சீனா-ரஷ்யா கூட்டாக சர்ச்சைக்குரிய பகுதியில் விமான ரோந்து: பதிலடியாக விமானம் அனுப்பிய தென்கொரியா மற்றும் பிற செய்திகள்

விமானம்

பட மூலாதாரம், Getty Images

முதல் முறையாக சீனாவுடன் சேர்ந்து கூட்டாக விமான ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளது ரஷ்யா. இதற்குப் பதிலடியாக தமது ஜெட் விமான அனுப்பியது தென்கொரியா.

ஜப்பான் கடல், கிழக்கு சீனக் கடல் பகுதியில் முன் திட்டமிட்ட பாதையில் சண்டை விமானங்களின் துணையோடு, நான்கு குண்டு வீசும் விமானங்கள் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டதாக ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷ்ய விமானங்கள் எல்லை மீறிப் பறந்தபோது தங்கள் சண்டை விமானங்கள் இயந்திரத் துப்பாக்கியாலும், சுடரொளித் துப்பாக்கியாலும் (flare gun) சுட்டு எச்சரித்ததாகத் தெரிவித்துள்ளது தென் கொரியா.

இந்த சம்பவம் தொடர்பாக ரஷ்யா மற்றும் தென்கொரியா ஆகிய இரு நாடுகளுக்குமே எதிர்ப்புத் தெரிவித்துள்ளது ஜப்பான்.

நடந்ததாக சொல்லப்படும் இந்த அத்துமீறல், சர்ச்சைக்குரிய டோக்டோ/டகேஷிமா தீவுகளுக்கு மேல் நடந்துள்ளது. இந்தத் தீவுகள் தென் கொரிய ஆக்கிரமிப்பில் உள்ளவை. ஆனால், இவற்றுக்கு ஜப்பான் உரிமை கோரிவருகிறது.

கொரிய வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்தில் (காடிஸ்) செவ்வாய்க்கிழமை காலை ரஷ்ய மற்றும் சீன விமானங்கள் நுழைந்ததாகத் தெரிவித்துள்ள தென்கொரியா, வெவ்வேறு ஏ-50 ரக ரஷ்ய விமானங்கள் இரு முறை அந்தத் தீவுகளுக்கு மேல் தங்கள் வான் பரப்பில் அத்துமீறியதாகவும் கூறியுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது.

இந்த மண்டலத்தில் சமீப ஆண்டுகளில் ரஷ்ய, சீன குண்டு வீசும் விமானங்களும், உளவு விமானங்களும் அவ்வப்போது தற்செயலாக நுழைந்துள்ளன. ஆனால், ரஷ்யாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடப்பது இதுவே முதல் முறை.

Presentational grey line

நம்பிக்கை வாக்கெடுப்பில் கர்நாடக அரசு தோல்வி - குமாரசாமி தோல்வி

குமாரசாமி பதவி விலகல்.

பட மூலாதாரம், Twitter/ANI

கர்நாடக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் மாநில அரசு தோல்வியடைந்ததையடுத்து, முதல்வர் குமாரசாமி தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பிறகு மாநில ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்த அவர் தனது பதவி விலகல் கடிதத்தை ஆளுநரிடம் சமர்பித்தார்.

குமாரசாமியின் ராஜிநாமாவை ஏற்றுக்கொண்ட மாநில ஆளுநர் வஜூபாய் வாலா, மாற்று ஏற்பாடுகள் செய்து முடிக்கும்வரை தொடர்ந்து பதவியில் நீடிக்குமாறு முதல்வர் குமாரசாமியை கேட்டுக்கொண்டார்.

Presentational grey line

பிரிட்டனின் புதிய பிரதமராக அறிவிக்கப்பட்டார் போரிஸ் ஜான்சன்

போரிஸ் ஜான்சன்

பட மூலாதாரம், Reuters

பிரிட்டனில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பாக நடந்த போட்டியில் ஜெர்மி ஹண்ட்டை வென்று பிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பிரிட்டன் பிரதமர் தெரீசா மேயின் அமைச்சரவையில் இதுவரை பணியாற்றியது தனக்கு பெருமை என்று கூறியுள்ள போரிஸ் ஜான்சன், கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பாக பிரதமர் பதவிக்காக நடந்த போட்டியில் வென்றது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறினார்.

பிரதமர் பதவிக்கான போட்டியில் ஜெர்மி ஹண்ட் 46, 656 வாக்குகள் பெற்ற நிலையில், போரிஸ் ஜான்சன் 92,153 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில், பிரிட்டன் பிரதமராக போரிஸ் ஜான்சன் அறிவிக்கப்பட்டதற்கு பிரிட்டனின் தற்போதைய பிரதமர் தெரீசா மே தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

போரிஸ் ஜான்சன் குறித்து மேலும் தெரிந்துகொள்ள: யார் இந்த போரிஸ் ஜான்சன்? 10 முக்கிய தகவல்கள்

Presentational grey line

திருநெல்வேலியின் முன்னாள் மேயர் உள்பட மூவர் வெட்டிக் கொலை

உமா மகேஸ்வரி

பட மூலாதாரம், Twitter

திருநெல்வேலியின் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர், வீட்டு பணிப்பெண் ஆகியோர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாநகராட்சியின் முன்னாள் மேயராக இருந்தவர் உமா மகேஸ்வரி. இவரது கணவர் முருக சங்கரன். இவர் நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றி ஓய்வுப் பெற்றவர்.

இவர்களது வீடு நெல்லை ரெட்டியார் பாளையத்தில் அரசு பொறியியல் கல்லூரிக்கு எதிரில் உள்ளது. இந்த நிலையில், இன்று பிற்பகலில் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருக சங்கரன், வீட்டின் பணிப்பெண் மாரி ஆகியோர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டிருக்கின்றனர். உமா மகேஸ்வரியின் மகள் வீடு திரும்பியபோது இந்த விஷயம் தெரியவந்தது.

Presentational grey line

தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம்: வயல்களில் மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு

மின்கோபுரம்

மிழ்நாட்டு விவசாய நிலங்களில் ஏராளமான உயர் அழுத்த மின்கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழக விவசாயிகள் டெல்லியில் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்துகின்றனர்.

போராட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த எஸ்.பலராமன், இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசினார்.

உயர் மின் கோபுரங்கள் எப்போதும்தான் அமைக்கப்படுகின்றன. அவை இப்போது ஏன் பிரச்சனையாகின்றன என்று கேட்டபோது, "முன்பெல்லாம் 1-2 உயர் அழுத்த மின் பாதைகள் இருக்கும். இப்போது, அனல் மின்சாரம், அணு மின்சாரம், சூரிய விசை மின்சாரம், காற்றாலை மின்சாரம் என்று பல மூலங்களில் இருந்து, பல இடங்களில் இருந்து மின்பாதைகள் அமைக்கப்படுகின்றன.

தமிழகத்தில் இதுபோல 132 மின் பாதைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றில் ஏற்கெனவே 32 பாதைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு அவற்றை எதிர்த்துப் போராட்டங்கள் நடக்கின்றன. இத்தனை உயர் அழுத்தப் பாதைகள் வந்தால் ஏராளமான விவசாய நிலங்களை இது ஆக்கிரமித்துப் பாழாக்கும்" என்று கூறினார் பலராமன்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :