மலேசியா: கொரோனா வைரஸின் புதிய திரிபு கண்டுபிடிப்பு: தமிழகத்திலிருந்து பரவியதா? - பத்து மடங்கு வேகமாகப் பரவும் என எச்சரிக்கை

மலேசியாவில் கொரோனா வைரஸின் புதிய திரிபு கண்டுபிடிப்பு: பத்து மடங்கு வேகமாகப் பரவும் என எச்சரிக்கை

பட மூலாதாரம், Getty Images

கோவிட்-19 வைரஸின் புதிய திரிபு எனக் கருதப்படும் 'D614G' வகை பிறழ்வு மலேசியாவில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகை தொற்று மிக வேகமாகப் பரவக்கூடியது என மலேசிய அரசு எச்சரித்துள்ளது.

இதுவரை இந்த உலகம் அறிந்துள்ள கோவிட்-19 வைரஸைக் காட்டிலும், D614G வகை தொற்று என்பது பத்து மடங்கு வேகமாகப் பரவும் என்று மலேசிய சுகாதார அமைச்சின் தலைமை ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார். எனவே அனைவரும் கூடுதல் கவனத்துடனும் முன்னெச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டுமென அவர் அறிவுறுத்தி உள்ளார்.

Banner image reading 'more about coronavirus'
Banner

அண்மையில் தமிழகத்தின் சிவகங்கை பகுதியிலிருந்து மலேசியா திரும்பிய ஆடவருக்கு, D614G வகை பிறழ்வுடன் கூடிய கொரோனா கிருமித் திரிபு பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. இதையடுத்து அவர் தீவிர மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அதன் முடிவில் அவருக்கு D614G வகை பிறழ்வுடன் கூடிய கொரோனா கிருமித்தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

மலேசியாவின் உலுதிராம் பகுதியைச் சேர்ந்த மற்றொருவருக்கும் இதேபோன்ற பாதிப்பு இருப்பதாக மலேசிய சுகாதார அமைச்சு இன்று தெரிவித்துள்ளது. மலேசிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் இந்தப் புதிய வகை பாதிப்பை கண்டறிந்துள்ளது.

"இந்த வகை தொற்று பத்து மடங்கு வேகமாகவும் மிக எளிதாகவும் மற்றவர்களுக்குப் பரவும். ஒரு தனி நபரிடம் இருந்து அதிகமானவர்களுக்கு வைரஸ் தொற்று பரவினால் அவர் 'சூப்பர் ஸ்பிரெட்டர்' (Super Spreader) எனக் குறிப்பிடப்படுகிறார்.

"இத்தகைய நபர்களுக்கு கொரோனா வைரஸின் புதிய திரிபு பாதிப்பு ஏற்படும் போது அது மேலும் பத்து மடங்கு வேகத்துடன் பரவும்," என டாக்டர் நூர் ஹிஷாம் இன்று கோலாலம்பூரில் தெரிவித்தார்.

D614G வகை பிறழ்வுடன் கூடிய கொரோனா கிருமித் திரிபு பாதிப்பு பரவுவது கடந்த ஜூலை மாதம் தான் தெரிய வந்தது. எனவே தற்போதுள்ள தடுப்பு மருந்துகளால் இந்த வகை பாதிப்பை தடுக்க முடியுமா எனும் சந்தேகம் எழுந்துள்ளது.

மலேசியாவில் கொரோனா வைரஸின் புதிய திரிபு கண்டுபிடிப்பு: பத்து மடங்கு வேகமாகப் பரவும் என எச்சரிக்கை

பட மூலாதாரம், Getty Images

"எனவே பொதுமக்கள் சமூக இடைவெளியே கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட அனைத்து சுகாதார நடவடிக்கைகளையும் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். மலேசியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் கட்டுக்குள் உள்ளது," என்று டாக்டர் நூர் ஹிஷாம் மேலும் தெரிவித்துள்ளார்.

எகிப்திலும் பாகிஸ்தானிலும் ஏற்கெனவே இந்த வகைத் தொற்றுப் பரவல் இருப்பதாக இவர் முன்பே குறிப்பிட்டிருந்தார். தற்போது மலேசியாவும் அந்தப் பட்டியலில் இணைந்துள்ளது.

இதற்கிடையே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை மலேசியாவில் 9,200ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 8,859 பேர் குணமடைந்துள்ளனர்.

125 பேர் பலியாகி உள்ள நிலையில், 216 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

வரைபடம்

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது 5 ஜூலை, 2022, பிற்பகல் 1:29 IST

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: