சிரியா - துருக்கி எங்கள் எல்லையல்ல; குர்துக்கள் தேவதூதர்களும் அல்லர்: டிரம்ப்

பட மூலாதாரம், Tasos Katopodis/Getty Images
சிரியாவில் துருக்கி ஊடுருவியிருப்பது எமது எல்லைக்கு உட்பட்டதல்ல என்று கூறியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், குர்துக்கள் ஒன்றும் தேவ தூதர்களும் அல்ல என்றும் கூறியுள்ளார்.
அத்துடன் அந்தப் பிரச்சனையில் அமெரிக்கர்கள் உயிர்களை இழக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
துருக்கி தாக்குதல் தொடங்கும் முன்புவரை ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் அமெரிக்காவின் கூட்டாளிகளாக செயல்பட்டுவந்தவர்கள்தான் அந்நாட்டின் குர்துக்கள்.
குர்து ஆயுதக் குழுவான சிரியா ஜனநாயகப் படை அமெரிக்காவின் கூட்டாளியாக செயல்பட்டது.
ஆனால், குர்துகளுக்கு எதிராக சிரியா மீது துருக்கி போர் தொடுக்கத் தொடங்கிய நிலையில் அமெரிக்கா தனது படைகளை சிரியாவின் எல்லைப் புறத்தில் இருந்து விலக்கிக்கொண்டது.
இதற்காக அமெரிக்கா கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைதான், எல்லை தாண்டி தாக்குதல் நடத்த துருக்கிக்கு ஏதுவாக அமைந்துவிட்டது என்றும் கூறப்படுகிறது.
"அமெரிக்காவின் வெள்ளை மாளிகை ஒன்றும் போலீஸ்காரர் அல்ல" என்று டிரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். "அமெரிக்க படையினர் தாயகம் திரும்ப வேண்டிய நேரமிது" என்றும் அவர் கூறினார்.
சிரியாவில் அமெரிக்க துருப்புக்களை விலக்கிக்கொண்ட டிரம்பின் முடிவை கண்டித்து, ஜனநாயக கட்சி மற்றும் டிரம்பின் குடியரசு கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரு மனதாக வாக்களித்திருந்தனர்.
சிரியாவின் வடக்குப் பகுதியில் செல்வாக்கு செலுத்தி வந்த குர்து ஆயுதக் குழுவான சிரியா ஜனநாயகப் படையை அழித்து அந்தப் பகுதியில் ஒரு பாதுகாப்பு பகுதியை உண்டாக்கும் நோக்கத்துடன் துருக்கி இந்த தாக்குதலைத் தொடுக்கிறது. ஐ.எஸ். படையினரை அழிக்கும் போரில் குர்து படையினர் உதவியைப்பெற்று வந்த அமெரிக்கா இந்த தாக்குதலுக்கு முன்னதாக தமது படையை பின்வாங்கியது.
துருக்கி - சிரியா எல்லைப்புறத்தில் நிலவிய நிலைமை தங்களுக்கு மிக முக்கியமானது என்று தாம் பார்த்ததாக கூறிய டிரம்ப்
ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான போரில் குர்துக்களின் சிரியா ஜனநாயகப் படை தங்களோடு சேர்ந்து சிறப்பாகப் போரிட்டார்கள். அதற்காக அவர்களுக்கு நிறைய பணம் கொடுத்திருக்கிறோம். "நம்மோடு சேர்ந்து போரிட்டபோது அவர்கல் சிறப்பாக போரிட்டார்கள். தனியாகப் போராடும்போது அவ்வளவு சிறப்பாகப் போரிடவில்லை" என்று கூறினார் டிரம்ப்.
அத்துடன், "துருக்கியில் குர்து தன்னாட்சிக்காக போராடிவரும் குர்துஸ்தான் தொழிலாளர் கட்சி (பிகேகே) பயங்கரவாதத்தில் ஐ.எஸ். அமைப்பை விடவும் மோசமானது" என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
போர் வேண்டாம் என்பதற்காக தாம் துருக்கி அதிபர் எர்துவானுக்கு தாம் அழுத்தம் தந்ததாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
இதனிடையே சிரியாவின் வடக்குப் பகுதியில் துருக்கி தொடர்ந்து ராணுவ தாக்குதல் நடத்தி வரும் நிலையில், துருக்கிக்கும், சிரியாவுக்கும் இடையில் மோதல்கள் நடப்பதை தடுக்கப் போவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
பஷார் அல்-அசாத் தலைமையிலான அரசுக்கு ராணுவக் கூட்டாளியாகவும், ஆதரவாளராகவும் இருந்துவந்த ரஷ்யா இந்த தருணத்தில் சண்டையைத் தடுக்கப்போவதாக கருத்துத் தெரிவித்துள்ளது முக்கியமான அரசியல் திருப்பமாகும்.
முந்தைய ஒப்பந்தங்களின்படி, துருக்கி, சிரியாவுக்குள் 5 முதல் 10 கிலோமீட்டர் தொலைவுதான் செல்லலாம். ஆனால், துருக்கி தற்போது சுமார் 30 கிலோமீட்டர் பகுதியில் பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்குவதாக கூறுகிறது. சிரியாவில் நிரந்தரமாக படைகளை நிறுத்த துருக்கிக்கு உரிமையில்லை. சண்டையை தவிர்க்க துருக்கியோடு சிரியா தொடர்பில் இருப்பதாக சிரியாவுக்கான ரஷ்யாவின் சிறப்பு தூதர் அலெக்ஸாண்டர் லாவ்ரென்ட்யேஃப் கூறினார்.
முன்னதாக, வடக்கு சிரியாவில் துருக்கி மேற்கொள்ளும் ராணுவ நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், துருக்கியின் இரண்டு அமைச்சகங்களுக்கும், மூன்று மூத்த அரசு அதிகாரிகளுக்கும் அமெரிக்கா தடைவிதித்துள்ளது.

அன்பு மகளை கருணைக் கொலை செய்ய கோரும் பெற்றோர் - ஏன் இந்த துயரம்?

ஹைபோக்ளைசிமிக் எனப்படும் ரத்தத்தில் மிக குறைந்த அளவு சக்கரை இருக்கும் நிலையால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு மருத்துவ சிகிச்சை கொடுக்க பணம் இல்லாததால் கருணைக் கொலை செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர் ஆந்திரபிரதேசத்தில் உள்ள சித்தூரை சேர்ந்த பெற்றோர்.
"அந்த குழந்தைக்கு ஊசி போட்டால் அழுகையை நிறுத்திவிடும். ஆனால் இம்மாதிரியாக ஒருநாளைக்கு 6 லிருந்து 7 ஊசிகள் போட வேண்டும். இரவு 12 மணிக்கு அந்த இன்சுலின் ஊசி போட்டால், அவள் எறும்பு கடித்தது போன்று அசைவால் அவ்வளவுதான்" என்று மிகுந்த துயரத்துடன் சொல்கிறார் அந்த குழந்தையின் தாத்தா பதான் ஆயூப் கான்.
செய்தியை வாசிக்க: அன்பு மகளை கருணைக் கொலை செய்ய கோரும் பெற்றோர் – ஏன் இந்த துயரம்?

அயோத்தி: ராமர் பிறந்த இடமா? பாபர் கட்டிய மசூதியா? உச்ச நீதிமன்றத்தில் நடந்த பரபரப்பு வாதங்கள்

பட மூலாதாரம், Getty Images
அடுத்த 30 நாட்களில், ஒரு முக்கிய மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாக இருக்கும் என்று கருதப்படும் அயோத்தி வழக்கின் தீர்ப்பு வரவிருக்கிறது. ராமர் கோயில் மற்றும் பாபர் மசூதி விவகாரம் தொடர்பாக அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த வழக்கின் மேல் முறையீட்டு மனுக்களின் விசாரணை இன்று (புதன்கிழமை) முடிவடைந்தது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு, 40 நாட்கள் விசாரணைக்கு பிறகு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
செய்தியை வாசிக்க: ராமர் பிறந்த இடமா? பாபர் கட்டிய மசூதியா? உச்ச நீதிமன்றத்தில் நடந்த பரபரப்பு வாதங்கள்

வெள்ளை குதிரையில் மலையேறிய கிம் ஜாங்-உன்: முக்கிய அறிவிப்பு வெளியாகிறதா?

பட மூலாதாரம், AFP
வட கொரியாவின் மிக உயரமான மலையை குதிரையில் சவாரி செய்து ஏறியிருக்கிறார் அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங்-உன்.
பனி போர்த்திய பேக்டு மலையில், வெள்ளைக் குதிரையில் அவர் சவாரி செய்வது போன்ற புகைப்படங்களை அந்நாட்டு அரசு ஊடகம் கேசிஎன்ஏ வெளியிட்டுள்ளது.
2,750 மீட்டர் உயரம் கொண்ட பேக்டு மலையை இவர் ஏறுவது இது முதல் முறையல்ல. இதுபோன்று அவர் ஏதேனும் செய்தால், ஏதோ பெரிய அறிவிப்பு வரப் போகிறது என்று அர்த்தம் என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த மலை அந்நாட்டில் ஒரு சிறப்பான அடையாளத்தை பெற்றுள்ளது. அது மட்டுமல்லாமல், கிம் ஜாங்-உன்னின் தந்தை பிறந்த இடமும் அதுதான்.
செய்தியை வாசிக்க: வெள்ளை குதிரையில் மலையேறிய கிம் ஜாங்-உன்

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் முதல் இந்திய வம்சாவளி தமிழர்

இலங்கை அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக இந்திய வம்சாவளித் தமிழர் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றார்.
இலங்கையில் பௌத்த மதத்தை பின்பற்றுவோரை தவிர்ந்த ஏனையோர் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்க முடியாது என மக்கள் மத்தியில் நிலவிய கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் இந்திய வம்சாவளித் தமிழரின் பிரவேசம் அமைந்துள்ளது.
இலங்கை ஜனாதிபதித் தேர்தல் களத்தில் இரண்டு தமிழர்கள் களமிறங்கியுள்ள போதிலும், இந்திய வம்சாவளித் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி முதல் தடவையாக களமிறங்கியுள்ளார் சுப்ரமணியம் குணரத்னம்.
செய்தியை வாசிக்க: இலங்கை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் முதல் இந்திய வம்சாவளி தமிழர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












