டிரம்ப் அமெரிக்க அதிபராக ஆற்றிய இறுதி உரை: "நாங்கள் எதற்காக வந்தோமோ அதை செய்தோம்"

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பதவியில் இருந்து வெளியேறும் முன்னர் விடைபெறும் வகையில் ஓர் உரை நிகழ்த்தியுள்ளார். அதில், "நாங்கள் என்ன செய்வதற்காக வந்தோமோ அதைச் செய்தோம். அதற்கு மேலும் செய்தோம்" என்று கூறினார்.
அதிபர் பதவியில் இருந்து விடைபெறும் வகையில் யூடியூபில் டிரம்ப் வெளியிட்ட உரையில், "நான் சவாலான மோதல்களை எதிர்கொண்டேன். ஏனெனில், அதற்குத்தான் நீங்கள் என்னை தேர்ந்தெடுத்தீர்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனிடம் தோற்ற டொனால்டு டிரம்ப், தேர்தல் முடிவுகளை இன்னும்கூட முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை.
அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடன், துணை அதிபராக கமலா ஹாரிஸ் ஆகியோர் இந்திய நேரப்படி, இன்றிரவு (ஜனவரி 20) சுமார் 10.30 மணி வாக்கில் பொறுப்பேற்க உள்ளனர்.
நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளுக்கு எதிராக டிரம்பின் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தின் மீது தொடுத்த வன்முறை தாக்குதல் அவரது பதவியின் கடைசி இரண்டு வாரகாலத்தை ஆக்கிரமித்துவிட்டது.
"அரசியல் வன்முறை என்பது அமெரிக்கர்களாகிய நாம் மதிக்கும் எல்லாவற்றிற்கும் எதிரான தாக்குதல். இதை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது" என்று டிரம்ப் தமது விடைபெறல் காணொளியில் கூறியுள்ளார். சுமார் இருபது நிமிடங்கள் நீடிக்கும் இந்த காணொளியில் ஒரு இடத்தில்கூட ஜோ பைடன் குறித்து டிரம்ப் கருத்தேதும் தெரிவிக்கவில்லை.
டிரம்ப் கூறிய முக்கிய விடயங்கள்

இந்த மாதத் தொடக்கத்தில், அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தின் மீது தொடுக்கப்பட்ட வன்முறை தாக்குதலை "தூண்டியதாக" டிரம்ப் மீது ஏற்கெனவே நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து செனட் அவையில் விசாரணை நடைபெறும். செனட் அவை விசாரணை நடத்தி, குற்றச்சாட்டை உறுதி செய்யும்பட்சத்தில் அவர் பதவி நீக்கப்பட்டிருக்க வாய்ப்பு உண்டு. ஆனால், அவர் பதவிக்காலம் அதற்கு முன்பே முடிவுக்கு வருவதால், அவர் மீண்டும் அமெரிக்க அரசு பதவிகளுக்கு போட்டியிடுவதற்கு தடை விதிக்கப்படலாம்.
அமெரிக்க வரலாற்றிலேயே தமக்கு எதிராக இரண்டு முறை கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பெற்ற முதல் அதிபர் டிரம்ப்தான்.
எனினும், பிரச்சனைகளை விடுத்து தனது தலைமையிலான நிர்வாகம் சாத்தியமாக்கிய இலக்குகளை மட்டும் தனது காணொளியில் பட்டியலிட்ட டிரம்ப், "எனது நிர்வாகம் உலக வரலாற்றில் மிகச் சிறந்த பொருளாதாரத்தை கட்டமைத்துள்ளது" என்று கூறினார்.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று குறித்த அச்சத்தால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அதலபாதாளத்துக்கு சென்ற அமெரிக்க பங்குச்சந்தைகள் வீழ்ச்சியிலிருந்து குறுகிய காலத்தில் மீண்டதுடன், புதிய உச்சங்களை தொட்டு வருகின்றன.
எனினும், பொருளாதாரத்தின் மற்ற கூறுகள் இன்னமும் பல்வேறுபட்ட பிரச்சனைகளை சந்தித்து வருகின்றன. சமீபத்திய மாதங்களில் அமெரிக்காவில் எதிர்பார்த்தைவிட வேலை இழப்புகள் அதிகரித்து வருவதுடன், நுகர்வோர் பொருட்களின் விற்பனையும் சரிவை சந்தித்து வருகிறது.
"எனது தலைமையிலான நிர்வாகத்தின் குறிக்கோள் வலது அல்லது இடதுசாரி என்றோ, ஜனநாயக கட்சி அல்லது குடியரசு கட்சி என்றோ இல்லாமல் ஒட்டுமொத்த தேசத்தின் நன்மைக்காகவே இருந்தது" என்று டிரம்ப் கூறினார்.
இந்த நிலையில், டிரம்ப் பதவிக்கலாம் முடிவதை அடுத்து அவரது செயல்பாடு குறித்து நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் வெறும் 34 சதவீதத்தினரே ஆதரவு வழங்கியுள்ளனர். சமீபத்திய ஆண்டுகளில் அதிபர் ஒருவரால் பெறப்பட்ட மிகக் குறைந்த மதிப்பீடாக இது உள்ளது.
பைடன் எப்படி தயாராகிறார்?

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவின் அடுத்த அதிபராக பதவியேற்க உள்ள ஜோ பைடன் தனது மனைவி ஜில் பைடனுடன் செவ்வாய்க்கிழமையன்று டெலாவேரிலுள்ள தனது வீட்டிலிருந்து தலைநகரான வாஷிங்டன் டி.சிக்கு கிளம்பினார்.
அப்போது ஆற்றிய உணர்ச்சிபூர்வமான உரையில் "நான் இறக்கும் போது, டெலாவேர் என் இதயத்தில் எழுதப்படும்" என்று பைடன் கூறினார். உள்ளூர் நேரப்படி, புதன்கிழமை காலையில் வெள்ளைமாளிகைக்கு செல்லும் பைடன், பின்னர் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்பதற்காக உள்ளூர் நேரப்படி பலல் 12 மணியளவில் (இந்திய நேரப்படி இரவு 10.30) நாடாளுமன்ற கட்டட வளாகத்திற்கு செல்வார்.
கொரோனா வைரஸ் பரவல் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களின் காரணமாக முன்னெப்போதுமில்லாத அளவுக்கு பல்லாயிரக்கணக்கான பாதுகாப்புப்படை வீரர்கள் களமிறக்கப்பட்டு வாஷிங்டன் டி.சி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதேபோன்று பதவியேற்பு விழாவை நேரடியாக பார்க்க அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது.
புதிய அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாரம்பரிய வழக்கத்தை மீறவுள்ள டிரம்ப், புதன்கிழமை காலையில் ஃபுளோரிடாவிலுள்ள தனது இல்லத்துக்கு புறப்படுகிறார். அதாவது, 1869ஆம் ஆண்டுக்கு பின் தனக்கு அடுத்ததாக அதிபர் பதவியேற்க உள்ளவரின் பதவியேற்பு விழாவில் பங்கேற்காத முதல் அதிபராக டிரம்ப் உருவெடுக்க உள்ளார்.
பிற செய்திகள்:
- கமலா ஹாரிஸ் பதவியேற்பதால் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மீது குவியும் கவனம்
- 'அர்னாப் கோஸ்வாமிக்கு ராணுவ ரகசியத்தை அளித்தது யார்?' - ராகுல் காந்தி
- 'இருளில் தாக்கிவிட்டு தப்பிய இந்திய மீன்பிடி படகு கடலில் மூழ்கியது' - இலங்கை கடற்படை
- முத்துலட்சுமி ரெட்டி முதல் டாக்டர் சாந்தா வரை: அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் வரலாறு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












