தென் சீனக்கடல் சர்ச்சை: 'அபோமினபிள்' படத்துக்கு மலேசியா உள்ளிட்ட 3 நாடுகளில் தடை

சீனா வரைபடத்தை நீக்க மறுப்பு: 'அபோமினபிள்' படத்துக்கு மலேசியாவில் தடை

பட மூலாதாரம், Dream Works

    • எழுதியவர், சதீஷ் பார்த்திபன்
    • பதவி, கோலாலம்பூர், பிபிசி தமிழுக்காக

ஒருசில நொடிகள் மட்டுமே திரையில் இடம்பெறும் ஒரு காட்சியை நீக்க மறுத்த காரணத்தால் மூன்று நாடுகளில் ஒரு திரைப்படத்தை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அந்தத் திரைப்படம் - 'அபோமினபிள்' (Abominable). இது ஒரு முழுநீள அனிமேஷன் படம். 75 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் இதை உருவாக்கியுள்ளனர்.

கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி கனடாவில் இப்படம் வெளியீடு கண்டது. மலேசியாவில் நவம்பர் 7ஆம் தேதி வெளியாகிறது. எனினும் திரை காணும் முன்பே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருந்தது 'அபோமினபிள்' .

ஆனால் படம் வெளியான கையோடு சூட்டோடு சூடாகப் பார்த்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்ட ரசிகர்களுக்கு, குறிப்பிட்ட ஒரு காட்சி முட்டுக்கட்டையாக அமைந்துவிட்டது. அது, தென்சீனக் கடற்பகுதி தொடர்பான சிறு காட்சி.

அதை நீக்க வேண்டும் என்று மலேசியா, வியட்நாம், ஃபிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தின. ஆனால் படத்தின் தயாரிப்பு தரப்பு இதை ஏற்க மறுத்துவிட்டது. இதன் காரணமாகவே இத்திரைப்படத்துக்கு இந்நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

'அபோமினபிள்' படத்தின் கதை என்ன?

முழு நீள அனிமேஷன் படமான 'அபோமினபிள்' படத்திற்கு உலக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப அனிமேஷன் காட்சிகள் கண்ணைக் கவரும் வகையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

சீனாவைச் சேர்ந்த பதின்ம வயதுப் பெண் தன் வீட்டுக் கூரையில் பனிமனிதன் ஒருவன் இருப்பதைக் கண்டுபிடிக்கிறாள். இதையடுத்து அந்தப் பனிமனிதனை அவனது பிறப்பிடமான எவரெஸ்ட் மலைச்சிகரப் பகுதிக்கு அனுப்ப உதவுகிறாள்.

இந்நிலையில், மற்றொரு தரப்பு பனிமனிதனை தங்கள் வசம் கொண்டு வர முயற்சிக்கிறது. அவளால் நினைத்ததைச் சாதிக்க முடிந்ததா? என்பதுதான் 'அபோமினபிள்' கதை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்த்து ரசிக்கக் கூடிய வகையில் இந்தப் படம் உருவாகி இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுவரை படம் பார்த்தவர்கள் நல்ல விமர்சனத்தையே அளித்துள்ளனர்.

Presentational grey line

World Map-ஐ மாற்றிய சீனா Abominable படத்துக்கு மலேசியா தடை | South China Sea Dispute - விரிவாக காண:

Presentational grey line

சீனா தன்னிச்சையாக வெளியிட்ட வரைபடத்தால் உருவான சிக்கல்

சரி... எதற்காக அக்குறிப்பிட்ட காட்சியை நீக்க வேண்டும்?

காரணம் உள்ளது. அக்காட்சியில் சர்ச்சைக்குரிய தென்சீனக் கடற்பகுதி தொடர்பாக சீனா தன்னிச்சையாக வெளியிட்டுள்ள வரைபடம் இடம்பெற்றிருக்கிறது.

சீனா வரைபடத்தை நீக்க மறுப்பு: 'அபோமினபிள்' படத்துக்கு மலேசியாவில் தடை

பட மூலாதாரம், Dream works

இந்த வரைபடத்தை 'ஒன்பது வரிகள்' என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆங்கில எழுத்தான 'U' வடிவில் காணப்படும் இந்த ஒன்பது கோடுகள் கொண்ட வரைபடத்தின் மூலம், தென் சீனக் கடலின் பெரும்பகுதி தனக்குரியது எனச் சொந்தம் கொண்டாடி வருகிறது சீனா.

ஆனால், சீனா குறிப்பிடும் சில கடற்பகுதிகள் தங்களுக்குச் சொந்தமானவை என மலேசியா, வியட்நாம், ஃபிலிப்பைன்ஸ், புரூனே ஆகிய நான்கு தென்கிழக்கு ஆசிய நாடுகளும், இன்னொரு பக்கம் தைவானும் குரல் எழுப்பி வருகின்றன. எனவேதான் சர்ச்சைக்குரிய அந்த வரைபடம் இடம்பெற்றுள்ள காட்சியை மட்டும் நீக்க வேண்டும் என இந்நாடுகள் வலியுறுத்தி உள்ளன.

சீன கடல்

பட மூலாதாரம், Getty Images

படம் பார்க்கும் ரசிகர்களுக்கு தென்சீனக் கடற்பகுதி குறித்த தவறான புரிதல் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதே இந்நாடுகளின் கவலையாக இருக்கக்கூடும்.

காட்சியை நீக்க மறுத்த 'அபோமினபிள்' படக்குழு

கடந்த வாரம் இந்தப் படத்தை வியட்நாமில் தணிக்கைக்கு உட்படுத்தினர். அப்போது படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டது. இதேபோல் ஃபிலிப்பின்ஸ் வெளியுறவு அமைச்சர் அந்தக் குறிப்பிட்ட காட்சியை சுட்டிக்காட்டி, அதை நீக்க வேண்டும் என திட்டவட்டமாக அறிவித்தார்.

ஆனால் 'அபோமினபிள்' படக்குழுவினர் இதை ஏற்கவில்லை. எனவே அந்நாட்டில் படத்தை வெளியிட இயலவில்லை. இதையடுத்து தற்போது மலேசிய தணிக்கைத் துறையும் அந்தக் காட்சியை நீக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

"அனிமேஷன் படைப்பான 'அபோமினபிள்' படத்தை மலேசியாவில் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் தணிக்கைத் துறை குறிப்பிட்டுள்ள வரைபடக் காட்சியை நீக்க வேண்டும்," என தணிக்கைத் துறைத் தலைவர் முகமட் ஸாம்பரி அப்துல் அசிஸ் திட்டவட்டமாக வலியுறுத்தினார்.

சீனா வரைபடத்தை நீக்க மறுப்பு: 'அபோமினபிள்' படத்துக்கு மலேசியாவில் தடை

பட மூலாதாரம், Dream Works

ஆனால் ஃபிலிப்பின்ஸ் தணிக்கைத் துறைக்கு தெரிவித்த பதிலையே மலேசியத் தரப்புக்கும் தெரிவித்துள்ளது 'அபோமினபிள்' படக்குழு.

"மலேசியத் தணிக்கைத் துறை கேட்டுக் கொண்டபடி, குறிப்பிட்ட காட்சியை படத்தில் இருந்து நீக்க இயலாது. எனவே இப்படத்தை மலேசியாவில் வெளியிட இயலவில்லை," என படத்தின் விநியோகஸ்தரான யுனைட்டட் இண்டர்நேஷனல் பிக்சர்ஸ் நிறுவனம் ராய்ட்டர் செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளது.

தென்சீனக் கடலுக்காக சீனாவுக்கு எதிராக வரிந்து கட்டும் நாடுகள்

சில நொடிகள் இடம்பெறும் காட்சியை நீக்க மறுத்ததற்காக பல கோடி செலவில் உருவாக்கப்பட்ட படத்துக்கு தடைவிதிப்பது சிலருக்கு ஆச்சரியம் அளிக்கிறது எனில், அவர்களுக்கு கீழ்காணும் தகவல்கள் தெளிவைத் தரக்கூடும்.

தென்சீனக் கடற்பகுதி அரிய கடல்வளங்கள் கொழிக்கும் பகுதி. எனவேதான் அதனை தன்வசமாக்கிக் கொள்ள சீனா முயற்சிப்பதாக மற்ற தரப்புக்கள் சாடுகின்றன.

உலக வரைபடத்தில் திடீரென ஒன்பது கோடுகளை இடம்பெறச் செய்து, அதன் மூலம் தென் சீனக் கடற்பகுதியை தனது கண்காணிப்பு, கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் சீனாவின் நடவடிக்கை தன்னிச்சையானது என சிறிய நாடுகளான மலேசியா, வியட்நாம், ஃபிலிப்பைன்ஸ் ஆகியவை எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்தக் கடற்பகுதி வழியாக ஆண்டுதோறும் சுமார் 3.4 டிரில்லியன் மதிப்புள்ள பொருட்கள் பூகோள உருண்டையின் பல்வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. எனவே தான் இப்பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதன் மூலம், உலகப் பொருளாதாரத்தின் அசைக்க முடியாத சக்தியாக தன்னை நிறுவிக்கொள்ள சீனா திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது என மலேசிய ஊடகச் செய்தி ஒன்று தெரிவிக்கிறது.

இந்நிலையில், தென்சீனக் கடற்பகுதியில் நிலவும் சர்ச்சை தொடர்பில் மலேசியா அண்மைக் காலமாக அதிகம் பேசாமல் அடக்கி வாசிக்கிறது. மலேசியாவின் கட்டமைப்புத் திட்டங்களில் சீனா பல பில்லியன் டாலர்களை முதலீடு செய்ததும், விரைவில் செய்யப் போவதும்தான் இதற்குக் காரணம் என அந்த ஊடகச் செய்தி மேலும் தெரிவிக்கிறது.

இதனிடையே, தென்சீனக் கடற்பகுதி தொடர்பான பிரச்சினை எப்போது வேண்டுமானாலும் வெடிக்கக்கூடும் என்பதால், மலேசியா தனது கடற்படைத் திறனை அதிகரிக்க வேண்டியுள்ளதாக அதன் வெளியுறவு அமைச்சர் சைஃபுதின் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் சீனாவின் பெரும் முதலீடுகளையும் மீறி, அந்தக் கடற்பகுதி மீதான தனது பிடியை தளர்த்த மலேசியா விரும்பவில்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :