இந்தியா - சீனா எல்லை பதற்றம்: ' அமெரிக்க அதிபர் டிரம்ப் மத்தியஸ்தம் செய்ய தேவையில்லை'

பட மூலாதாரம், DAN KITWOOD
இந்தியா மற்றும் சீனா இடையே தற்போது நிலவும் எல்லை பிரச்சனைக்கு தாம் மத்தியஸ்தம் செய்ய தயார் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியிருந்ததற்கு சீன வெளியுறவுத் துறை கடுமையான எதிர்வினை ஆற்றியுள்ளது.
தற்போது தங்கள் இரு நாட்டு ராணுவங்களுக்கு இடையே நிலவும் பதற்றமான சூழலை தணிக்க மூன்றாவது நாடு ஒன்றின் தலையீடு தேவையில்லை என்று கூறியுள்ள சீனா, எல்லை பிரச்சனை தொடர்பாக பேசி தீர்த்துக் கொள்வதற்கான வழிமுறைகள் மற்றும் தகவல் தொடர்பு முறைகள் ஏற்கனவே உள்ளன என்று கூறியுள்ளது.
பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனை மூலமாக இந்த பிரச்சினையை தீர்த்துக் கொள்வதற்கான திறன் தங்களிடம் இருப்பதாக, பெய்ஜிங்கில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் சீன வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் ஷாவோ லிஜியன் தெரிவித்துள்ளார்.
இந்தியா, சீனா இடையே லடாக் பகுதியில் தொடரும் மோதல் நிலை தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி “மகிழ்ச்சியாக இல்லை” என்று முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
இந்தியா - சீனா எல்லை பதற்றம்
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சனை அதிகரித்து வருகிறது. கிழக்கு லடாக்கில் உள்ள பாங்கோங் த்சோ ஏரியில் சீனா தனது ரோந்து படகுகளின் நடமாட்டத்தை அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்த ஏரியின் அருகே இந்திய மற்றும் சீன வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்தப் பகுதி லடாக்கின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகில் உள்ளது.
இதையடுத்து இந்தியா - சீனா இடையே நிலவி வரும் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயாராக இருப்பதாக சில தினங்களுக்கு முன்னர் டிரம்ப் தெரிவித்திருந்தார். ஆனால், இதற்கு இந்தியா, சீனா ஆகிய இரண்டு நாடுகளும் மறுப்புத் தெரிவித்துவிட்டன.

இந்த நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், “தலா 140 கோடி மக்கள் தொகையை கொண்ட இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே பெரியளவில் மோதல் நிலவி வருகிறது. இந்த பிரச்சனை தொடர்பாக இந்திய பிரதமர் மோதியுடன் நான் பேசினேன், சீனாவுடன் நிலவி வரும் மோதல் நிலை குறித்து அவர் நல்ல மனநிலையில் இல்லை” என்று கூறினார்.
இந்த நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் கடைசியாக ஏப்ரல் 4ஆம் தேதி பேசியபோது, ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து குறித்தே உரையாடப்பட்டது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், இந்த எல்லை பிரச்சனை தொடர்பாக சீனாவுடன் நேரடியான தொடர்பில் உள்ளதாக நேற்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெளிவுப்படுத்தியதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், உண்மையிலே இந்தியா - சீனா எல்லை பிரச்சனை தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய பிரதமருடன் பேசினாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிற செய்திகள்:
- நரேந்திர மோதி 2.0: சாதித்தது என்ன? சறுக்கியது என்ன?
- பொன்மகள் வந்தாள் - சினிமா விமர்சனம்
- சமூக ஊடக நிறுவனங்களை கட்டுப்படுத்தும் உத்தரவில் கையெழுத்திட்ட டிரம்ப்
- 'என் புறாவை திருப்பித் தாருங்கள்': நரேந்திர மோதியிடம் கோரிக்கை வைக்கும் பாகிஸ்தானியர்
- புலம்பெயர் தொழிலாளர்களிடம் பயணக் கட்டணம் வசூலிக்க கூடாது: இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவு












