற்று (செப்டம்பர் 22) அவளது 23 ஆவது பிறந்தநாளாக இருந்திருக்கும்" என்று தெரிவித்தது மாசாவின் குடும்பம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்














