துருக்கியில் எதிர்க்கட்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து இஸ்தான்புல்லில் மறுதேர்தல் மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், EPA
மார்ச் மாதம் அதிர்ச்சியூட்டும் வகையில் எதிர்க்கட்சி வெற்றிபெற்ற நிலையில், இஸ்தான்புல் மாநகர உள்ளாட்சித் தேர்தலை மீண்டும் நடத்த துருக்கியின் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நடைபெற்ற தேர்தலில் மோசடிகளும், ஊழலும் நடைபெற்றதாக கூறி, சிஹெச்பி என்கிற எதிர்க்கட்சி நூலிழையில் வென்றதை துருக்கி அதிபர் ரிசெப் தையிப் எர்துவானின் ஏகே கட்சி ஏற்றுகொள்ளவில்லை.
"தேர்தலை மீண்டும் நடத்தயிருப்பது, ஏகே கட்சிக்கு எதிராக போட்டியிட்டு வெற்றி பெறுவது சட்டபூர்வமற்றது என்பதை சுட்டிக்காட்டுகிறது" என்று சிஹெச்பி-யின் துணை தலைவர் அனுர்சால் அடிகுசெலர் கூறியுள்ளார்.
துருக்கியின் மிக பெரிய நகரத்தில் மறுதேர்தல் ஜூன் 23ம் தேதி நடைபெறவுள்ளது.
சில தேர்தல் அதிகாரிகள் அரசு ஊழியர்களாக இல்லாமலும், தேர்தல் முடிவின் சில ஆவணங்கள் கையெழுத்திடப்படாமலும் இருந்ததால் மறுதேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையத்திலுள்ள ஏகே கட்சியின் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Reuters
இத்தகைய முடிவு "அப்பட்டமான சர்வாதிகாரம்" என்று அடிகுசெலர் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்த அமைப்பு மக்களின் விருப்பதற்திற்கு எதிராக செயல்படுகிறது என்றும், ஜனநாயக அல்லது நியாயமான சட்டத்தை புறக்கணிப்பதாகவும் அமைகிறது என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
சிஹெச்பி-யின் வேட்பாளரான எக்ரெம் இமாமோக்லு இஸ்தான்புல்லின் மேயராக இருப்பார் என்று அதிகாரிகள் அதிகாரபூர்வமாக ஏப்ரல் மாதம் உறுதி செய்தனர்.
சமூக ஊடகங்களில் ஒளிபரப்பான உரையில், இந்த தேர்தல் ஆணையத்தில் உள்ளவர்கள் ஆளும் கட்சியினரால் தூண்டி விடப்பட்டதாக கூறி, இஸ்தான்புல்லில் மறுதேர்தல் நடத்த தேர்தல் வாரியம் உத்திரவிட்டிருப்பதை அவர் கண்டித்துள்ளார்.

ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்ட பின்னும் அல் - கயீதா வீழவில்லை: எச்சரிக்கும் சர்வதேச உளவு அமைப்புகள்

பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தான் அபோடபாத் நகரத்தில் அமெரிக்க படைகளால் அல் கயீதா அமைப்பின் நிறுவனர் ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டு எட்டு ஆண்டுகள் ஆகிறது.
ஜிகாதி அமைப்புகளிலேயே மிகவும் பயங்கரமான அமைப்பாக அல் கயீதா கருதப்பட்டது. ஆயிரகணக்கான பேர் இந்த அமைப்பில் இணைந்து மேற்குலகிற்கு எதிராக சண்டையிட்டனர். இந்த அமைப்புக்கு வளமான பொருளாதார பின்புலமும் இருந்தது.
ஆனால், அந்த அமைப்பின் தலைவர் ஒசாமா கொல்லப்பட்ட பின் அந்த அமைப்பு வலுவிழந்தது. இதற்கிடையே ஐ.எஸ் அமைப்பும் எழுச்சி பெற்றது.
சரி. இப்போது இந்த அமைப்பின் நிலை என்ன? சர்வதேச பாதுகாப்புக்கு இன்னும் இந்த அமைப்பு அச்சுறுத்தலாக இருக்கிறதா?
செய்தியை வாசிக்க: வீழவில்லை அல் - கயீதா: எச்சரிக்கும் சர்வதேச உளவு அமைப்புகள்

இலங்கை மலையக தமிழர்கள் பகுதியில் தேசிய தவ்ஹித் ஜமாத் முகாம் சுற்றிவளைப்பு

இலங்கையில் இந்திய வம்சாவளி மக்கள் அதிகளவில் வாழும் மலையகத்திலும் தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் செயற்பாடுகள் காணப்பட்டமை தொடர்பில் கண்டறியப்பட்டுள்ளது.
நுவரெலியா - பிளக்பூல் பகுதியில் தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பினால் நடத்திவரப்பட்டதாக கூறப்படும் முகாமொன்றை போலீஸார் திங்கள்கிழமை சுற்றி வளைத்தனர்.
செய்தியை வாசிக்க: இலங்கை மலையக தமிழர்கள் பகுதியில் தேசிய தவ்ஹித் ஜமாத் முகாம்

கர்நாடகாவில் ரயில் தாமதத்தால் நீட் தேர்வு தவறவிட்ட மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்

பட மூலாதாரம், Getty Images
தொடர்வண்டி தாமதமானதால் நீட் தேர்வு எழுத முடியாமல் போன மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமென மனித வள மேம்பாட்டுதுறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் ட்விட்டரில் கூறி உள்ளார்.
தொடர்வண்டி தாமதமானதால் வட கர்நாடகாவை சேர்ந்த 500 மாணவர்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த நீட் தேர்வில் பங்கேற்க முடியாமல் போனது
செய்தியை வாசிக்க: நீட் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு வாய்ப்பு

பிரிட்டன் கோமகள் மெகன் மார்கில் ஆண் குழந்தைக்கு தாயானார்

பட மூலாதாரம், Getty Images
தனது மனைவியான கோமகள் மெகன் மார்கில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் என எலிசபெத் ராணியின் பேரனான இளவரசர் ஹாரி அறிவித்துள்ளார்.
குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறதென்றும், இது தமக்கு பேரனுபவம் என்றும் ஹாரி கூறி உள்ளார்.
செய்தியை வாசிக்க: பிரிட்டன் கோமகள் மெகன் மார்கில் ஆண் குழந்தைக்கு தாயானார்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












