ரஷ்ய எல்லையை கடந்து சென்று விவசாயம் செய்யும் சீனர்கள்

மக்சிமோவ்க்காவில் உள்ள பண்ணையைச் சுற்றி இரும்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. அங்கு வேலை பார்க்கும் சீன தொழிலாளர்கள் பொருட்கள் வாங்குவதற்கு கடைவீதிக்குச் செல்வதற்கு மட்டுமே அங்கிருந்து வெளியில் செல்கின்றனர். ரஷ்யாவின் தூர கிழக்குப் பகுதியில் உள்ள கிராமத்தின் மத்தியில் உள்ள கைவிடப்பட்ட பழங்கால கட்டடத்தில் - கதவுக்கு வெளியிலோ உள்ளேயோ பூட்டுகள் எதுவும் இல்லை, 1980கள் மற்றும் 90களைச் சேர்ந்த காகிதங்கள் இறைந்து கிடக்கின்றன.
ஒரு காலத்தில் 400 ரஷ்யர்களுக்கு வேலை கொடுத்துக் கொண்டிருந்த பண்ணையில் இப்போது யாரும் வாழ முடியாத சூழ்நிலை ஏன் ஏற்பட்டது என்பதற்கான பதில் இங்கே இருக்கிறது.
ரஷ்யாவின் கிராமப் பகுதிகளில் உள்ள பல கூட்டுப் பண்ணைகளைப் போல, பழைய சோவியத் யூனியன் சரிந்த போது, மயக் பண்ணையும் குலைந்து போனது.
ஐந்து எல்லைப் பகுதிகளில் சீனத் தொழிலாளர்கள் வந்து சேர்ந்தபோது, அவர்களை ரஷ்யர்கள் மகிழ்வுடன் வரவேற்கவில்லை.

``ரஷ்யாவில் வேலை பார்ப்பது சீனாவில் வேலை பார்ப்பதைப் போலதான் உள்ளது. காலையில் எழுந்து வேலைக்குச் செல்கிறோம்'' என்று ச்சோம் வேம்ப்பென் கூறுகிறார்.
ரஷ்யாவில் மக்கள் பரவலாக இல்லாத இந்தப் பகுதிக்கு 1990களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான சீனர்களில் ஒருவர் அவர்.
பெரும்பாலானவர்கள் ரஷ்யர்கள் அல்லது சீனர்களுக்குச் சொந்தமான பண்ணைகளில் வேலை தேடிச் செல்கிறார்கள். அல்லது நிலத்தை குத்தகைக்கு எடுத்து தங்களுடைய சொந்த விவசாய தொழிலில் ஈடுபடுகின்றனர்.
மேற்கத்திய நாடுகளுடன் ரஷ்யாவின் உறவு மோசமாகும் நிலையில், சீனர்கள் வருகையை அதிபர் விளாடிமிர் புதின் வரவேற்கிறார்.

சீன தொழில்முனைவோருக்கு ஆயிரக்கணக்கான ஹெக்டர் நிலங்களை மயக் தலைவர் யெவ்ஜெனி ஃபோக்கின் குத்தகைக்கு கொடுத்துள்ளார். குறைந்த வாரத்துக்கு பெருமளவு நிலம் கிடைப்பதால் விவசாயத் தொழில் நிறுவனங்கள் அந்தப் பகுதிக்கு ஈர்க்கப்பட்டுள்ளன.
``நிலம் கூட்டு உரிமையில் இருப்பது நல்லது என்ற எண்ணத்தில் பங்குகளை நாங்கள் ஃபோக்கினுக்கு கொடுத்தோம். ஆனால் அவர் அனைத்தையும் சீனர்களுக்குக் கொடுத்துவிட்டு, எங்களை விட்டுவிட்டார். அதனால் நாங்கள் அனைத்தையும் இழந்துவிட்டோம்'' என்று மக்சிமோவ்க்கா கிராமத்தைச் சேர்ந்த டட்யனா இவனோவ்னா கூறினார்.
``வாய்ப்பே இல்லை. அதில் வழக்கத்திற்கு மாறாக எதுவும் நடக்கவில்லை'' என்று ஃபோகின் கூறுகிறார்.

சீன நிறுவனங்கள் எப்படி கால் பதித்தன?
ரஷ்யாவின் தூர கிழக்குப் பகுதியில் 2000களின் தொடக்கத்தில் சீன நிறுவனங்கள் வரத் தொடங்கின. ஆனால் 2008ல் உலக அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பிறகு அந்தப் பகுதியில் பெய்ஜிங்கின் ஆர்வம் அதிகரித்தது.
``அப்போது பதற்றம் இருந்தது. எங்கே முதலீடு செய்யலாம் என சீனர்கள் தேடிக் கொண்டிருந்தனர்'' என்று சீனாவைச் சேர்ந்த விவசாயப் பண்ணை நிறுவனத்தின் தலைவர் ஒருவர் பிபிசி ரஷ்யப் பிரிவிடம் தெரிவித்தார். தனது பெயரை வெளியிட அவர் விரும்பவில்லை.
சீன முதலீட்டைத் தொடர்ந்து, குடிபெயர்ந்து வரும் சீன தொழிலாளர்கள் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்தது.
``எங்களிடம் சிறிது நிலமும், நிறைய மக்களும் உள்ளனர்'' என்று சீன விவசாயி ஒருவர் தெரிவித்தார்.
அரசு நிலப் பதிவேட்டில் வெளியிடப்பட்டுள்ள தகவல்களின்படி, ரஷ்யாவில் தூர கிழக்குப் பிராந்தியத்தில் குறைந்தது 350,000 ஹெக்டர் (3,500 சதுர கி.மீ.) அளவு நிலம் சீனர்களுக்குச் சொந்தமானதாக அல்லது குத்தகை உரிமத்தில் இருப்பதாக பிபிசி ரஷ்யப் பிரிவு கண்டறிந்துள்ளது. 2018ல் ரஷ்யாவில் சுமார் 2.2.மில்லியன் ஹெக்டர் நிலம் விவசாயப் பணிகளுக்காகப் பயன்பாட்டில் இருந்துள்ளது.
உண்மையான கணக்கீடு இன்னும் அதிகமாக இருக்கும் என பிபிசிக்கு தெரிய வந்துள்ளது.
பிபிசி ஆய்வின்படி, தூர கிழக்குப் பகுதியில் சீன விவசாயிகள் 40 சதவீதம் அளவுக்கு இருப்பதாகத் தெரிகிறது. அதிலும் குறிப்பாக யூதர்களின் தன்னாட்சி உள்ள பிரோபிட்ஜான் பகுதியில் அவர்கள் அதிகம் உள்ளனர்.
பெரும்பாலான நேர்வுகளில் ரஷ்யர்களால் அதிகாரப்பூர்வமாக குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ள நிலங்களை, உண்மையில் சீன தேசத்தவர்கள் தான் நிர்வகித்து வருகிறார்கள் என்று அந்தப் பிராந்தியத்தின் கவர்னர் அலெக்சாண்டர் லெவின்ட்டால் தெரிவிக்கிறார்.
``ஏறத்தாழ கூட்டுப் பண்ணையாக இருந்த அனைத்து நிலங்களுமே சீனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது'' என்று யூத தன்னாட்சிப் பிராந்தியத்தின் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் அலெக்சாண்டர் லாரிக் கூறுகிறார்.
ஏன் சுமுக உறவு இல்லை?

சீனாவில் இருந்து குடிபெயர்ந்து வந்தவர்களால் நிர்வகிக்கப்படும் பெரும்பாலான பண்ணைகள் கோட்டைகளைப் போல இருக்கின்றன. சீன எல்லையில் இருந்து அரை மணி நேர பயண தொலைவில் உள்ள பாப்ஸ்டோவோ-வில் பிரண்ட்ஷிப் பார்ம் என்ற பண்ணை உள்ளது. உயரமான வேலிகள் சூழ்ந்ததாக, சிவப்புக் கொடியுடன் அந்தப் பண்ணை காணப்படுகிறது.
ஆனால் ஓபிட்னோயே போலியே கிராமத்தில் ரஷ்ய மற்றும் சீனத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ள ஜின் ஜீ பண்ணையில் வேறு விதமாக உள்ளது.
இங்குள்ள பல சீனர்களைப் போல இவரும் ரஷ்யர்களின் பெயரை வைத்துள்ளார். இப்போது அவர் சீன டிமா என அழைக்கப்படுகிறார்.
சீன டிமா 1990களில் ரஷ்யாவுக்கு வந்து சோயா பண்ணை உருவாக்குவதற்காக 2,500 ஹெக்டருக்கும் அதிகமான நிலங்களை குத்தகைக்கு எடுத்தார். அந்த சமுதாயத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவராக இருக்கிறார். நர்சரி பள்ளிக் குழந்தைகளுக்குப் பரிசுகள் வாங்கிக் கொடுக்கிறார். பனிக்காலத்தில் கிராமத்தில் தொலைதூரப் பகுதிகளில் சாலையில் படரும் பனிக்கட்டிகளை அகற்ற தனது டிராக்டர்களை அனுப்பி வைக்கிறார்.
ரஷ்யர்களுக்கும் சீனர்களுக்கும் இடையில் மோதல் இல்லாமல் இல்லை. 2015ல் அமூர் பகுதியில் சீன தொழிற்சாலை வளாகத்தில் மூன்று ரஷ்யர்கள் நுழைந்து, சீன காவலாளி ஒருவரை மிரட்டி, தங்களுக்கு உணவு தருமாறு கேட்டுள்ளனர்.
சில தினங்கள் கழித்து டிராக்டர் என்ஜினை திருடுவதற்காக அவர்கள் திரும்பவும் சென்றபோது, அதே காவலாளி அவர்களைத் தடுத்துள்ளார். இந்த முறை அவரிடம் அரிவாள் இருந்தது.
அவர்களுக்கு ஐந்து முதல் ஒன்பது ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
விதைப்பு அல்லது அறுவடை போன்ற பருவ கால பணிகளுக்காக பெரும்பாலான சீனர்கள் எல்லை தாண்டிச் சென்று, பிறகு தாயகம் திரும்பி விடுகிறார்கள்.

ஆனால் பெருமளவில் சீனர்கள் வருவதை ரஷ்யர்கள் விரும்பவில்லை. ரஷ்ய அறிவியல் அகாடமி 2017ல் நடத்திய ஒரு கணக்கெடுப்பில், ரஷ்யா குறித்த சீனாவின் கொள்கை ஒரு நீட்சியாகத்தான் உள்ளது என்று மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமானவர்கள் கூறியுள்ளனர்.
ரஷ்யாவின் எல்லை ஒருமைப்பாட்டுக்கு சீனா அச்சுறுத்தலாக இருக்கிறது என்று ஏறத்தாழ பாதி பேர் கருத்து தெரிவித்துள்ளனர். தங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆபத்தாக சீனா இருக்கிறது என்று மூன்றில் ஒரு பகுதி பேர் குறிப்பிட்டுள்ளனர்.
``அவர்கள் காலை ஏழு மணிக்குப் புறப்படுகிறார்கள். இருட்டிய பிறகு தான் திரும்புகிறார்கள். நான் அவர்களைப் பார்ப்பது இல்லை. அவர்கள் என்னைப் பார்ப்பது கிடையாது'' என்று டிமிட்ரோவோ கிராமத்தில் உள்ள சீன விவசாயி இவனோவிச் கூறுகிறார்.
ஆனால் சில ரஷ்யர்கள் சீனர்களுடன் நட்பை உருவாக்கிக் கொண்டுள்ளனர்
``அவர்கள் பீர் கொண்டு வருகிறார்கள், நாங்கள் குடிப்போம். நான் அவர்களுக்கு முட்டைகளும் தேனும் கொடுப்பேன்'' என்கிறார் அலெக்சாண்டர்.
ரஷ்ய தொழிலாளர்களால் ஏன் போட்டியை சமாளிக்க முடியவில்லை?
ரஷ்யாவின் தூர கிழக்குப் பகுதியில் உள்ள சீன தொழிலாளர்கள், ரஷ்ய தொழிலாளர்களைவிட நல்ல பெயர் பெற்றிருக்கிறார்கள்.
``சீனர்கள் குடிப்பதில்லை. அவர்கள் ஓடிவிடுவதற்கு எந்த இடமும் இல்லை. பருவம் மாறும் போது அவர்கள் இங்கே வருகிறார்கள். எங்கள் குடிமக்கள் ஒரு வாரம் வேலைக்கு வந்துவிட்டு, பணம் கேட்பார்கள். பிறகு மது குடிக்கச் சென்று விடுவார்கள்'' என்று ரஷ்ய விவசாயப் பண்ணை முதலாளி ஒருவர் குற்றம்சாட்டுகிறார். தன்னுடைய பெயரை வெளியில் தெரிவிக்க அவர் விரும்பவில்லை.
சீன பண்ணை அதிபர்கள் சீனாவில் இருந்து வந்த தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு முன்னுரிமை தருகிறார்கள் என்றும், ரஷ்யர்களுக்கு குறைந்த தொழில் திறன் உள்ள வேலைகளைத் தருகிறார்கள் என்றும் யூத தன்னாட்சிப் பகுதி விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைவர் லாரிக் கூறுகிறார்.
ரஷ்ய தொழிலாளர்களின் குடிப்பழக்கம் பற்றி பெயர் குறிப்பிட விரும்பாத சீன விவசாயி ஒருவர் குற்றஞ்சாட்டினார்.

``ரஷ்யர்கள் அனைவரும் குடிக்கிறார்கள். இன்று அவர்களுக்குப் பணம் கொடுத்தால், நாளைக்கு வர மாட்டார்கள். அவர்களுடைய ஒழுக்கம் குறித்து பிரச்சினை இருக்கிறது'' என்றார் அவர்.
தொழிலாளர் உரிமைகளைக் காப்பதில் ரஷ்யாவின் அணுகுமுறை மோசமாக இருக்கிறது. குறிப்பாக, குறைந்த ஊதியம் தரப்படும் விவசாயத் துறை தொழிலாளர்களின் உரிமைகளை காப்பதில் மோசமான சூழ்நிலை உள்ளது.
உள்ளூர் தொழிலாளர்கள் பற்றி இங்குள்ள அனைவருமே தாழ்வான கருத்து கொண்டவர்களாக இல்லை.
``ரஷ்யா மற்றும் சீன தொழிலாளர்களுக்கு இடையில் என்ன வித்தியாசம் உள்ளது? ரஷ்ய தொழிலாளிகள் சீனர்களைவிட புத்திசாலிகள்'' என்று ச்சோம் வேம்ப்பென் குறிப்பிடுகிறார்.
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












