‘என்னோட தத்தெடுப்பு நிகழ்ச்சிக்கு வாங்க’ - பள்ளி தோழர்களை அழைத்த 5 வயது சிறுவன் மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், KENT COUNTY COURT
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் சட்ட ரீதியான தனது தத்தெடுப்பு நிகழ்ச்சிக்கு தன் மழலையர் பள்ளி தோழர்கள் அனைவரையும் அழைத்து பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளான் 5 வயது சிறுவன் ஒருவன்.
மைக்கேல் என்ற இந்த சிறுவன் கென்ட் கவுண்டியில் உள்ள தன்னை தத்தெடுத்த புதிய வீட்டுக்கு வியாழக்கிழமையன்று முறைப்படி சென்றான்.
இது தொடர்பாக ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட புகைப்படத்தில் இந்த சிறுவன் தன்னை தத்தெடுத்த பெற்றோருடன் அமர்ந்திருப்பதும், அவனது மழலையர் பள்ளி தோழர்கள் இதய வடிவிலான அட்டையை மகிழ்ச்சியை தெரிவிக்கும் விதமாக அசைத்து கொண்டிருப்பதும் தெரிகிறது.
இந்த நிகழ்ச்சியில் மைக்கேலின் புதிய பெற்றோரிடம் அவனது பள்ளி தோழர்கள் ஒவ்வொருவராக அறிமுகம் செய்து கொண்டனர்.
தத்தெடுக்கப்பட்ட வீட்டுக்கு சென்ற மைக்கேலுடன் அவனது புதிய பெற்றோர் மற்றும் அவனது பள்ளி தோழர்கள் அனைவரும் அமர்ந்திருந்த புகைப்படம் ஃபேஸ்புக்கில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட முறை பகிரப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 6 என்கவுன்டர்கள்

ஹைதராபாத்தில் நடந்த என்கவுன்டர் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த இருபதாண்டுகளில் தமிழ்நாட்டிலும் பல என்கவுன்டர் சம்பவங்கள் இதுபோல நடந்திருக்கின்றன.
அல் - உம்மா இயக்கத்தினர் என்கவுன்டர் (2002 செப்டம்பர்)
கோவை குண்டுவெடிப்பு வழக்கு, சென்னை ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டு வெடிப்பு வழக்கு ஆகியவற்றில் குற்றம்சாட்டப்பட்டிருந்த அல் - உம்மா இயக்கத்தைச் சேர்ந்த இமாம் அலி உள்ளிட்ட ஐந்து பேர் தமிழகத்தைச் சேர்ந்த காவல்துறையினரால் பெங்களூரில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மேலும் படிக்க: தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 6 என்கவுன்டர்கள்

சௌதி அரேபியா: உலகுக்கு சீர்திருத்த முகம்; உள்ளூருக்கு அடக்குமுறை - நடப்பது என்ன?

பட மூலாதாரம், EPA
ரியாத்திலுள்ள கால்பந்து மைதானத்திற்கு அருகே ஆக்ரோஷமான இளைஞர்கள் காணப்பட்டனர். தங்கள் ஆடையின் ஒரு பகுதியை கழற்றிய அவர்கள் அதனை தலைக்கு மேல் சுற்றிகொண்டிருந்தார்கள்.
சௌதி பெண்களில் சிலர், தங்கள் வாழ்க்கையின் நல்ல பருவத்தை அனுபவித்து கொண்டிருந்தார்கள். அவர்களுடைய தலையை மூடும் துணிகள் கறுப்பு கொடிகளாக மாறியிருந்தன.
பிரேசில் மற்றும் அர்ஜென்டினா கால்பந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இந்த போட்டிதான், சௌதி அரேபியாவில் கடந்த 20 ஆண்டுகளில் விளையாடப்பட்ட முதல் கால்பந்து போட்டியாகும்.
ஆனால், முன்பு போட்டி விளையாட்டு நடைபெற்றபோது, சௌதி ஆண்கள் தலையில் சிவப்பு மற்றும் வெள்ளை துணையையும், உடலில் வெள்ளை அங்கியையும் அணிந்து இருந்தனர். ஒரு பெண் கூட கறுப்புநிற அபாயா அணியாமல் அப்போது இருக்கவில்லை.

"நித்யானந்தா எங்கிருக்கிறார் என்று தெரியாது" - இந்திய வெளியுறவு அமைச்சகம்

பட மூலாதாரம், Getty Images
சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தாவின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், புதிய பாஸ்போர்ட்டுக்கு அவர் செய்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய வெளியுறவு துறையின் செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
வார இறுதியில் வெளியுறவு துறை வழங்கும் செய்தியாளர் சந்திப்பில், நித்யானந்தா பற்றி ரவீஷ் குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, அந்த கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நித்யானந்தா பல வழக்குகளில் தேடப்படுவதால், வெளிநாடுகளிடமும், தூதரகங்களிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்திருக்கிறோம் என்று ரவீஷ் குமார் கூறினார்.

ஹைதராபாத் என்கவுன்டர்: நடந்தது என்ன? - 10 முக்கிய அம்சங்கள்

ஹைதராபாத் கால்நடை பெண் மருததுவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு, எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற 10 முக்கிய நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றோம்.
01. ஹைதராபாத் நகரில் பெண் கால்நடைமருத்துவர் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேர் போலீஸ் என்கவுண்டரில் நேற்று(வெள்ளிக்கிழமை) அதிகாலையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
02. இந்த கொலை சம்பவம் தொடர்பாக நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.
மேலும் படிக்க: ஹைதராபாத் என்கவுன்டர்: நடந்தது என்ன? - 10 முக்கிய அம்சங்கள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












