கொரோனா வைரஸ்: சர்வதேச விமான சேவைகளை நிறுத்தியது கோ ஏர் விமான நிறுவனம்

பட மூலாதாரம், Getty Images
கொரோனா வைரஸ் பரவல் பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருவதன் காரணமாக, முன்னெப்போதும் இல்லாத வகையில் பயணிகள் எண்ணிக்கை குறைந்ததால் 'கோ ஏர்' விமான சேவை நிறுவனம் தனது சர்வதேச விமான சேவையை மார்ச் 17 முதல் ஏப்ரல் 15 வரை முற்றிலும் நிறுத்திவைத்துள்ளது.
பல நாடுகளும் வெளிநாட்டு பயணிகள் தங்கள் நாடுகளுக்கு வருவதற்குத் தடை விதித்துள்ள நிலையில், வெளிநாட்டுப் பயணங்கள் உலகம் முழுவதும் வெகுவாகக் குறைந்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகிறது.
மலேசியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட இருவர் பலியாகியுள்ளனர். சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து நாட்டில் உள்ள மலேசிய மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
34 வயது ஆடவர், 60 வயது முதியவரை பலி கொண்ட கொரோனா
ஜொகூர்பாரு மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் கோவிட்-19 நோய்க்குரிய சிகிச்சை பெற்று வந்த 34 வயதான ஆடவர் தான் மலேசியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு முதலில் பலியாகி உள்ளார். கடந்த மாத இறுதியில் கோலாலம்பூரில் நடைபெற்ற சமய நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற பின்னர் அவரிடம் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் தென்பட்டன.
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சையின் போது அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்து செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்துள்ளார் என்று மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இரண்டாவதாக 60 வயது மலேசியரை பலி வாங்கியுள்ளது கொரோனா வைரஸ். கடும் காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசப் பிரச்சினைகளுடன் கடந்த 7ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவர், இன்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்.
தற்போது கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ள 12 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்களுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதே வேளையில் கோவிட்-19 பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த 49 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
1 லட்சம் பேரை வேலைக்கு எடுக்கும் அமேசான்
கொரோனா தொற்றின் அச்சம் காரணமாக வீட்டு உபயோக பொருட்களை இணையத்தில் வாங்குவது அதிகரித்துள்ளது என்று கூறும் அமேசான் நிறுவனம் இதனை கையாள்வதற்காக ஏறத்தாழ ஒரு லட்சம் பணியாளர்களை வேலைக்கு அமர்த்த முடிவு செய்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
தடுப்பூசி

பட மூலாதாரம், Getty Images
கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து முதல்முறையாக அமெரிக்காவில் பரிசோதனை செய்யப்பட்டது.
வாஷிங்டன் சியாட்டிலில் உள்ள ஒர் ஆய்வகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நான்கு பேருக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.
இந்த தடுப்பூசி தீர்வாகுமா என்று உடனே சொல்ல முடியாது. அதற்கு சில காலங்கள் ஆகும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
பரிசோதனை தடுப்பூசி செலுத்தப்பட்ட 43 வயதான பெண்மணி ஜெனிஃபர், "இந்த பரிசோதனைக்கு உள்ளாவது என் பேறு," எனக் குறிப்பிட்டுள்ளார்.
சரி சர்வதேச அளவில் கொரோனா தொடர்பாக கடந்த 24 மணி நேரத்தில் நடந்த நிகழ்வுகளைப் பார்ப்போம்


மரணங்கள்
- உலக சுகாதார நிறுவனத்தால் திங்கட்கிழமை தொகுக்கப்பட்ட தகவல்களின்படி இதுவரை கொரோனாவால் 6606 பேர் பலியாகி உள்ளனர். 167,511 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது.
- 151 நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவி உள்ளது.
உலக அளவில் வெவ்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை என்ன?
- கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த ஐரோப்பாவில் உள்ள நாடுகள் பல முயற்சிகளை எடுத்துவரும் நிலையில், சமூக ரீதியிலான தொடர்புகளைக் கட்டுப்படுத்தும் விதமாக ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் சில புதிய நடவடிக்கைகளை அமல்படுத்துள்ளன.

பட மூலாதாரம், Getty Images
சர்வதேச நிலை
- ஸ்பெயின் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் கொரோனா பரவலுக்கு எதிராக அவசர நிலையை அறிவித்து, அங்கு அலுவலகங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவை அரசின் உத்தரவுப்படி கட்டாயமாக மூடப்பட்டுள்ளது போல பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங்கும் அவ்வாறான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
- ''சுகாதார ரீதியிலான ஒரு போரில் தற்போது நாம் உள்ளோம்'' என்று மக்ரோங் தெரிவித்துள்ளார்.ஐரோப்பிய ஒன்றியத்துடனான பிரான்ஸின் எல்லைகள் வரும் செவ்வாய்க்கிழமை முதல் மூடப்படும் என்றும் இமானுவேல் மக்ரோங் மேலும் குறிப்பிட்டார்.

- ஜெர்மனியில் மளிகைக்கடைகள் அல்லாத பிற கடைகள் மற்றும் நிறுவனங்கள் மூடப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
- ஜெர்மனியில் மத ரீதியிலான நிகழ்வுகளுக்குத் தற்காலிகமாகத் தடை விதித்துள்ள அந்நாட்டின் சான்சிலர் ஏங்கெலா மெர்கல், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலா பயணங்களை ரத்து செய்யுமாறு மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
- ஜெர்மனி முழுவதிலும் பள்ளிகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இதனிடையே, பிரிட்டனில் கட்டாய தடைகள் எதனையும் பிரதமர் போரீஸ் ஜான்சன் அறிவிக்காத போதும், மதுபான கூடங்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று மக்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தேவையற்ற பயணங்களை மக்கள் தவிர்ப்பது நல்லது என்றும் அவர் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
- இந்தியாவில் தாஜ்மஹால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சராசரியாக தினமும் 70000 பேர் தாஜ்மஹாலை பார்வையிடுகிறார்கள்.

கண்களைக் கட்டிக்கொண்டு நீங்கள் தீயினை அணைக்க முடியாது
- முன்னதாக கொரோனா தொற்று பரவல் குறித்து கவலை தெரிவித்த உலக சுகாதார நிறுவனத்தின் தலைவரான டெட்ரோஸ் அதனோம் கிப்ரயெசூஸ், உலக அளவில் பல அரசுகளும் இந்த தொற்றை கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
- மேலும் அரசுகள் கொரோனா தொற்று சோதனை நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்த வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
- ''கண்களைக் கட்டிக்கொண்டு நீங்கள் தீயினை அணைக்க முடியாது. எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என்று முழுவதுமாக அறியாமல் இந்த தொற்று பரவலை நாம் முடிவுக்குக் கொண்டு வர முடியாது'' என்று ஜெனீவாவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார். ''அனைத்து நாடுகளுக்கும் ஒரு செய்தியைத்தான் நாங்கள் சொல்கிறோம். சோதனை செய்யுங்கள்! சோதனை செய்யுங்கள்! என்பதுதான் அது'' என்றார் அவர்.
கனடாவின் நிலை

பட மூலாதாரம், Getty Images
குடிமக்கள் மற்றும் நிரந்தர குடியுரிமை பெற்றவர்களை தவிர மற்ற வெளிநாட்டு மக்கள் கனடாவுக்குள் நுழைய முடியாத என அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ஆனால் அமெரிக்க குடிமக்கள் இதில் விதிவிலக்காக கருதப்படுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் விமான நிறுவனங்கள், கொரோனா அறிகுறிகள் உள்ள பயணிகளைக் கனடாவுக்குச் செல்லும் விமானங்களுக்குள் அனுமதிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மாண்ட்ரியல், டொரோண்டோ, கல்கரி மற்றும் வான்கூவர் ஆகிய நான்கு சர்வதேச விமான நிலையங்களில் வரும் புதன்கிழமை நாளை முதல் விமான போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படும் எனக் கனடா தெரிவித்துள்ளது.
கனடாவில் 10 மாகாணங்களில் தற்போது வரை மொத்தம் 324 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று இருப்பதாக சந்தேகப்படுபவர்கள் 17 பேர்.
கனடாவில் தற்போது கொரோனாவுக்கு 4 பேர் பலியாகியுள்ளனர். அதில் மூன்று உயிரிழப்புகள் நேற்று ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த நான்கு பேரும் பிரிட்டிஷ் கொலம்பியா பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள்.
கடந்த வாரம் தனது மனைவி சோஃபிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, ஜஸ்டின் ட்ரூடோ தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
தேவையில்லாத பயணங்களைத் தவிர்க்குமாறும், வெளிநாட்டில் இருக்கும் கனடா மக்கள் முடிந்தவரை விரைவில் வீட்டுக்குத் திரும்புமாறும் கடந்த வாரம் கனடா அறிவுறுத்தியிருந்தது. நாட்டுக்குத் திரும்பு அனைத்து கனடா மக்களும் இரண்டு வாரங்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கனடாவின் அனைத்து எல்லைகளும் மூடப்பட்டிருப்பதால், வர்த்தக செயல்பாடுகள் பாதிக்கப்படாது என அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்காவுடன் அனைத்து வகையிலும் கனடா நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளதால், இந்த கட்டுப்பாடுகளில் அமெரிக்க மக்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக எல்லைகளை மூட வேண்டிய தேவை ஏற்படவில்லை எனக் கனடா தெரிவித்திருந்தது. ஆனால் கொரோனா தொற்று கனடாவில் தீவிரமடைந்து வருவதால், எல்லைகளை மூடுவது உட்பட அவரச நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நேரம் இது என ட்ரூடோ கூறியுள்ளார்.
பல கனடா மாகாணங்கள் பள்ளிகளை மூடியுள்ளன. 39 கொரோனா நோயாளிகள் பதிவாகியுள்ள க்யூபெக் மாகாணத்தில் பார்கள், திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள் ஆகியவற்றை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. 50 சதவிகித உணவகங்கள் மட்டுமே செயல்பட வலியுறுத்தப்பட்டுள்ளது.
கனடாவுக்கு திரும்பி வரும் குடிமக்கள் பலர், தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வது இல்லை என்ற புகார் எழுந்துள்ளதையடுத்து, மாண்ட்ரியல் அரசு கூடுதல் சுகாதாரத்துறை குழுக்களை விமான நிலையங்களுக்கு அனுப்பியுள்ளது.
கனடாவின் பெரிய நகரான டொரோண்டோவில், நள்ளிரவு நேரங்களில்,மதுபான விடுதிகள், உணவகங்கள், உல்லாச விடுதிகள் ஆகியவற்றை மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












