கமலா ஹாரிஸ்: அமெரிக்க அதிபர் வேட்பாளராக முயலும் சென்னை தாயின் மகள்

பட மூலாதாரம், Getty Images
2020-ம் ஆண்டு நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராவதற்கான போட்டியில் குதிப்பதாக அறிவித்துள்ளார் சென்னையைப் பூர்வீகமாக கொண்ட கமலா தேவி ஹாரிஸ்.
2016ல் கலிபோர்னியா மாகாணத்தில் இருந்து செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா, அம் மாகாணத்தின் அட்டர்னி ஜெனரலாக முன்னதாக பதவி வகித்தவர்.
54 வயதாகும் கமலா, அதிபர் டொனால்டு டிரம்பை தீவிரமாக விமர்சிப்பவர். ஜனநாயகக் கட்சிக்குள் வளர்ந்துவரும் நட்சத்திரமாக கூறப்படுகிறவர்.
ஏபிசி தொலைக்காட்சியின் குட்மார்னிங் அமெரிக்கா நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசியபோது தம் நாட்டை நேசிப்பதாகக் கூறினார்.
வரவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக நியமிக்கப்படுவதற்கு போட்டியிடும் எட்டாவது நபர் கமலா. ஜனநாயக கட்சி வேட்பாளராக நியமிக்கப்படுவதற்கு இந்த முறை போட்டி கடுமையாக இருக்கும்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
"அமெரிக்க விழுமியங்களை பாதுகாப்பதற்காக குரல் உயர்த்தும் உங்களைப் போன்ற மில்லியன் கணக்கானவர்களைத்தான் நாட்டின் எதிர்காலம் நம்பியிருக்கிறது. அதற்காகத்தான் அமெரிக்க அதிபர் பதவியை நோக்கிச் செல்லுகிறேன்" என்று டிவிட்டரில் வெளியிட்ட ஒரு காணொளியில் தெரிவித்துள்ளார்.
எலிசபெத் வாரன், கிர்ஸ்டன் கில்லிபேண்ட், துள்சி கப்பார்ட், ஜான் டெலானி, ஜூலியன் கேஸ்ட்ரோ உள்ளிட்டோர் ஜனநாயகக் கட்சி வேட்பாளராவதற்கு போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளனர்.
ஜனநாயக கட்சி வேட்பாளராவதற்கான போட்டியில் கமலாவுடன் சேர்த்து நான்கு பெண்கள் உள்ளனர். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் வேட்பாளர் போட்டியில் ஈடுபடுவது இதுவே முதல் முறை.
ஒருவேளை வேட்பாளராக கமலா தேர்ந்தெடுக்கப்பட்டால், முக்கியக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடும் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த முதல் பெண்ணாக இவர் இருப்பார்.
வாஷிங்டனில் உள்ள ஆப்பிரிக்க அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் தமது பிரசாரத்தைத் தொடக்கிய கமலா, பகுதியளவு அரசுப் பணிகள் முடக்கத்தை நீட்டிப்பதன் மூலம் அதிபர் டிரம்ப் அமெரிக்க மக்களை பிணைக் கைதிகளாக நடத்துவதாக குற்றம்சாட்டினார்.
மிகக்கடுமையாக இருக்கப்போகும் வேட்பாளர் தேர்வுக்கான போட்டியில் தாக்குப்பிடித்து மோதக்கூடியவர் கமலா ஹாரிஸ் என்று கூறும் பிபிசி வட அமெரிக்க செய்தியாளர் அந்தோணி ஜர்ச்சர் அவரது கலிபோர்னியா மாகாணம் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகள் எண்ணிக்கையிலும், நிதிதிரட்டும் வலிமையிலும் செழுமையான மாகாணம் என்று கூறுகிறார்.
தமது கட்சியின் வளர்ந்துவரும் பன்முகத்தன்மையை சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த இவர் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். கலிபோர்னியா மாகாண குற்ற நீதி சீர்திருத்த முயற்சிகளை கமலா ஆதரிக்கவில்லை என்று இவரது விமர்சகர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
யார் இந்த கமலா ஹாரிஸ்?

பட மூலாதாரம், Getty Images
கமலா ஹாரிஸ் இரண்டு முறை (2004 -2011) சான் ஃப்ரான்சிஸ்கோ மாவட்ட அட்டர்னியாக பணிபுரிந்திருக்கிறார். 2011-ம் ஆண்டு கலிஃபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2017-ம் ஆண்டு, கலிஃபோர்னியா ஜூனியர் செனட்டராக பதவியேற்றார்.
அவரது தந்தை ஜமைக்காவிலிருந்தும், தாய் இந்தியாவிலிருந்து வந்தும் குடியேறியவர்கள்.
கமலா ஹாரிஸின் தாய் சென்னையை சேர்ந்தவர்.
அவரது உறவினர்கள் சென்னையில் வசிக்கிறார்கள்.
அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் அந்நாட்டு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவிக்கு பிரெட் கவனாவை பரிந்துரை செய்த போது, அவரை நோக்கி பல கேள்விகளைக் கேட்டவர் கமலா.
கருக்கலைப்பு குறித்து கவனாவின் பார்வை என்னவென்று கேட்டது மற்றும் அமெரிக்க தேர்தலில் ரஷ்ய தலையீடு குறித்து கேள்வி எழுப்பியது என இவரது செயல்பாடுகள் கவனத்தை ஈர்த்தன.
அதே நேரம், இவர் குறித்த சர்ச்சை இல்லாமலும் இல்லை. அவரது உதவியாளர் ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்த போது, அது குறித்து தமக்கு எதுவும் தெரியாதென பதிலளித்தது விமர்சனத்திற்கு உள்ளாகியது.
ஏன் இப்போது?

பட மூலாதாரம், Getty Images
தனது முடிவை அறிவிக்க மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் நாளை கமலா தேர்ந்தெடுத்திருக்கிறார்.
மார்ட்டின் லூதர் கிங் குறித்து குறிப்பிட்டு பேசிய அவர், "லூதரின் லட்சிய தாகம்தான் எனக்கு எப்போதும் ஊக்கமளிப்பதாக இருந்தது" என்றார்.
அதனால் அவர் பெயரில் அனுசரிக்கப்படும் நாளை எனது இந்த முடிவினை அறிவித்தேன் என்கிறார்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












