இராக் பிரதமர் முஸ்தஃபா அல் கதிமி வீட்டின் மீது தாக்குதல்: கொலை முயற்சி என்கிறது ராணுவம்

முஸ்தஃபா அல் கதிமி, இராக் பிரதமர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முஸ்தஃபா அல் கதிமி, இராக் பிரதமர்

இராக் தலைநகர் பாக்தாத்தில் பிரதமர் முஸ்தஃபா அல் கதிமி வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இத்தாக்குதலில் தாம் எவ்வித காயமுமின்றி தப்பியதாக கூறியுள்ளார் பிரதமர் அல் கதிமி. இராக் ராணுவம் இது ஒரு 'கொலை முயற்சி' என குறிப்பிட்டுள்ளதாக ராய்டர்ஸ் செய்தி கூறுகிறது.

ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 7ம் தேதி) காலை நேரத்தில் ஆயுதமேந்திய டிரோன், பச்சை மண்டலத்திலுள்ள பிரதமரின் வீட்டை இலக்கு வைத்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பிரதமர் முஸ்தஃபா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாயின.

ஆனால், தான் நல்ல உடல் நலத்தோடு இருப்பதாகவும், இராக்குக்காக அனைவரும் அமைதி காக்க வேண்டும் எனவும் தன் ட்விட்டர் பக்கத்தில் அரபு மொழியில் பதிவிட்டுள்ளார் அல் கதிமி.

இராக் ராணுவம் இந்த சம்பவம் தொடர்பாக ஒரு செய்தியறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், பிரதமர் அல் கதிமி நல்ல உடல் நலத்தோடு இருப்பதாகவும், இந்த தாக்குதலில் கதிமியின் வீடு இலக்குவைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது. வேறு எந்த விவரங்களும் குறிப்பிடப்படவில்லை என ராய்டர்ஸ் முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.

அதே போல இந்த தாக்குதலை இரு அரசு அதிகாரிகள் உறுதி செய்திருப்பதாகவும் ராய்டர்ஸ் முகமை குறிப்பிட்டுள்ளது.

பிரதமருக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளில் குறைந்தபட்சமாக ஆறு பேருக்கு காயம் ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் கூறினர்.

இதுவரை இராக் பிரதமர் வீட்டில் நடந்த தாக்குதலுக்கு எந்த ஒரு அமைப்போ, தனிநபரோ பொறுப்பேற்கவில்லை. பிரதமர் வீட்டுக்கு அருகிலேயே பல அரசு கட்டடங்கள் மற்றும் வெளிநாட்டு தூதரகங்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது இராக்கின் பிரதமராக இருக்கும் அல் கதிமி, முன்பு உளவுத்துறைத் தலைவராக இருந்தவர். கடந்த ஆண்டு மே மாதம்தான் அவர் பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார்.

கடந்த சில வாரங்களாக, இரானுடன் ஒத்து போகக் கூடிய ஆயுதமேந்திய குழுவினர் பசுமை மண்டலத்துக்கு அருகே போராட்டங்களில் ஈடுபட்டனர்.

அவர்கள் கடந்த மாதம் வெளியான பொதுத் தேர்தல் முடிவுகளை எதிர்த்து போராடி வருகின்றனர். அத்தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாக இரானுடன் ஒத்துப் போகும் ஆயுதக் குழுவினர் கூறுகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :