737 மேக்ஸ் விமான விபத்து: இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 100 மில்லியன் டாலர் இழப்பீடு மற்றும் பிற செய்திகள்

737 மேக்ஸ் விமான விபத்து

பட மூலாதாரம், MICHAEL TEWELDE

இந்தோனீசியா மற்றும் எத்தியோப்பியா ஆகிய இரு விமான விபத்துகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 100 மில்லியன் டாலர் இழப்பீடு அறிவித்துள்ளது போயிங் விமான நிறுவனம்.

அந்நிறுவனம் தயாரித்த 737 மேக்ஸ் ரக விமானங்கள் அடுத்தடுத்து இரு விபத்துகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 346.

இப்போது அறிவிக்கப்பட்டுள்ள இழப்பீடு உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களின் படிப்பு மற்றும் மற்ற செலவுகளுக்கு அளிக்கப்படும் என்று போயிங் தெரிவித்துள்ளது.

ஆனால், இதனை ஏற்க பாதிக்கப்பட்டவர்கள் மறுத்துள்ளனர்.

இந்த இரு விமான விபத்துகளை தொடர்ந்து 737 மேக்ஸ் ரக விமானங்கள் இயக்குவது உலகம் முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Presentational grey line

சஞ்சய் மஞ்சரேக்கர் மீது விமர்சனம்

ஜடேஜா

பட மூலாதாரம், SAEED KHAN

இந்தியா அணி வீரர் ரவீந்திர ஜடேஜா ட்விட்டரில் சஞ்சய் மஞ்சரேக்கர் மீது கடும் காட்டமான விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.

வர்ணனையாளர் சஞ்சய் மஞ்சரேக்கர் அடிக்கடி இந்திய ரசிகர்களின் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறார். இந்தியா - இங்கிலாந்து மற்றும் இந்தியா - வங்கதேசம் போட்டிக்கு பின் ட்விட்டரில் அவரை கேலி செய்யும் விதமாக ஏராளனமான பதிவுகள் காணப்பட்டன.

இந்நிலையில் ரவீந்திர ஜடேஜா இன்று கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.

''நான் உங்களைவிட இரு மடங்கு போட்டிகள் விளையாடியிருக்கிறேன். இன்னமும் விளையாடிக் கொண்டிருக்கிறேன். சாதித்தவர்களை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். நான் உங்கள் வார்த்தை வயிற்றுப்போக்கை போதுமானளவு கேட்டுவிட்டேன்,'' என ரவீந்திர ஜடேஜா ட்வீட் செய்திருக்கிறார்.

Presentational grey line

'தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகி விட்டேன்'

ராகுல் காந்தி

பட மூலாதாரம், TWITTER / CONGRESS

இந்தியாவின் 17வது மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு உண்டான தோல்விக்குப் பொறுப்பேற்று பதவி விலகிவிட்டதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி இந்தியா முழுவதும் 52 இடங்களில் மட்டுமே வென்றது.

ஒட்டுமொத்த இடங்களில் 10%ஐ விடவும் கூடுதல் இடங்களில் வெல்லவில்லை என்பதால் காங்கிரஸ் கட்சிக்கு மக்களவையில் பிரதான எதிர்க் கட்சி அந்தஸ்தும் கிடைக்கவில்லை.

Presentational grey line

பிரிட்டனில் மறைந்திருக்கும் துபாய் இளவரசி

துபாய் இளவரசி

பட மூலாதாரம், Getty Images

துபாயிலுள்ள தனது கணவரை விட்டு சென்ற இளவரசி ஹயா லண்டனில் தலைமறைவாக வாழ்ந்து வருகிறார்.

துபாயை ஆளும் ஷேக் முகமது அல் மேக்டூமின் மனைவியான இளவரசி ஹயா பின்ட் அல்-ஹூசைன், லண்டனில் தலைமறைவாக வாழ்ந்து வருவதாகவும், தனது கணவரை விட்டு பிரிந்து சென்ற பின்னர் உயிருக்கு பயந்து வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது,

குதிரை பந்தய திடலின் உரிமையாளரும், பில்லினியருமான 69 வயதான ஷேக் முகமது, பெயர் குறிப்பிடாத பெண்ணொருவர் "தேச துரோசம் இழைத்து விட்டதாகவும், காட்டிக் கொடுத்துவிட்டதாகவும்" குற்றஞ்சாட்டி கோபத்துடன் இன்ஸ்டாகிராமில் கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளார்.

ஷேக் முகமது பிரிட்டனிலுள்ள அஸ்கோட்டில் எல்சபெத் அரசியோடு அடிக்கடி உரையாடியிருக்கிறார்.

Presentational grey line

பெண்கள் குறித்த சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கோரினார் தலாய் லாமா

தலாய் லாமா

பட மூலாதாரம், EPA

தன்னுடைய இடத்துக்கு எதிர்காலத்தில் வருகின்ற 'பெண் தலாய் லாமா' பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததற்காக தலாய் லாமா மன்னிப்பு கேட்டுள்ளார்.

பிபிசியிடம் கடந்த மாதம் பேசிய திபெத்திய ஆன்மிக தலைவர் தலாய் லாமா, "எதிர்காலத்தில் வரக்கூடிய பெண் தலாய் லாமா ஈர்ப்பு மிக்கவராக இருக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

ஆனால், தலாய் லாமா நகைச்சுவையாக இவ்வாறு தெரிவித்துள்ளதாக கூறியுள்ள அவரது அலுவலகம், இந்த கருத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளது.

அவர் கூறிய இந்த கருத்து யாரையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக தலாய் லாமா மன்னிப்பு கோருவதாக அவரது அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Presentational grey line

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: