வான் தாக்குதல்: சோமாலியாவில் இஸ்லாமிய போராளி இயக்கத்தின் மூத்த தளபதி பலி மற்றும் பிற செய்திகள்

இஸ்லாமிய போராளிகள்

பட மூலாதாரம், Getty Images

சோமாலியாவில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் அந்நாட்டிலுள்ள இஸ்லாமிய போராளிகள் இயக்கமான அல்-ஷபாபின் மூத்த தளபதி உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பஷீர் மொஹமட் கோர்காப் இருக்கும் இடம் குறித்த தகவலை வழங்கியவருக்கு கடந்த 2008ஆம் ஆண்டு 5 மில்லியன் டாலர் வெகுமதியை அமெரிக்கா வழங்கியது.

சோமாலியாவில் உள்ள போராளிகள் குழுவினரை குறிவைத்து அமெரிக்கா அடிக்கடி வான் தாக்குதல் நடத்தி வருகிறது. எனினும், இந்த சம்பவம் குறித்து எவ்வித தகவலையும் அமெரிக்கா வழங்கவில்லை. இந்த சூழ்நிலையில், கோர்காபின் மரணத்தை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தும் பணிகளை முன்னின்று செயல்படுத்தி வந்த இவர் கென்யாவிலும் தாக்குதல்களை நடத்தியுள்ளார்.

சோமாலியா - அமெரிகாவின் கூட்டு இராணுவ நடவடிக்கையில் கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி தெற்கு சோமாலிய நகரமான சாகோவில் கோர்காப் கொல்லப்பட்டதாக சோமாலிய அரச வானொலி தெரிவித்துள்ளது.

எனினும், இந்த தாக்குதல் சம்பவம் குறித்த தகவல் வெளியாவதற்கு ஏற்பட்ட காலதாமதம் குறித்து எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை.

Presentational grey line

பிபிசி-யின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது

பி.வி. சிந்து

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பி.வி. சிந்து

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து, 'பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை 2019' விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு, சுவிட்சர்லாந்தின் பேசல் நகரில் நடைபெற்ற உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று, அந்தப் பதக்கத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றவர் பி.வி. சிந்து (புசர்ல வெங்கட சிந்து).

Presentational grey line

இந்தியாவின் முதல் பெண் மாலுமி ஆன தமிழ்நாட்டின் ரேஷ்மா

ரேஷ்மா
படக்குறிப்பு, ரேஷ்மா நிலோஃபர்

விண்வெளி, மருத்துவம், சட்டம், காவல்துறை என பெண்கள் கால்பதிக்காத துறையே இல்லை எனும் அளவுக்கு நாளுக்கு நாள் சமூகத்திற்கு பெண்களின் பங்களிப்பு அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

இந்நிலையில், தான் எடுத்துக்கொண்ட துறையில் சாதனை படைத்த முதல் பெண்ணாக இருப்பதற்கு பெருமை கொள்வதைவிட தன்னைப்போல் அதிக பெண்கள் அந்த துறைக்கு வந்தால் அதைவிட பெருமையடைவேன் என்கிறார் சென்னையில் பிறந்து மேற்கு வங்கத்தில் பணியாற்றி தற்போது உலகம் முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கும் இந்தியாவின் முதல் பெண் கப்பல் பைலட் ரேஷ்மா நிலோஃபர்.

Presentational grey line

நாக் அவுட் போட்டிகளும், இந்திய கிரிக்கெட் அணியும் - தொடரும் ஏமாற்றங்கள்

டி20 பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டி20 பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் 85 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்தியா முதல்முறையாக டி20 உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது.

இறுதிப்போட்டி வரை மிக சிறந்த பேட்டிங் வரிசை, அசர வைக்கும் பந்துவீச்சாளர்கள் என வெற்றிகரமாக வலம்வந்த இந்தியா, இதுவரை விளையாடிய இந்திய பெண்கள் அணிகளில் சிறந்த அணி என்றும், கனவு அணி என்றும் புகழப்பட்டது.

Presentational grey line

"தமிழகத்தில் முககவசம் அணியும் நிலை இல்லை"

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

கொரோனா பாதிப்பு ஏற்பட்ட முதல் நபர் சென்னையில் அனுமதிக்கப்பட்டுள்ளதும், தமிழகத்தில் பொது மக்கள் அச்சப்பட்டு முககவசம் அணியும் நிலை தற்போது இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

விமான நிலையங்கள் மற்றும் துறைமுகத்தில் தீவிர கண்காணிப்பு செய்யப்படுவதால், வெளிநாட்டில் இருந்துவரும் நபர்களுக்கு நோய் தொற்று இருப்பது உடனடியாக கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்படுவதால், பொது மக்கள் முககவசம் அணியதேவையில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Presentational grey line

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: