தீவிரவாதிகளின் பிடியில் குண்டு தயாரித்த பாதிரியார்

தீவிரவாதிகளுக்காக குண்டு தயாரித்த பாதிரியார்

பட மூலாதாரம், Alamy

    • எழுதியவர், ஜோஸ்பின் காசர்லி மற்றும் ஹோவர்ட் ஜான்சன்
    • பதவி, பிபிசி நியூஸ், மராவி

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கில் உள்ள மராவி நகரை 2017ஆம் ஆண்டில் ஐந்து மாதங்கள் இஸ்லாமிய தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அவர்கள் பிடித்து வைத்திருந்த கைதிகளில் ஒருவர் கத்தோலிக்க பங்குத் தந்தை சிட்டோ. கொடுமைப்படுத்துவதாக மிரட்டி அவரை வெடிகுண்டுகள் செய்ய கட்டாயப் படுத்தினர். அந்த அனுபவம் அவருக்கு ஆழ்ந்த அதிர்ச்சியை அளித்தது. ஆனால் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் அமைதியாக வாழ்வார்கள் என்று தொடர்ந்து நம்புகிறார்.

பட்டோ மசூதியில் இரவு உணவுக்கான நேரம் அது. கீழ்த்தளத்தில் நீளமான மேசையை சுற்றி 20 பேர் சாப்பிடுவதற்குத் தயாராக இருந்தனர். மேசையின் ஒருபுறம் 15 ஜிகாதிகள். மறுபுறம் கத்தோலிக்கப் பாதிரியார் சிட்டோவும், சில கிறிஸ்தவர்களும் இருந்தனர்.

திடீரென துப்பாக்கி சத்தம் கேட்டது. அவர்கள் செயலில் இறங்கினார்கள். தன் காலடியில் கிடந்த ஏ.கே. 47 துப்பாக்கியை தந்தை சிட்டோ எடுத்து, மேசைக்கு அந்தப் பக்கம் இருந்த ஜிகாதிகளில் ஒருவரிடம் வீசினார். அவர் அதைப் பிடித்துக் கொண்டு, பதுங்கியவாறு மசூதியின் நுழைவாயிலுக்குச் செல்ல தயாரானார்.

சில நிமிடங்களில், துப்பாக்கி சத்தம் தொலைவில் கேட்டது. அதன் பிறகு அவர்கள் மேசையை சுற்றி திரும்பி வந்து சேர்ந்தனர்.

அது வழக்கமான நிகழ்வாகிவிட்டது. பங்குத் தந்தை சிட்டோ இரண்டு மாதங்களுக்கு மேலாக பிணைக் கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்தார். தன்னை பிடித்து வைத்திருந்தவர்களை தனக்குப் பிடிக்கும் என்று அவர் கூறவில்லை. ஆனால் அவர்களுடன் ``மானிட அளவில் நெருக்கம்'' இருந்தது என்று குறிப்பிடுகிறார்.

மசூதி

பட மூலாதாரம், Getty Images

அவர்கள் சிறிய எண்ணிக்கையில் இருந்தனர், ஒன்றாக சாப்பிட்டு, ஒன்றாக வேலை பார்த்தனர். பிலிப்பைன்ஸ் ராணுவத்துடன் ஏற்பட்ட சண்டையில் ஜிகாதி ஒருவர் இறந்துவிட்டார் என்று கேள்விப்பட்டால் அவர் துயரம் கொள்வார்.

மராவி நகரை 2017 மே 23 ஆம் தேதி ஐ.எஸ். ஆதரவு தீவிரவாதிகள் முற்றுகையிட்டபோது பங்குத் தந்தை சிட்டோ பிணைக் கைதியாக பிடிக்கப்பட்டார்.

அதற்கு முன்பு மராவி நகரம் அழகான நகரமாக இருந்தது. உயரமான, நெருக்கமான வீடுகள் மற்றும் அலங்கரிக்கப்பட்ட மசூதிகளும் நிறைந்ததாக இருந்தது. பிலிப்பைன்ஸின் தெற்கில் மின்டனாவ் நகரில் உள்ள, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளதாக அந்த நகரம் இருந்தது. கத்தோலிக்க நாட்டில் இந்த நகரில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.

மத்திய கிழக்கு மற்றும் மலாயில் இருந்தும் இந்தோனேசிய தீவுகளில் இருந்தும் 13வது நூற்றாண்டில் வந்த வணிகர்கள் மூலமாக பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதிக்கு இஸ்லாம் மதம் பரவியது. மிஷனரிகள் வந்தனர். மசூதிகள் தோன்றின. மதம் மாறியவர்கள் மோரோ மக்கள் என அழைக்கப் பட்டனர்.

கை குழந்தையோடு பெண்ணொருவர்

பட மூலாதாரம், Getty Images

16வது நூற்றாண்டில் பிலிப்பைன்ஸில் ஸ்பெயின் காலனி ஆதிக்கம் ஏற்பட்டபோது, கத்தோலிக்க மதம் பரவியது அப்போது நாட்டின் தெற்குப் பகுதியில் மோரோ மக்களை அவர்களால் வெல்ல முடியாமல் போனது.

அப்போதிருந்து தென் பகுதியில் உள்ள முஸ்லிம்கள் பலர், தாங்கள் புறக்கணிக்கப் படுவதாகக் கருதி வந்தனர். நாட்டில் ஏழ்மையான பகுதிகளில் ஒன்றாக அந்தப் பகுதி இருக்கிறது. அந்தப் பகுதிக்கு தன்னாட்சி வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.

பிலிப்பைன்ஸின் தலைநகரான மணிலாவில் இருக்கும் கத்தோலிக்க அதிகார மையத்தில் இருந்து தங்களுக்கு விடுதலை வேண்டும் என அந்தப் பகுதியினர் கோரி வருகின்றனர்.

பங்குத் தந்தை சிட்டோ 23 ஆண்டுகளுக்கு முன்பு மராவிக்கு அனுப்பப்பட்ட போது, கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையில் மதங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளை உருவாக்க வேண்டும் என்பது தான் நோக்கமாக இருந்தது. நகரில் உள்ள பெரும்பான்மையான மக்கள் அவரையும், அவருடைய சகாக்களையும் வரவேற்றனர். ஆனால், முற்றுகைக்கு முந்தைய மாதங்களில், அவர் அசௌகரியமாக உணரத் தொடங்கினார்.

2016 தொடக்கத்தில், மாவுட் பழங்குடியினரில் இரண்டு சகோதரர்கள் மத்திய கிழக்கில் படித்துவிட்டு, மராவியின் தெற்கில் உள்ள புட்டிக் என்ற தங்கள் நகருக்குத் திரும்பினர். இஸ்லாமில் தீவிரவாத கருத்துகளை அவர்கள் போதிக்கத் தொடங்கினர். சுமார் 200 பேரை திரட்டினர். அந்தப் பகுதியில் அரசுப் படைகளை அவர்கள் தாக்கினர்.

2017 ஆம் ஆண்டில் தாக்குதல்கள் மராவி நகரை நோக்கி நடத்தப்பட்டன. இந்தோனீசியா மற்றும் மலேசியாவில் இருந்து வந்த தீவிரவாதிகளால், அவர்களுடைய எண்ணிக்கை அதிகமானது. மே மாத கடைசியில் அபு சய்யால் அல்லது ``வாள் ஏந்தும் அமைப்பு'' என்ற ஐ.எஸ். ஆதரவு அமைப்பு நகரில் தலைகாட்டத் தொடங்கியது.

மராவி நகரை முற்றுகையிட களம் தயாராகிவிட்டது.

மசூதி

பட மூலாதாரம், Getty Images

அன்று மதியத்தில், சிறு தூக்கத்தில் இருந்த பங்குத் தந்தை சிட்டோ துப்பாக்கி சண்டையின் சப்தம் கேட்டு எழுந்தார். அவருடைய டாப்லெட் கணினி, கம்ப்யூட்டர், செல்போன் என எல்லாமே ஒலித்தன. எல்லாவற்றிலும் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சகோதரர்கள் ஒரே மாதிரி தகவல்களை அனுப்பியிருந்தனர். அவை எல்லாமே ``மராவியை விட்டு வெளியேறி விடுங்கள்'' என்பதாக இருந்தன.

அதற்குப் பதிலாக அவர் பிரார்த்தனை செய்தார். ``எல்லாவற்றையும் கடவுளின் கைகளில் ஒப்படைத்திருக்கிறேன். நான் வெளியேற மாட்டேன் என முடிவு செய்தேன்'' என்று அவர் கூறுகிறார்.

மாலை 5.30 மணிக்கு, நகரம் அமைதியாகிவிட்டது. தெருக்கள் காலியாகிவிட்டன. ஜன்னல்கள் மூடப்பட்டன. விளக்குகள் அணைக்கப்பட்டன. ஐ.எஸ். அமைப்பின் கருப்புக் கொடியை மருத்துவமனையில் தீவிரவாதிகள் ஏற்றினர். நாளின் முடிவில் காவல் நிலையத்துக்கு தீ வைக்கப்பட்டது.

பின்னர் கதீட்ரலின் வாயிலுக்கு ஜிகாதிகள் வந்தனர். பங்குத் தந்தை சிட்டோ நுழைவாயிலை நெருங்கியபோது, இரண்டு பேர் துப்பாக்கிகளைத் தூக்கினர். அவர்களுக்குப் பின்னால், மேலும் 100 பேர் ஆயுதங்களுடன் நின்றிருந்ததை அவர் பார்த்தார்.

ஐந்து சகாக்களுடன் சேர்த்து ஒரு வேனின் பின்பகுதியில் ஏற்றப்பட்டு, இரவு முழுக்க அப்படியே வைக்கப்பட்டிருந்தனர். தீவிரவாதிகள் தங்கள் விவரிப்பின்படி இஸ்லாத்துக்கு விளக்கம் தந்தனர்.

``அந்த மாலைப் பொழுது முழுக்க அவர்கள் எங்களுக்கு போதனை செய்தார்கள்: ``மராவியை தூய்மைப் படுத்துவதற்காக நாங்கள் இங்கே வந்திருக்கிறோம். இது இஸ்லாமிய நகரம் எனப்படுகிறது. ஆனால் இங்கே போதைப் பொருட்கள் உள்ளன, ஊழல் உள்ளது, மதுவும் இசையும் உள்ளன. கலிஃபா அரசை ஏற்படுத்த நாங்கள் இங்கே வந்திருக்கிறோம்'' என்று கூறினார்கள்.

ஆனால் ஐ.எஸ். ஆதரவாளர்களால் நிர்வகிக்கப் படுவதை விரும்பாத ஆயிரக்கணக்கான பொது மக்கள் அந்த நகரில் சிக்கியிருந்தனர். முற்றுகையின் ஆரம்பகட்டத்தில், குழப்பங்கள் இருந்தன. மக்கள் தங்கள் வீடுகளில் முடங்கிக் கிடந்தனர், எப்படியாவது தப்பிவிட வேண்டும் என்று விரும்பினர். ஆனால் சண்டையின் நடுவே சிக்கிக் கொள்ள நேரிடுமோ என்று பயந்தனர்.

தொங் பகாசும்

டோங் பசக்கும் என்பவர் அப்போது டவுன் ஹாலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். வெள்ளம் மற்றும் இயற்கைப் பேரிடர் சமயங்களில் உதவிகளைச் செய்ய வேண்டியது அவருடைய பணி. எனவே மோதல் தொடங்கிய போது, அவருடைய தொலைபேசியில் அழைப்புகள் வரத் தொடங்கின.

``மீட்புப் பணிக்காக முதலில் எங்களுக்கு தொலைபேசி அழைப்புகள் வந்தபோது, நுழைவாயிலைத் தாண்டி வெளியே செல்வது பற்றி ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்தேன். ஏனெனில் வெளியில் போனால், திரும்பி வருவது நிச்சயம் இல்லை என்று நான் அறிந்திருந்தேன்'' என்கிறார் அவர். ``ஆனால் சூழ்நிலையின் தாக்கம் அதிகமாக இருந்தது. எனவே உங்கள் உயிருக்கு ஆபத்து என்றாலும், வெளியில் செல்வதைத் தவிர வேறு வழியில்லை'' என்றும் குறிப்பிட்டார்.

மராவியின் முஸ்லிம் சமுதாயத்தவர்களில் இருந்து தன்னார்வலர்கள் குழு ஒன்றை டோங் உருவாக்கினார். மோதல் நடந்து கொண்டிருந்த பகுதியில் மரணத்தை எதிர்த்து நின்று மீட்பு நடவடிக்கைக்கு அவர்கள் வெளியில் சென்றனர். அவர்களுடைய வாகனம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இடிந்த மற்றும் எரிந்து கொண்டிருந்த கட்டடங்களைக் கடந்த போது அவர்கள் காயமடைந்தனர். தாங்கள் எந்தத் தரப்பையும் சாராதவர்கள் என்பதை அடையாளப் படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது என்று டோங் முடிவு செய்தார். கட்டுமானப் பணியிடங்களில் பயன்படுத்தும் வெள்ளை ஹெல்மட்கள் தனது அலுவலகத்தில் இருப்பது அவருக்கு நினைவுக்கு வந்தது. மேசை விரிப்பு வெள்ளைத் துணியை எடுத்து கைகளில் கட்டும் வகையில் வெட்டினார். அந்தக் குழுவினரை ``தற்கொலைக் குழு'' என்று உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டன.

ஆனால் பங்குத் தந்தை சிட்டோவும், வேறு 100 பிணைக் கைதிகளும் இந்த `தற்கொலைப் படையினர்' எட்டும் தொலைவுக்குள் இல்லை. தீவிரவாதிகளின் கட்டளை மையமாக இருந்த பட்டோ மசூதியின் கீழ் தளத்தில் அவர்கள் வைக்கப் பட்டிருந்தனர்.

ஒத்துழைக்காவிட்டால் அவர்கள் மீது ``ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று எச்சரிக்கப் பட்டிருந்தனர். துன்புறுத்தல் என்பதைத் தான் இப்படி குறிப்பிடுகிறார்கள் என்பது சிட்டோவுக்கு தெரியும். அது தனது மன கட்டுப்பாட்டை இழக்கச் செய்யும் என்றும்தெரியும். எனவே தீவிரவாதிகளுக்கு அவர் பணிவிடைகள் செய்தார். சமைப்பது, சுத்தம் செய்வது, கனத்த இயதத்துடன் - வெடிகுண்டுகள் தயாரிப்பதையும் செய்தார்.

நகர்ப்புற கொரில்லா நுணுக்கமாக - கட்டடங்களுக்கு இடையே ``எலிகளைப் போல ஓடுவதற்காக'' சுவர்களில் துளையிட்டு வைத்திருந்ததால் - தீவிரவாதிகள் பிடிபடாமல் தப்ப முடிந்தது. ஆனால் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய புலனாய்வுத் துறையினரின் உதவியுடன் பிலிப்பைன்ஸ் ராணுவம் இடைவிடாமல் குண்டு மழை பொழிந்தது.

விமானத் தாக்குதல்களின் போக்கு பங்குத் தந்தை சிட்டோவுக்கு பழக்கமாகிவிட்டது. ஒவ்வொரு முறையும் இரண்டு விமானங்கள் வரும், ஒவ்வொன்றும் நான்கு குண்டுகளைக் கொண்டு வரும். ஒவ்வொரு குண்டுவெடிப்பும், முந்தைய இடத்தை விட நெருக்கமான தொலைவில் கேட்கும்.

உடைந்த கண்ணாடியில் தெரியும் நகரம்

பட மூலாதாரம், Getty Images

நான்கு மாத காலம் பிடிபட்டிருந்தபோது 100க்கும் மேற்பட்ட விமானத் தாக்குதல்களை அவர் பார்த்திருக்கிறார். தாம் தாக்கப்பட வேண்டும் என்று சில முறையும், தாக்கப்படக் கூடாது என சில முறையும் விரும்பியிருக்கிறார். ``அடுத்த குண்டு என் மீது விழ வேண்டும் என்று கடவுளிடம் நான் பிரார்த்தனை செய்தேன்'' என்று அவர் கூறுகிறார். ஆனால், உடனே மனதை மாற்றிக் கொண்டதாகவும் குறிப்பிட்டார். ``வேண்டாம் கடவுளே, அது என்னைத் தாக்க வேண்டாம். அது என்னைத் தாக்க வேண்டும் என நான் விரும்பவில்லை என பிரார்த்தனை செய்வேன்'' என்றும் தெரிவித்தார்.

``எப்படி பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பது கூட எனக்குத் தெரியாத தருணங்களாக அவை இருந்தன'' என்று அவர் கூறினார். ``நான் பாவம் செய்திருந்து, என்னை நீ தண்டிப்பதாக இருந்தால், இது ரொம்பவம் அதிகமான தண்டனை, பாவத்துக்கு ஈடானதாக இல்லை என்று கடவுளிடம் புகார் கூறுவேன்.'' கடவுள் மீது குற்றஞ்சாட்டும் அளவுக்கு கடவுள் மீதான எனது நம்பிக்கை மாறிவிட்டது என்று அவர் தெரிவித்தார்.

செப்டம்பர் 16 ஆம் தேதி பிலிப்பைன்ஸ் ராணுவம் அந்த மசூதிக்கு மிகவும் நெருக்கத்தில் வந்துவிட்டது. அவர்களுடைய கட்டளைகள் பங்குத் தந்தை சிட்டோவின் காதுகளில் விழுந்தன. இருள் சூழ்ந்ததும், மசூதியின் பின்பக்க வழியாக தப்பி ஓடிவிடுவதற்கு இதுதான் சரியான நேரம் என்று அவரும், மற்ற பிணைக் கைதிகளில் ஒருவரும் முடிவு செய்தனர். இரண்டு தெருக்கள் தள்ளி, துப்பாக்கி ஏந்திய சில ஆண்கள் அவர்களை வரவேற்று, பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்றனர்.

நாட்டின் மிக நீண்ட முற்றுகை முடிவுக்கு வந்துவிட்டது என்று ஒரு மாதம் கழித்து, பிலிப்பைன்ஸ் பாதுகாப்புத் துறை செயலாளர் அறிவித்தார். மாவுட் சகோதரர்கள், உமர் மற்றும் அப்துல்லா ஆகியோரும், சய்யால் தலைவர் இஸ்னிலான் ஹாப்பிலானும் கொல்லப்பட்டு விட்டனர். மற்ற தீவிரவாதிகள் முறியடிக்கப்பட்டனர்.

ஐந்து மாத கால முற்றுகையின் போது 1000க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

போர் அச்சத்தின் பிடியில் பிலிப்பைன்ஸின் மராவி நகருக்குள்

பாதிரியார்

இரண்டு ஆண்டுகள் கழித்து, அந்த நகரம் இன்னும் இடிபாடுகளாகக் கிடக்கிறது. மறுகட்டுமானம் மிகவும் மெதுவாக நடைபெறுகிறது. 100,000 பேர் இன்னும் இடம் பெயர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் முகாம்களில் அல்லது உறவினர்களுடன் வாழ்ந்து வருகிறார்கள்.

நகரின் மையத்தில் ஒரு சதுர மைல் பரப்புப் பகுதி - கிரவுண்ட் ஜீரோ - அல்லது மிகவும் பாதிக்கப்பட்ட பகுதி என்று குறிப்பிடப்படுகிறது. ரக்கா, அலெப்போ அல்லது மொசூல் நகரங்களைப் போன்ற அளவுக்கு இங்கும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஒவ்வொரு கட்டடமும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. பல கட்டடங்கள் மிக மோசமாக சாய்ந்த நிலையில் உள்ளன அல்லது முழுமையாக சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளன. பங்குத் தந்தை சிட்டோ கைது செய்யப்பட்ட கத்தீட்ரலை நோக்கி அவருடன் நாங்கள் வாகனத்தில் சென்றோம்.

நாங்கள் சென்றபோது ஆர்வமாக அவரை ஜன்னலைக் காட்டினார். ``அதுதான் எங்கள் தேவாலயம்'' என்று கூச்சல் போட்டார். ஆனால், நாங்கள் உள்ளே நுழைந்தபோது மனநிலை மாறிவிட்டது. கத்தீட்ரல் நாசமாக்கப் பட்டிருந்தது.

சுவரெங்கும் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்திருந்தன. டைல்ஸ் தரைகள் விரிசல் விழுந்திருந்தன. கூரைப் பகுதிகள் வெடித்துச் சிதறியிருந்தன. உலோக பிரேம்கள் மட்டுமே, காற்றில் ஊசலாடிக் கொண்டிருந்தன. அந்தத் தேவாலயத்தை இடிக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. எனவே அதை அவர் பார்த்தது அதுதான் கடைசி முறை.

வழிபாட்டு மேடையை நெருங்கியபோது ஏசுவின் சிலையை கவனித்தேன். அவருடைய வயிற்றில் துப்பாக்கிக் குண்டின் துளை இருந்தது. கைகள் வெட்டப்பட்டிருந்தன. சிறகுகள் கொண்ட கிரீடம் அவருடைய தலையில் இருந்தது. நாங்கள் பிரார்த்தனை செய்ய பங்குத் தந்தை சிட்டோ ஒரு நிமிடம் அவகாசம் அளித்தார். கன்னிமேரி உருவத்தின் எதிரே அமைதியாக கைகளைக் கோர்த்து நின்ற அவர், மேலே ஒட்டியிருந்த படலத்தை எடுத்துவிட்டு அழுதார்.

முற்றுகையின் போது வீடிழந்தவர்களில் டோங்கும் ஒருவர். இப்போது அவருக்கு நகர்த்திக் கொள்ளும் வீடு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் அதில் வாழாமல், உறவினர்களுடன் தங்கியிருக்கிறார். தாம் புதிதாக உருவாக்கியுள்ள `துரித மீட்பு நெட்வொர்க்' என்ற அமைப்பின் முகாமாக அதைப் பயன்படுத்தி வருகிறார்.

2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் மராவி நகரம்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் மராவி நகரம்.

அந்தப் பகுதியில் அடிப்படைவாத இஸ்லாமியர்கள் கால் பதித்துவிடாமல் தடுக்க வேண்டும் என்பது அதனுடைய நோக்கம். அங்கு ஒரு மூலையில் அறிவிப்பு செய்து கொண்டிருக்கும் ஒருவர், அந்தப் பகுதியில் பணியாற்றும் 40 பேரின் வருகையை தினமும் பதிவு செய்கிறார். அடிப்படைவாத செயல்பாடுகள் இருந்தால் ஆரம்ப கட்டத்திலேயே அதிகாரிகளுக்கு அவர்கள் தகவல் தெரிவிக்கிறார்கள். இதுபோன்ற முற்றுகை மீண்டும் நடக்காமல் தடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் அவர்கள் இதைச் செய்கின்றனர்.

மராவி நகரம் ஒரே வம்சாவழியினரைக் கொண்ட நகரம். குடும்ப சச்சரவுகள் சாதாரணமானவை. முந்தைய நாட்களில், குடும்பங்களுக்கு இடையில் உள்ள சச்சரவுகளைப் பயன்படுத்தி தங்களுக்கு ஆட்களை தீவிரவாதிகள் சேர்த்தனர் என்று டோங் கூறுகிறார். இப்போது பக்கத்து வீடுகளில் வசிப்பவர்களுக்கு இடையில் மோதல் தீவிரமாவதற்குள், அவரும், அவருடைய சகாக்களும் தலையிட்டு சமரசம் செய்து வைக்கின்றனர்.

முற்றுகை முடிந்த பிறகு எல்லாம் அமைதியாகிவிட்டது. தீவிரவாத குழுக்களுக்கு கட்டளைகள் வரும் வழிகள் அழிக்கப்பட்டுவிட்டன. அமைதி மற்றும் மறுசீரமைப்பை பெருமளவில் எதிர்பார்க்கும் அளவுக்கு, இந்தப் போரினால் பெரிய பாதிப்புகள் ஏற்பட்டுவிட்டன.

ஆனால் கடந்த சில மாதங்களில், ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகளைப் பார்த்ததாக கவலை தரக் கூடிய சில தகவல்கள் வரத் தொடங்கியுள்ளன. இளம்பெண்களும் அடிப்படைவாத பயிற்சி முகாம்களில் கலந்து கொள்வதாகவும், முற்றுகையின் போது பாதிக்கப்பட்ட குடும்பங்களில் இருந்து ஆட்கள் சேர்க்கப்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன.

``மீண்டும் அணி சேருவதற்கு சிறிய ஒரு குழு முயற்சி செய்கிறது'' என்கிறார் டோங். மராவியில் நடக்கும் நிகழ்வுகள் தான் இதற்கு மூல காரணம். மக்களின் வாழ்க்கை மோசமாகப் பாதிக்கப் பட்டுள்ளது. மறுவாழ்வுப் பணிகளை முடிக்க நீண்ட காலம் ஏற்பட்டால், நிச்சயமாக மக்கள் இதில் சேருமாறு ஈர்க்கப் படுவார்கள்'' என்று அவர் குறிப்பிட்டார்.

பாதிரியாரின் கைகளை முத்தமிடும் மக்கள்

பங்குத் தந்தை சிட்டோ இப்போது மராவியில் வசிக்கவில்லை. அது மிகவும் ஆபத்தானது என்கிறார். ஆனால் பல்கலைக்கழகத்தில், ஜிம்னாசியத்தில் அமைக்கப்படும் தற்காலிக தேவாலயத்தில் பிரார்த்தனைக் கூட்டத்தை நடத்த சில நேரங்களில் அவர் செல்கிறார். கத்தோலிக்கர்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவதற்கும், பாதுகாப்பாக உணர்வதற்கும் அது ஒரு இடம் தான் உள்ளது என்று அவர் கூறுகிறார்.

அவர் இப்போது உள்ளூரில் பிரபலமாக இருக்கிறார். பிரார்த்தனை முடிந்ததும் மாணவர்கள் வரிசையில் காத்திருந்து அவருடன் செல்பி எடுத்துக் கொள்கின்றனர். மிகவும் மோசமான அனுபவங்களுக்கு மத்தியிலும், அவர் உற்சாகமாக, மகிழ்ச்சியாக இருக்கிறார். அது நிலைமையை சரி செய்து கொள்ளும் அணுகுமுறை என்று என்னிடம் அவர் கூறினார்.

``நீங்கள் பலத்த அதிர்ச்சியில் சிக்காமலோ, மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகாமலோ இருப்பதற்கு சமன்பாட்டு நிலையை ஏற்படுத்த நகைச்சுவை உணர்வு தான் சிறந்த வழி'' என்று அவர் குறிப்பிடுகிறார்.

அவர் இன்னும் சிகிச்சையில் இருக்கிறார்.

``ஏற்கெனவே நான் மன ரீதியில் சமன்பாட்டை இழந்துவிட்டேன். மோசமாகப் பாதிக்கப் பட்டிருக்கிறேன். எனவே, நான் மகிழ்ச்சியாக இருந்தாலும், உடல் அளவில் உயிர் பிழைத்து வந்தாலும், எனக்கு மகிழ்ச்சி உணர்வு முழுமையான அளவில் இல்லை. காலம் தான் நம்மை குணமாக்கும். அதற்காக நாங்கள் காத்திருக்கிறோம்.''

ஆனால் மராவியில் மதங்களுக்கு இடையில் அமைதி நிலவும் என்பதில் அவர் திறந்த மனதுடன் இருக்கிறார்.

``போருக்குப் பிறகு, மக்கள் நிறைய பாடங்கள் கற்றுக் கொண்டுள்ளனர். ஏனெனில் வன்முறையின் மூலம் யாருக்கும் வெற்றி கிடைக்கப் போவதில்லை, எல்லோருக்குமே இழப்பு தான் ஏற்படும் என்பதை முஸ்லிம் மக்களும், கிறிஸ்தவ மக்களும் அறிந்து கொண்டுள்ளனர்'' என்று அவர் கூறுகிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: