கனடா: சுறா மீன் துடுப்பு வர்த்தகத்துக்கு தடை - அழிவிலிருந்து காக்கும் முயற்சி மற்றும் பிற செய்திகள்

சுறா

பட மூலாதாரம், OCEANA/TERRY GOSS

சுறா மீன் துடுப்புகளின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு கனடா தடை விதித்துள்ளது. இந்த தடையை விதிக்கும் முதல் ஜி20 நாடு கனடா என்ற பெயரையும் அந்நாடு பெறுகிறது.

இது அழிவின் விளிம்பில் இருக்கும் சுறா மீன்களை காக்கும் முயற்சியாக கருதப்படுகிறது.

ஆசிய நாடுகளை தவிர்த்து சுறா துடுப்புகளை மிகப்பெரிய அளவில் இறக்குமதி செய்யும் ஒரு நாடு கனடா. 1994ஆம் ஆண்டிலிருந்து உள்ளூர் மீன் பிடிப்புகளில் சுறா மீன்களின் துடுப்புகளை எடுப்பது சட்டவிரோதமானதாக்கப்பட்டது.

சுறா மீன் துடுப்புகளின் விற்பனை உலகம் முழுவதும் பல சுறா மீன்களின் வகைகள் அழிவதற்கு காரணமாக உள்ளது.

விற்கப்படும் துடுப்புகளில் மூன்றில் ஒரு பங்கு பெரும்பாலும் அழிவின் ஆபத்தில் இருக்கும் சுறா மீன்களின் துடுப்புகளே ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த துடுப்புகள் மனிதநேயமற்ற முறையில் எடுக்கப்படுகிறது என்று விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த துடுப்புகள் ஒரு சுறா மீன் உயிரோடு இருக்கும்போதே அதன் உடம்பில் இருந்து வெட்டி எடுக்கப்படும்.

இம்மாதிரி உயிரோடு இருக்கும்போது எடுக்கப்படும் துடுப்புககளின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி ஆகிய இரண்டுக்கும் கனடாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டம் அமைச்சர்கள், பிரசாரகர்கள் என பலரின் பல வருட முயற்சிக்கு பிறகு கொண்டுவரப்பட்டுள்ளது.

சுறா மீன்களின் துடுப்பு மிக விலை உயர்ந்த கடல் உணவாக கருதப்படுகிறது.

2018ஆம் ஆண்டில் கனடாவில் 148,000கிலோகிராம் சுறா துடுப்புகள் இறக்குமதி செய்யப்பட்டன.

ஒவ்வொரு வருடமும் சுமார் 73 மில்லியன் சுறாக்கள் துடுப்புகளுக்காக கொல்லப்படுவதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

Presentational grey line

வறட்சியின் பிடியில் சென்னை - என்ன சொல்கிறார் 'மழை மனிதன்'?

மழை மனிதன்

சென்னையில் வியாழக்கிழமை பிற்பகலில் திடீரென மழை பெய்த போது, மக்கள் குழந்தைகளைப் போல சிரித்துக் கொண்டு, வீடுகளின் பால்கனியில் இருந்து வெளியே கை நீட்டி மழை நீரைப் பிடித்து, சில துளிகளைப் பருகி மகிழ்ந்தார்கள்.

``ஆமாம், நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். சுமார் 200 நாட்களுக்குப் பிறகு நான் மழையைப் பார்க்கிறேன். இதற்கு முன்பு 2018 டிசம்பர் 5 ஆம் தேதி தான் இப்படி மழை பெய்தது. டிசம்பர் இறுதி வரையில் மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் வடகிழக்குப் பருவமழை பொய்த்துவிட்ட நிலையில், டிசம்பர் 5 ஆம் தேதிக்குப் பிறகு மழை நின்றுவிட்டது. இப்போது மழை பெய்திருப்பது அற்புதமான நிகழ்வு'' என்று பிபிசி இந்தி செய்திப் பிரிவுக்கு அளித்த பேட்டியில் டாக்டர் சேகர் ராகவன் கூறினார்.

மழை பெய்ததால் மகிழ்ச்சி அடைந்த, சென்னையில் உள்ள மழை மையத்தின் நிறுவனர் தனது மதிப்பீடுகளில் மிகவும் தெளிவாக இருக்கிறார்.

``லேசான தூறல் பயன் தராது. நிலமட்டத் தொட்டிகளில் தண்ணீர் சேகரிக்கும் சிலருக்கு மட்டும் அது உதவியாக இருக்கலாம். (மழை பெய்யாததால்) நிலம் மிகவும் வறண்டு கிடப்பதால், இந்தத் தூறல் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்குப் பயன் தருவதாக இருக்காது'' என்று அவர் கூறினார்.

டாக்டர் ராகவன் மழை மனிதர் என்று அழைக்கப்படுகிறார். தென் மாநிலத்தைச் சேர்ந்த இந்த நகரில் உள்ள அசாதாரணமான தண்ணீர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு மழை நீர் சேகரிப்பு (RWH) திட்டத்தை முன் வைத்தது இவர் தான்.

Presentational grey line

சஞ்சீவ் பட்: கைதியின் மரணத்தால் விதிக்கப்பட்ட தண்டனையும், அதன் பின்னணியும்

சஞ்சீவ் பட்

பட மூலாதாரம், Getty Images

குஜராத்தில் பதவிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட்டுக்கு ஜாம்நகர் அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. போலீஸ் காவலில் விசாரணைக் கைதி ஒருவர் மரணம் அடைந்து 29 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கில் இந்தத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

400 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில், குற்றஞ்சாட்டப்பட்ட ஏழு பேரும் குற்றவாளிகள் என்று கூறப்பட்டுள்ளது. சஞ்சீவ் பட் உள்ளிட்ட இருவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

நீதிமன்ற விசாரணை குறித்து தங்களுக்கு திருப்தி இல்லை என்று சஞ்சீவ் பட்டின் மனைவி ஸ்வேதா பட் தெரிவித்துள்ளார்.

சஞ்சீவ் பட் அல்லது அவருக்கு கீழ் பணியாற்றியவர்களின் காவலில் கலவரம் செய்ததாக கைது செய்யப்பட்ட 133 பேரும் இல்லை என்று அவர் கூறுகிறார்.

பிரபுதாஸ் மாதவி வைஷ்ணனி என்பவர் போலீஸ் காவலில் மரணம் அடைந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஏழு பேரில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது என்றும், காவலில் இருந்த வைஷ்ணனியை துன்புறுத்திய புகார் நிரூபிக்கப்பட்ட ஐந்து பேருக்கு, கொலைக் குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பலனை அவர்களுக்கு அளிக்கும் வகையில் விடுதலை செய்யப்பட்டனர் என்றும் அரசு வழக்கறிஞர் துசார் கோகனி தெரிவித்தார்.

Presentational grey line

தடுப்பூசிகள் குறித்த மக்களின் அச்ச உணர்வு உலகிற்கே அச்சுறுத்தல்

தடுப்பூசி

பட மூலாதாரம், Getty Images

தடுப்பூசிகள் மீதான உலகின் பிற்போக்குத்தனமான செயல்பட்டால், நோய் கிருமிகளின் மூலம் பரப்பப்படும் உயிழப்பை ஏற்படுத்தக் கூடிய நோய்களை தடுக்க வாய்ப்பிருந்தும் முறியடிக்க முடிவதில்லை என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

நோய்த்தடுப்பு ஊசிகள் குறித்த மக்களின் மனப்பான்மையை அறிவதற்காக நடத்தப்பட்ட உலகளவிலான ஆய்வில் பல பிராந்தியங்கள் மிகவும் குறைவான நம்பகத்தன்மையை பதிவு செய்துள்ளன.

உலகிலுள்ள 140க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 1,40,000க்கும் மேற்பட்ட மக்களிடம் இதுகுறித்த ஆராய்ச்சியை வெல்கம் டிரஸ்ட் எனும் அமைப்பு மேற்கொண்டது.

உலகளவில் சுகாதாரத்துறைக்கு இருக்கும் முக்கியமான 10 அச்சுறுத்தல்களாக ஐநாவின் சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ள பட்டியலில், தடுப்பூசியை போட்டுக்கொள்வதில் இருக்கும் தயக்கமும் இடம்பெற்றுள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொள்வது தொடர்பாக உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், மக்கள் சிறிதளவு நம்பிக்கையையே கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Presentational grey line

'அதிக நேரம் அலுவலகத்தில் இருக்காதீர்கள் பக்கவாதம் ஏற்படக்கூடும்'

பணி நேரம்

பட மூலாதாரம், Getty Images

நீண்ட நேரம் பணிபுரிவதற்கும் பக்கவாதம் ஏற்படுவதற்கும் தொடர்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதாவது, ஓராண்டில் குறைந்தது 50 நாட்களுக்கு 10 மணிநேரங்களுக்கு மேலாக வேலை செய்தலே பிரான்சில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் நீண்டநேர வேலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு தசாப்தகாலத்திற்கு மேலாக நீண்ட நேரம் பணிபுரிந்தவர்களுக்கு பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் அதிகமாக இருப்பதாக இந்த ஆராய்ச்சியின் முடிவில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், நீண்டநேரம் பணிபுரிய வேண்டிய கட்டாயத்தின் கீழ் உள்ளவர்கள் தங்களது வேலைநேரத்தின் இடையே உடற்பயிற்சி செய்வது, நல்ல உணவுகளை உண்பது போன்றவற்றை கடைபிடித்தால் பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க வாய்ப்புண்டு என்று பிரிட்டனின் பக்கவாத தடுப்பு அமைப்பு கூறுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :