'செயற்கைக்கோள்களை அழிக்க ரஷ்ய விண்வெளி ஆயுதம்' - அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிற செய்திகள்

ரஷ்யா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, விண்வெளியில் ஆயுதப் பயன்பாடு கூடாது என வலியுறுத்தும் சர்வதேச ஒப்பந்தம் ஒன்றில் நூற்றுக்கும் மேலான நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. (கோப்புப்படம்)

விண்ணில் சுற்று வட்டப்பாதையில் இருக்கும் செயற்கைக்கோள்களை இலக்கு வைக்கும்படியான ஏவுகணை போன்ற ஆயுதம் ஒன்றை ரஷ்யா பரிசோதனை செய்துள்ளதாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

ரஷ்ய ஆயுதம் செயற்கைக்கோள்களைத் தாக்கும் அமைப்பை கொண்டிருப்பதாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை இதனை விவரித்துள்ளது.

ஆனால் ரஷ்ய விண்வெளி உபகரணங்களை சோதிக்க புதிய தொழில்நுட்பம் ஒன்றை பயன்படுத்தி வருவதாக அந்நாட்டின் பாதுகாப்புத்துறை விளக்கம் அளித்திருந்தது.

ரஷ்ய செயற்கைக்கோளின் செயல்பாடுகள் குறித்து ஏற்கனவே அமெரிக்கா கவலை எழுப்பியிருந்தது.

விண்ணில் இயங்கும் இத்தகைய கருவிகளை சோதிக்கும் ரஷ்யாவின் நடவடிக்கைகள், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் விண்வெளிப் பொருட்களுக்கு அபாயத்தை உண்டாக்கும் ரஷ்யாவின் ராணுவக் கொள்கையுடன் ஒத்திருப்பதாக அமெரிக்க விண்வெளிப் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் ஜெனரல் ஜே ரேமண்ட் தெரிவித்துளார்.

ஆனால், தற்போது முதல்முறையாக இதே போன்ற குற்றச்சாட்டை பிரிட்டனும் முன்வைத்துள்ளது.

இது விண்வெளி சோதனை என்று ரஷ்யா கூறிவரும் நிலையில், இந்த ஏவுகணையானது ஆயுதங்கள் போல இருப்பதாக, அதாவது ஓர் ஆயுதத்திற்கான பண்புகளைக் கொண்டிருப்பதாக பிரிட்டன் கூறுகிறது.

Presentational grey line

கோவாக்ஸின்: மனிதர்கள் மீதான பரிசோதனை தமிழ்நாட்டில் துவங்கியது

கோவாக்ஸின்

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டில் தனியார் மருத்துவப் பல்கலைக்கழகம் ஒன்றில் கோவாக்ஸின் தடுப்பூசியை மனிதர்கள் மீது சோதிக்கும் பரிசோதனை நேற்று துவங்கியது. இதன் முடிவுகள் முழுமையாகத் தெரியவர ஆறு மாதங்கள் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவாக்ஸின் என்ற கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியிருக்கிறது.

Presentational grey line

அமிதாப் பச்சன்: 'கொரோனா வைரஸ் குணமாகவில்லை'

அமிதாப் பச்சன்

பட மூலாதாரம், Getty Images

கோவிட்-19 தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பாலிவுட் திரைப்பட நடிகர் அமிதாப் பச்சன் தமக்கு கொரோனா வைரஸ் தொற்று குணமாகி விட்டதாக சமூக ஊடகங்கள் மற்றும் சில செய்தித் தொலைக்காட்சிகள் சிலவற்றில் வெளியான செய்தியை மறுத்துள்ளார்.

தமக்கு தொற்று தற்போது இல்லை என வெளியாகியுள்ள செய்தி, " தவறானது, பொறுப்பற்றது உண்மைக்குப் புறம்பானது மற்றும் நினைத்துக்கூட பார்க்க முடியாத பொய்," என்று அமிதாப் பச்சன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Presentational grey line

தமிழகத்தில் புதிய உச்சம் தொட்ட கோவிட் - 19

தமிழகத்தில் புதிய உச்சம் தொட்ட கோவிட் - 19

பட மூலாதாரம், Getty Images

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு நேற்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு 88 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மேலும் 52,939 பேர் தமிழகத்தில் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். 5210 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Presentational grey line

பிபிசி சேவை சர்வதேச அளவில் இந்தியாவில் அதிக நேயர்களை பெற்றுள்ளது

BBC

புதிய தரவுகளின்படி இந்தியாவில் வாரம் ஒன்றிற்கு 60 மில்லியன் மக்களை பிபிசி சென்றடைவது தெரியவந்துள்ளது.

இந்த சமீபத்திய தரவுகளின்படி உலகளவில் பிபிசி, இந்தியாவில் அதிகளவிலான நேயர்களை பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

பிபிசி சேவை ஆங்கிலம் உட்பட இந்திய மொழிகளான தமிழ், ஹிந்தி, மராட்டி, பஞ்சாபி, உருது, குஜராத்தி, தெலுகு, மற்றும் வங்காள மொழியிகளிலும் தனது சேவையை வழங்கி வருகிறது.

பிபிசியின் இந்த அபார வளர்ச்சிக்கு முக்கிய காரணம் பிபிசி டிஜிட்டல் தளத்தில் 186 சதவீத அளவிற்கு வளர்ச்சி பெற்றதாகும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: