டொனால்டு டிரம்ப் புதிய அரசியல் கட்சி தொடங்குகிறாரா? - அமெரிக்க அதிபர் பதவி போன பின் முதல் உரை

Donald Trump was making his first speech since leaving the White House

பட மூலாதாரம், Reuters

புதிய அரசியல் கட்சி தொடங்குவது குறித்து தனக்கு எந்த ஒரு திட்டமும் இல்லை என திட்டவட்டமாக மறுத்திருக்கிறார் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.

அமெரிக்காவில் ஃப்ளோரிடா மாகாணத்தில் நடந்த பழமைவாத ஆதரவாளர்கள் மாநாட்டில் இதைத் தெரிவித்தார். தான் தனிக் கட்சி தொடங்குவது குடியரசுக் கட்சியின் வாக்குகளை பிரிக்கும் எனக் கூறினார் டிரம்ப்.

ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்றுக் கொண்ட பின் டிரம்ப் பேசும் முதல் கூட்டம் இது. 2024-ம் ஆண்டு மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடலாம் என சூசகமாகக் குறிப்பிட்டுள்ளார்.

டொனால்டு டிரம்ப், தற்போதைய அதிபரை கடுமையாக விமர்சித்தார். `முதலில் அமெரிக்கா என்பதில் இருந்து கடைசியில் அமெரிக்கா` என அமெரிக்காவின் கொள்கைகள் மாறி இருக்கின்றன என்றார்.

டிரம்புக்கு எதிரான பதவிநீக்கத் தீர்மானத்தில் இருந்து, அவர் விடுவிக்கப்பட்டு பல வாரங்களுக்குப் பிறகு இவ்வாறு பேசி இருக்கிறார் டிரம்ப்.

குடியரசுக் கட்சியில் டிரம்புக்கு ஆதரவு இருப்பதை ஆர்லாண்டோவில் நடந்த, இந்த பழமைவாத அரசியல் நடவடிக்கை மாநாடு வெளிப்படுத்தும் விதத்தில் இருந்தது.

கடந்த வியாழக்கிழமை தொடங்கிய இக்கூட்டம், டிரம்புக்கு மிகவும் ஆதரவாகவே இருந்தது. அதில் டிரம்புக்கு விஸ்வாசமான குடியரசுக் கட்சியின் செனட்டர் டெட் க்ரூஸ் மற்றும் டிரம்பின் மகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடந்த ஜனவரி மாதம் நடந்த கேப்பிட்டால் கட்டட தாக்குதலுக்கு எதிர்வினையாற்றியதால் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், தொடர்ந்து ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் செயல்பட முடியாமல் தடை விதிக்கப்பட்டு இருக்கிறார். இப்போதும் அந்தத் தடை தொடர்கிறது.

Supporters hear Donald Trump speak at the Conservative Political Action Conference in Orlando, February 28, 2021

பட மூலாதாரம், Reuters

டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறியதிலிருந்து, ஃப்ளோரிடாவில் இருக்கும் மார்-அ-லாகோ என்கிற கோல்ஃப் சொகுசு மாளிகையில் வாழ்ந்து வருகிறார் டொனால்ட் டிரம்ப்.

டொனால்டு டிரம்ப் என்ன கூறினார்?

74 வயதாகும் டொனால்டு டிரம்ப் ஒரு மணி நேரம் தாமதமாக ஹயாத் ரெஜென்சி விடுதியின் மேடையில் தோன்றினாலும், அவரது ஆதரவாளர்களால் கொண்டாடப்பட்டார். அதில் கலந்து கொண்ட பலரும் முகக்கவசத்தை அணியவில்லை.

"நான்கு ஆண்டுகளுக்கு முன் நாம் தொடங்கிய பயணம் நிறைவடைய இன்னும் நிறைய தூரம் இருக்கிறது என்பதை அறிவிக்கத் தான் நான் உங்கள் முன் நிற்கிறேன்" எனக் கூறினார் டிரம்ப்.

"இந்த மதியப் பொழுதில் நம் எதிர்காலத்தைக் குறித்துப் பேச இங்கு நாம் கூடி இருக்கிறோம் - நம் இயக்கத்தின் எதிர்காலம், நம் கட்சியின் எதிர்காலம், நாம் மிகவும் நேசிக்கும் நம் நாட்டின் எதிர்காலத்தைக் குறித்துப் பேச இங்கு கூடி இருக்கிறோம்" என்றார்.

புதிய கட்சி தொடங்குவதைக் குறித்த யோசனைகளை திட்டவட்டமாக மறுத்தார்.

"அது புத்திசாலித்தனமாக இருக்குமா? நாம் ஒரு புதிய கட்சியைத் தொடங்கி, நம் வாக்குகளைப் பிரிப்போம் எப்போதும் வெற்றி பெறமாட்டோம்" எனக் கிண்டலடித்தார்.

"நமக்கு குடியரசுக் கட்சி இருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு இக்கட்சி ஒருங்கிணைந்து வலுவடையவிருக்கிறது"

கடந்த 2020 நவம்பரில் நடந்த அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த பிறகும், கடந்த 2021 ஜனவரியில் நடந்த கேப்பிட்டல் கட்டட தாக்குதலாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்ட போதும், டிரம்ப் வாக்களிப்பவர்களின் மத்தியில் மிகவும் பிரபலமாகவே இருக்கிறார் என அறிக்கைகள் கூறுகின்றன.

டிரம்ப் புதிய கட்சியைத் தொடங்கினால், அவருக்கு வாக்களிப்பேன் என 46 சதவீத டிரம்ப் ஆதரவாளர்கள் கூறி இருப்பதாக, கடந்த வாரம் ஓர் அமெரிக்க வாக்கெடுப்பு கூறியுள்ளது.

பழமைவாத அரசியல் நடவடிக்கை மாநாட்டில், அமெரிக்க அதிபர் தேர்தலில் மோசடி நடந்ததால் தான் தோற்றதாகக் கூறினார் டொனால்டு டிரம்ப். வரும் 2024-ம் ஆண்டில் மீண்டும் அதிபர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாகவும் சூசகமாகக் கூறியுள்ளார்.

Supporters of Donald Trump outside the Hyatt Regency Hotel in Orlando

பட மூலாதாரம், Getty Images

"அவர்கள் வெள்ளை மாளிகையை இழந்துவிட்டார்கள். யாருக்குத் தெரியும்? நான் அவர்களை மூன்றாவது முறையாகவும் தோற்கடிக்க முடிவு செய்யலாம்?" என்றார் டிரம்ப்.

குடியேற்றம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு போன்ற தன் கடுமையான நிலைப்பாடுகளை, பைடன் பின் வாங்குவதை விமர்சித்து இருக்கிறார் டிரம்ப்.

"பைடனின் அரசு மோசமாக இருக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம், ஆனால் அது எவ்வளவு மோசமாக இருக்கும், எவ்வளவு இடதுசாரித் தனமாகச் செல்வார்கள் என்பதை நாம் யாரும் யோசித்துக் கூடப் பார்க்கவில்லை" என உற்சாகம் ததும்பும் கூட்டத்தில் கூறினார் டிரம்ப்.

குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள், டிரம்பின் ஆட்சிக் காலத்தில் அவருக்கு விஸ்வாசமாகவே இருந்தார்கள். இருப்பினும் டிரம்புக்கு எதிராக, கடந்த மாதம் நடைபெற்ற டிரம்பின் கண்டனத் தீர்மானத்துக்கு எதிரான வாக்கெடுப்பில், பிரதிநிதிகள் சபையில் 10 வாக்குகளும், செனட் சபையில் 7 வாக்குகளும் பதிவாயின. டிரம்பின் கண்டனத் தீர்மானத்தில் 57-க்கு 43 என செனட்டில் வாக்கு பதிவானது. டிரம்பை தண்டிக்கத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் கிடைக்கவில்லை.

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தான் ஜனவரி 2021-ல் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடந்த கலவரத்துக்கு தார்மீக ரீதியில் பொறுப்பு என, குடியரசுக் கட்சியின் காங்கிரஸ் உறுப்பினர் மிட்ச் மெக்கானல், இக்கண்டனத் தீர்மானத்தில் இருந்து டிரம்ப் விடுவிக்கப்பட்ட பிறகு விமர்சித்தார்.

அதன் பிறகு, மிட்ச் மெக்கானல் மீதான கடும் தனிப்பட்ட தாக்குதலைத் தொடங்கினார் டிரம்ப்.

இந்த மாநாடு கடந்த 1974-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த மாநாடு அமெரிக்க பழமைவாதிகள் அதிக அளவில் கூடும் ஆதிக்கம் மிக்க கூட்டம் எனப் பார்க்கப்படுகிறது. அதோடு இந்தக் கூட்டம் குடியரசுக் கட்சியின் திசையைக் காட்டும் ஓர் அளவீடாகவும் பார்க்கப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :